Wednesday, October 01, 2008

எது தர்மம்?


"தர்மம் செய்வது எல்லா முஸ்லிம்களின் மீதும் கடமையாகும்" என்று இறுதி இறைத்தூதர் பெருமானார் முஹம்மத் நபி(ஸல்) அவர்கள் கூறியபோது மக்கள், "ஒருவருக்கு தர்மம் செய்ய எதுவும் கிடைக்கவில்லை என்றால் என்ன செய்வது?" என்று கேட்டார்கள்.

அதற்கு நபி( ஸல்) அவர்கள், "அவர் தம் இரு கைகளால் (அவர்) உழைத்துத் தாமும் பயனடைவார். தர்மம் செய்(து பிறரையும் பயனடைய செய்)வார்!" என்று கூறினார்கள்.

அதற்கு மக்கள், "அவருக்கு (உழைக்க உடலில்) தெம்பு இல்லையென்றால் அல்லது அவர் அதைச் செய்யா(செய்ய இயலா)விட்டால் (என்ன செய்வது)?" என்று கேட்டனர்.

நபி(ஸல்) அவர்கள் "பாதிக்கப்பட்ட தேவையுடையோருக்கு அவர் உதவட்டும்!" என்றார்கள்.

மக்கள், "(இதையும்) அவர் செய்ய (இயல)வில்லையென்றால்?" என்று கேட்டார்கள்.

நபி(ஸல்) அவர்கள் அப்போது, "அவர் நற்காரியங்கள் செய்யும்படி பிறரை ஏவட்டும்!" என்றார்கள்.

"இதையும் அவர் செய்யாவிட்டால்?" என்று மீண்டும் கேட்டதற்கு, நபி(ஸல்) அவர்கள், "அவர் (பிறருக்கு எதுவும்) தீங்கு செய்யாமல் இருக்கட்டும். அதுவே அவருக்கு தர்மம் ஆகும்" என்றார்கள்.

அறிவிப்பவர் : அபூமூஸா அல் அஷ் அரீ (ரலி), நூல்: புகாரி, ஹதீஸ் எண் 6022.

தர்மம் என்பது, 'பணத்தையும், பொருளையும் கொடுத்து உதவுவது மட்டுமே!' என்று விளங்கி வாழ்ந்து வரும் இன்றைய கால கட்டத்திற்கும் ஏற்ப, ஏறத்தாழ 1420 ஆண்டுகளுக்கும் முன்னர் மனித சமூகத்திற்கு வழி காட்ட அனுப்பப்பட்ட இறுதி இறைத்தூதர் மூலம் அல்லாஹ் மிகவும் அழகான முறையில தர்மத்தின் விளக்கத்தை வழங்கியுள்ளான்.

இந்த நபிமொழி மூலம், சில்லறைகளை எடுத்து வறியவருக்கு இறைத்து விடுவதுதான் தர்மம் என்று பலர் கருதுவது எவ்வளவு தவறான கண்ணோட்டம் என்பதை உணர்த்தி, மக்களது சிந்தனைகளில் இது நாள் வரை இருந்து வந்த தர்மம் குறித்த தவறான கருத்துக்கள் அடங்கிய மூடத்திரைகளை இறைவன் அழகாக அகற்றுகின்றான்.

தர்மம் செய்வது பொருளாதாரத்தின் மூலம் செல்வந்தர்களாக இருப்பவர்கள் மட்டும் செய்யும் காரியமன்று என்பதை இந்நபிமொழி தெளிவாக எடுத்துரைக்கின்றது.

தன்னிடம் எது இருக்கின்றதோ அதனை தேவையுடையவர்களுக்குக் கொடுப்பதும், தன்னிடம் எதுவுமே இல்லை எனில் மற்றவர்களை நன்மைகளை செய்வதற்கு ஏவுவதும் அதற்கும் இயலாதெனில் யாருக்கும் எவ்வித தீங்கும் இழைக்காமல் இருப்பதும் தர்மமே என்று இஸ்லாம் தர்மத்திற்கு விரிவான விளக்கம் அளிக்கின்றது. இதன் மூலம் நன்மைப் பெற்றுத் தரும் எளிய வழிமுறையை இஸ்லாம் மனித சமூகத்திற்கு கற்றுத் தருகிறது.

பெரும்பொருள் படைத்த செல்வந்தர்கள் மட்டுமின்றி தன்னிடம் அடுத்த வேளை உணவுக்குக் கூட வழியில்லாத ஒரு பரம ஏழையும் இவ்வழிகாட்டல் மூலம் தர்மம் செய்து நன்மைகளை இலகுவாகப் பெற முடியும்.

அத்துடன், தர்மம் எனும் பெயரில் மக்களை மானமிழந்து, மதியிழந்து செயல்படும் நிலையிலிருந்து வெளியேற்றி தர்மத்தின் மகத்துவத்தையும், அதே நேரத்தில் உழைப்பின் அவசியம் மற்றும் சிறப்பையும் இந்த நபிமொழி மிகவும் தெளிவாகக் கோடிட்டுக் காட்டுகின்றது.

இதைத் தொடர்ந்து, தேவையுடைய ஒருவருக்கு அவர் தம் பணிகளில், அல்லது அவரது தேவைகளை நிறைவேற்ற உடலாலோ உள்ளத்தாலோ உழைப்பதும் தர்மமாக கணிக்கப்பட்டு அவருக்கும் இதன் மூலம் நற்பலன்கள் பெற இயலும் என்று கூறி ஒரு சுமூகமான, புரிந்துணர்வுடன் கூடிய சமூக ஒற்றுமையைக் கொண்டதொரு வாழ்க்கை முறையை மனித சமூகத்துக்கு அறிமுகப்படுத்துவதையும் அவதானிக்க முடிகின்றது.

மேலும் உடல் ஊனங்களோ, பலவீனங்களோ, முதுமையோ, வறுமையோ ஒருவர் தர்மம் செய்து நன்மைகள் பெற தடையாக நிற்காது என்றும், நல்லதைச் செய்ய தன்னால் இயலவில்லையென்றாலும், பிறரை அதற்காக ஏவுதலும் உபதேசித்தலும் கூட தர்மத்தின் நன்மையைப் பெற்றுத் தரவல்லவை எனும் உன்னதமான நல்வழியை இஸ்லாம் சமூகத்திற்குக் கற்றுத் தருகிறது.

எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாக ஒருவருக்குச் செல்வமோ, உடல் வலிமையோ, ஆற்றலோ, நாவன்மையோ அல்லது இதில் எதுவுமே இல்லையென்றாலும் (சொல்லாலும் செயல்களாலும் உள்ளத்தாலும் பிறருக்கு ஏற்படும்) தீங்குகளிலிருந்து விலகி இருப்பதும் தர்மம் ஆகும் என்று இஸ்லாம் உபதேசிக்கிறது.

"ஒருவருக்குத் தீங்குகள் ஏற்படுத்தாமல் செயல்படுவதும் நன்மையை பெற்றுத் தரும்" எனும் ஓர் உன்னதமான உயரிய சிந்தனையை இந்த இரத்தினச் சுருக்கமான நபிமொழி எடுத்தியம்பி கலாச்சாரச் சீரழிவுகளில் அலைமோதி, மனித நேயமும் ஒழுக்க மாண்புகளையும் மறந்து மனித சமூகத்திற்கெதிராக பல்வேறு அக்கிரமங்கள் புரிந்து வாழ்ந்து மரணிக்கும் மனித சமூகத்திற்குத் தெளிவான வாழ்வியல் நெறியை அக்கறையோடு இந்நபிமொழி நினைவூட்டுகின்றது.

இறுதியாக, நன்மையென்பது அதை செய்பவருக்கு மட்டுமன்றி அது யாருக்கு செய்யப்படுகிறதோ அவருக்கும் நன்மையென்பதுடன், யாருக்கும் நன்மை செய்ய இயலவில்லையெனினும் எந்தத் தீங்கையும் செய்யாமல் இருப்பதே அவருக்கு (தர்மம் செய்த) நன்மையென்று கூறி, ஒவ்வொரு தனி மனிதனையும் ஒட்டு மொத்த சமூகத்துடன் மனித நேயத்துடன் வாழுமாறு இந்த நபிமொழி பிணைத்து விடுகிறது.

இது போன்ற செயல்களின் நற்பலன்கள், மறுமையில் மட்டுமின்றி இம்மை வாழ்க்கைக்கும் பயனுள்ளது என்பதை மக்கள் அனைவரும் உணர முற்பட்டால், உண்மையிலேயே மனிதர்களின் இவ்வுலக வாழ்க்கையின் நிலை மிகவும் சிறப்பானதாக மாறிவிடும். மறுமையில் வெற்றியும் பெற வழி பிறக்கும். எல்லாம் வல்ல (இவ்வுலகின் ஏக இறைவனாகிய) அல்லாஹ் நமக்கு அதற்காக உதவிகள் மற்றும் நல்லருள் புரிய எந்நேரமும் அயராமல் பிராத்திப்போமாக. ஆமீன்.

ஆக்கம்: இப்னு ஹனீஃப்


Sunday, July 13, 2008

'சீரியஸ்' இலக்கியவாதிகளின் சீரழிவு!

மிகவும் வருத்தமாக இருக்கிறது!

தமிழின் நவீன இலக்கியவாதிகள் - 'சீரியஸ்' படைப்பாளிகள் என்றெல்லாம் தங்களைச் சொல்லிக் கொள்பவர்கள் மதுவுக்கு வக்காலத்து வாங்குவதையும், போதையில் மூழ்கித் திளைப்பதையும் பார்க்கும்போது மனம் பெரிதும் சங்கடப்படுகிறது.

மதுவை ஆதரிப்பதும், மதுவில் மூழ்குவதும், மதுவைக் கொண்டாடுவதும், அந்த அருவருப்புகளை அப்படியே இதழ்களில் பதிவு செய்வதும்...

படைப்பாளிகளுக்கு சமுதாய உணர்வு தேவையில்லையா?

தமிழின் மிக நவீன கவிஞர்களில் ஒருவரான மனுஷ்ய புத்திரன் சாராயச் சாவுகள் பற்றி 'உயிர்மை' இதழில் ஒரு தலையங்கம் எழுதியிருக்கிறார். இந்தச் சாவுகளைத் தடுக்க அவர் சொல்லும் பரிந்துரைகள் என்ன தெரியுமா?

கள்ளுக்கடைகளை திறக்க வேண்டும் என்கிறார். மது ஓர் உணவுப் பழக்கம் என்றும், சைவ உணவுக்காரர்களுக்கும் அசைவ உணவுக்காரர்களுக்கும் உள்ள வித்தியாசம் போன்றதே குடிப்பவர்களுக்கும் குடிக்காதவர்களுக்கும் இடையிலான வித்தியாசம் என்றும் கூறுகிறார். இன்னும் ஒரு படி மேலே போய், ஏழை மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் தரமான மதுவை குறைந்த விலையில் அரசே வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.

சரி, இன்னொரு 'சீரியஸ்' படைப்பாளியின் விழாக் காட்சியைப் பார்ப்போம்.

திருக்கடையூரில் நடைபெற்ற விக்ரமாதித்யனின் நூல் வெளியீட்டு விழா குறித்து 'தீராநதி' (மே 2008) இதழில் அ.மார்க்ஸ் எழுதியுள்ளார்:

'...நூல் வெளியீட்டு அரங்கு ஏகப்பட்ட கொண்டாட்டங்களுடனும் கும்மாளங்களுடனும் காட்சியளித்தது. கொஞ்சம் கூட சீரியஸ் இல்லாமல் இப்படி எல்லோரும் அரைமயக்கத்தில் இருப்பதை சுந்தர சுகன் மேடையிலிருந்து கண்டித்துக் கொண்டிருந்தார். ... என்னைக் கட்டித் தழுவிய விக்ரமாதித்யன் அவருக்கு யாரோ பரிசளித்திருந்த ஒரு 'மேன்ஷன் ஹவுஸ்' மதுப் புட்டியை பரிசளித்தார். நன்றியுடன் பெற்று பத்திரமாக மூலையில் வைத்தேன். அன்று மகாசிவராத்திரி, பெரிய வெள்ளி முதலான காரணங்களால் 'கடைகள்' கிடையாதே! ஏற்கனவே மதுப் பஞ்சத்தால் பீடிக்கப் பட்டிருந்த நண்பர்கள் ஒரு சில கணங்களில் அந்தப் புட்டியை 'லபக்'கிக் கொண்டனர். '

அடுத்து, சென்னையில் ஒரு தமிழ்நாவலின் (இந்த நாவலாசிரியரும் தமிழின் 'சீரியஸ்' எழுத்தாளர்தான்) ஆங்கில மொழிபெயர்ப்பு வெளியீட்டு விழா..!

அந்த விழாச் செய்திகளை ஒரு 'சீரியஸ்' இதழில் ஒரு 'சீரியஸ்' எழுத்தாளர் இவ்வாறு பதிவு செய்துள்ளார்:

'எந்த அலுப்பூட்டலும் இல்லாமல் சொற்ப நேரத்தில் வெளியீடு முடிந்தபின் கோலாகலங்கள் தொடங்கின. கைகளில் மதுக்கிண்ணங்களுடன்... இரவு ஒன்பது மணிக்கு மேல் மத்திம போதையுடன் இறங்கி வந்த எனக்கு அடுத்த வாரம் எல்.எல்.ஏ பில்டிங்கில் ஓர் இலக்கிய கூட்டம் இருக்கிறதே என்று நினைவு வந்தது. போதை இறங்கிக் கொண்டிருந்தது.'

குடிப்பதும் குடிக்காமல் இருப்பதும் நவீன இலக்கியவாதிகளின் தனிப்பட்ட உரிமை. அதில் நான் தலையிடவில்லை.

ஆனால் தங்களின் கேடுகெட்ட குடிப்பழக்கத்தை கொஞ்சம் கூட சமூகப் பொறுப்பின்றி இப்படி தூக்கிப் பிடிப்பது என்ன நியாயம்?

இவர்கள்தாம் தமிழின் மிக நவீன, 'சீரியஸ்' இலக்கியப் படைப்பாளிகள் என்பதை எண்ணிப் பார்க்கும்போது...

தலையே சுற்றுகிறது..!


Wednesday, July 09, 2008

இஸ்லாமிய போதனைகள் - 7. நாவைப் பேணுக!

நாவைப் பேணுதல் பற்றி குர்ஆனின் போதனைகள்!

உண்மை பேசுக!


அல்லாஹ், "இது உண்மை பேசுபவர்களுக்கு அவர்களுடைய உண்மை பலனளிக்கும் நாளாகும். கீழே சதா நீரருவிகள் ஒலித்தோடிக் கொண்டிருக்கும் சுவனபதிகள் அவர்களுக்குண்டு, அவற்றில் அவர்கள் என்றென்றும் இருப்பார்கள். 5:119

நேர்மையாக பேசுக!

ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; (எந்நிலையிலும்) நேர்மையான சொல்லையே சொல்லுங்கள்.
அழகானதைப் பேசுக!பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(களான ஏழை)களுக்கும் நன்மை செய்யுங்கள்; மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள். 2:83

கனிவாகப் பேசுக!

உறவினர்களோ, அநாதைகளோ, ஏழைகளோ வந்து விடுவார்களானால் அவர்களுக்கும் அ(ச்சொத்)திலிருந்து வழங்குங்கள்;. மேலும் அவர்களிடம் கனிவான வார்த்தைகளைக் கொண்டே பேசுங்கள். 4:8

நியாயமாகப் பேசுக!

நீங்கள் பேசும்பொழுது அதனால் பாதிக்கப்படுபவர் நெருங்கிய உறவினராக இருந்த போதிலும் - நியாயமே பேசுங்கள். 6:152

அன்பாகப் பேசுக!

அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும், (பிரயாணம், தொழில் போன்றவற்றில்) கூட்டாளிகளாக இருப்போருக்கும், வழிப்போக்கர்களுக்கும், உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபகாரம் செய்யுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோராக, வீண் பெருமை உடையோராக இருப்பவர்களை நேசிப்பதில்லை. 4:36

வீண் பேச்சை தவிர்த்துடுக!

நம் வசனங்களைப் பற்றி வீண் விவாதம் செய்து கொண்டிருப்போரை நீர் கண்டால், அவர்கள் அதைவிட்டு வேறு விஷயங்களில் கவனம் செலுத்தும் வரையில் நீர் அவர்களைப் புறக்கணித்து விடும். 6:68

பொய் பேசாதீர்!

உங்கள் நாவுகள் (சில பிராணிகள் பற்றி) பொய்யாக வர்ணிப்பது போல், இது ஹலாலானது, இது ஹராமானது என்று அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டாதீர்கள் - நிச்சயமாக, எவர் அல்லாஹ்வின் மீது பெய்யை இட்டுக்கட்டுகிறார்களோ அவர்கள் வெற்றியடைய மாட்டார்கள். 16:116

புறம் பேசாதீர்!

உங்களில் சிலர் சிலரைப் பற்றிப் புறம் பேசவேண்டாம். 49:12

ஆதாரமின்றி பேசாதீர்!

யாதோர் ஆதாரமுமின்றி, அல்லாஹ்வின் வசனங்களைப் பற்றித் தர்க்கம் செய்வது, அல்லாஹ்விடத்திலும் ஈமான் கொண்டவர்களிடத்திலும் மிகவும் வெறுக்கப்பட்டதாகும். 40:35

அவதூறு பேசாதீர்!

எவர்கள் முஃமினான ஒழுக்கமுள்ள, பேதை பெண்கள் மீது அவதூறு செய்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக இம்மையிலும், மறுமையிலும் சபிக்கப்பட்டவர்கள்; 24:23


Sunday, June 29, 2008

நம் குடும்பத்தில் ஒரு முஸ்லிம்!

இஸ்லாமை தமது வாழ்க்கை நெறியாக ஏற்க விரும்பும் ஒருவர் முஸ்லிமாக மாறும் வழிமுறை மிக எளிதானது. ஷஹாதா எனப்படும் நம்பிக்கை உறுதிமொழியை மனதால் ஏற்று வாயால் மொழிந்தால் போதும். பிற மதங்களில் இருப்பதுபோல வெற்றுச் சடங்குகள் தேவையில்லை. முஸ்லிமாக ஒருவர் மாறும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள நீங்கள் செல்வீர்களென்றால் வீடியோ கேமராவெல்லாம் எடுத்துச் செல்லத் தேவையிருக்காது. கேமராவின் மூடியை நீங்கள் திறக்குமுன்பே நிகழ்ச்சி முடிந்து விடக்கூடும்!

முஸ்லிமாக மாற விரும்புபவர் மிக எளிமையாக, இரு முஸ்லிம்களின் சாட்சியுடன் ‘வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாரும் இல்லை; முஹம்மது (ஸல்) அவர்கள் இந்த உலகிற்கு இறுதியாக அனுப்பப்பட்ட இறைத்தூதர்’ என்ற உறுதிமொழியை மொழியவேண்டும். அவ்வளவுதான். அதற்குமேல் எந்தச் சடங்குமில்லை.

ஆனால், அந்தப் புதிய முஸ்லிம்களுக்கு ‘ஷஹாதா’ சொல்வது ஒரு புதிய வாழ்க்கை முறையின் துவக்கம்தான். இது ஒரு முன்னுரை மாதிரி. அல்லது அவர்கள் வாழ்வில் ஒரு அத்தியாயம் முடிந்து இன்னொரு அத்தியாயம் துவங்குகிறது என்றும் சொல்லலாம்.

ஒருவகையில் இது அவர்கள் வாழ்வை முழுவதுமாக மாற்றி அமைக்கப்போகும் அனுபவம். கார்களை சுத்திகரிப்புச் செய்வது போல, இது ‘ஆன்மீக சுத்திகரிப்பு’ என்று சொல்லலாம். சுத்திகரிப்புச் செய்யப் பட்ட கார் வழுக்கள் நீக்கப் பட்டுப் பளபளப்பது போல அவர் பாவங்கள் நீக்கப்பட்டு, வாழ்வதன் நோக்கம் தெளிவாகி புதிய மனிதராக வாழ்க்கையைத் தொடர்கிறார். இன்னொரு வகையில் பார்த்தால், அடிப்படையில் அவர் அதே மனிதர்தான். ஒரு ஃபோர்டு கார் சுத்திகரிப்புச் செய்யு முன்னரும் ஃபோர்டு காராகத்தானே இருந்தது?.

சில புதிய முஸ்லிம்களின் குடும்பத்தினருக்கு இதைப் புரிந்து கொள்வதுதான் சிரமமாக இருக்கிறது; உண்மையைச் சொல்வதென்றால், சில புதிய முஸ்லிம்களுக்கும் அப்படித்தான் தோன்றுகிறது. அவர்களில் பெரும்பாலானோர் தொழுகை, நோன்பு போன்ற செயல்களில் ஈடுபடுவதோடு, பெயர், தாடி, ஆடை போன்ற புறத் தோற்ற மாறுதல்களிலும் அவசரம் காட்டுவது வழக்கிலிருக்கிறது.

இந்த மாறுதல்களிலும் தவறேதுமில்லைதான்! இஸ்லாம் சிலவற்றைக் கடமையாக்கியிருக்கிறது. சிலவற்றை முஸ்லிம்களுக்குப் பரிந்துரைத்திருக்கின்றது. ஆனால் பரிந்துரைக்கப்பட்டவற்றையும் செய்தால்தான் ஒருவர் முழு முஸ்லிமாக இருக்க முடியும் என்பதல்ல. சில சமயங்களில் ஒரு புதிய முஸ்லிம் தன் புறத் தோற்றங்களை மாற்றிக் கொள்வதில் காட்டும் அவசரம் அவரது முஸ்லிமல்லாத பிற குடும்ப உறுப்பினர்களுக்குக் குழப்பத்தை உண்டாக்குகிறது. இதனால் அவர்கள் மனம் புண்படவும் வாய்ப்பிருக்கிறது.

“உன் பெயரை ஏன் ஒரு அரேபியப் பெயராக மாற்றிக் கொண்டிருக்கிறாய்? நாங்கள் உனக்கு வைத்த பெயரில் என்ன குறை கண்டு விட்டாய்?”

“ஏன் இப்படி வித்தியாசமான உடைகளை அணியத் தொடங்கி விட்டாய்?”

“முக்காடு அணிய வேண்டியத் தேவை திடீரென்று உனக்கு ஏன் ஏற்பட்டது? நான் பார்க்கும் ஆசிய முஸ்லிம் பெண்களில்கூட பாதிப் பேர் இதை அணிவதில்லையே?”

“இப்படி எல்லா நேரங்களிலும் பள்ளிவாசலே கதி என்று கிடந்தால், உன்னை யாராவது மூளைச் சலவை செய்துவிடுவார்களோ என்று எனக்கு பயமாக இருக்கிறது. என் குடும்பத்தில் ஒரு பயங்கரவாதியைச் சேர்த்து வைத்துக் கொள்ள என்னால் முடியாது”

இப்படியெல்லாம் கேள்விகள் பிறக்கலாம்.

ஒருவகையில் பார்த்தால், இது போன்ற எதிர்வினைகளை எதிர்கொள்வது கூட ஆரோக்கியமானதொரு விஷயம்தான். முஸ்லிமல்லாத குடும்ப உறுப்பினர்கள் இஸ்லாம் பற்றிச் சரியான முறையில் அறிமுகம் செய்விக்கப் படாததால்தான் இந்தக் கேள்விகளைக் கேட்கிறார்கள். புதிய முஸ்லிம் தமது குடும்பத்தினரின் கேள்விகளுக்கு பதில் சொல்வதற்காகவேனும் தாம் புதிதாக ஏற்றுக் கொண்ட கொள்கைகளைத் தொடர்ந்து சீர்தூக்கிப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். கேட்கப்படும் கேள்விகளுக்குத் தகுந்த முறையில் பதில் சொல்ல வேண்டும். இது இரு தரப்பினருக்குமே நன்மை தரக்கூடியதுதான்.

இஸ்லாம் பற்றி இன்றையச் சூழலில் நிலவும் எதிர்மறைப் பிம்பங்களுக்கு காரணம், அதன் கொள்கைகளைப் பற்றி சரியான முறையில் அறியாமல் இருத்தல் அல்லது இனம்புரியாத ஓர் அச்சம்தான். புதிய முஸ்லிம்கள் இந்தச் சூழ்நிலையைச் சாதகமாக்கிக் கொண்டு, இஸ்லாம் பற்றித் தம் குடும்பத்தினருக்குத் தகுந்த முறையில் விளக்கலாம்.

“இல்லை அம்மா! இஸ்லாம் அப்படிப்பட்டதல்ல. நான் இஸ்லாத்தில்தான் இணைந்திருக்கிறேன்; அல்-கொய்தாவில் அல்ல.”

“இஸ்லாம் அமைதியை வலியுறுத்தும் மார்க்கம்; வன்முறையைத் தூண்டும் மார்க்கமல்ல. இஸ்லாமின் பெயரால் அக்கிரமமான காரியங்களில் ஈடுபடுபவர்கள் இம்மார்க்கத்தின் மீது வீண்பழிச்சொல் விழக் காரணமாகிறார்கள்”

“அப்பா..! குர்ஆன், பெண்களை அடிமைப் படுத்துவற்கான கையேடு அல்ல. இந்த உலகில் முதன் முதலாகப் பெண்களுக்கான உரிமைகளையும் கண்ணியத்தையும் பிரகடனப்படுத்திய ஆவணமே அதுதான்!”

இப்படியெல்லாம் இஸ்லாம் பற்றிச் சொல்ல ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன! அதிலும் இந்தக் கருத்துகளை புதிதாக இஸ்லாமை ஏற்றுக் கொண்டவர்கள் உரக்கச் சொல்லும்போது, முஸ்லிமல்லாதவர்களுக்கு அது கூடுதல் தெளிவைக் கொடுக்கலாம். அது மட்டுமல்லாமல், பல்வேறு கலாச்சாரங்களின் தாக்கத்தினால் குர்ஆனின் வழிகாட்டல்களை விட்டு விலகி வாழ்ந்து கொண்டிருக்கும் முஸ்லிம்களுக்கும் அவை நினைவூட்டலாக அமையும்.

இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கும் நான்கு புதிய முஸ்லிம்களும் இஸ்லாமைத் தழுவுவதற்குமுன் இம்மார்க்கத்தைப் பற்றி ஒன்றுமே அறியாதவர்களாகத்தான் இருந்தார்கள். இஸ்லாமைத் தழுவுவது பற்றி தங்கள் குடும்பத்தினரிடம் அவர்கள் தெரிவித்தபோது, சந்தேகப் பார்வைகளையும் அச்ச உணர்வையும் மனக்கசப்புகளையுமே அவர்கள் எதிர்கொள்ள நேரிட்டது.

யுவான் ரிட்லி

ஒரு பத்திரிகையாளரான யுவான் ரிட்லி, செப்டம்பர் 2001 தாக்குதலுக்குப் பிறகு ஒரு முஸ்லிம் பெண் போன்ற வேடத்தில் ஆப்கானிஸ்தானில் நுழைந்து, தான் பணியாற்றிக் கொண்டிருந்த பத்திரிகைக்காகச் செய்திகள் திரட்டிக் கொண்டிருந்தபோது, தாலிபான் படையினரால் பிடிக்கப் பட்டார்.

உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட அவர், ‘தாம் கல்லாலடித்துக் கொல்லப் படுவோமோ’ என்று பயந்து கொண்டிருந்தார். ஆனால், அதற்கு நேர்மாற்றமாக, சிறைப்பிடிக்கப் பட்டிருந்த அவர் மிக மரியாதையாக நடத்தப் பட்டார். குர்ஆனைப் படிக்கப் போவதாகவும் இஸ்லாமைப் பற்றித் தெரிந்து கொள்ளப் போவதாகவும் வாக்களித்த பிறகு அவர் விடுவிக்கப் பட்டார்.

பெண்களை அடக்கி, ஒடுக்கி, துன்புறுத்துவது பற்றிய உபதேசங்கள் இருக்கும் என எதிர்பார்த்துக் குர்ஆனைப் படிக்க ஆரம்பித்த அவருக்கு, அதில் அப்படி எதுவும் இல்லை என்பதே ஆச்சரியத்தை அளித்தது!. “இது பெண்ணுரிமைக்கான பிரகடனம்” என்று வியக்கிறார் யுவான் ரிட்லி.

2003-ல் யுவான் இஸ்லாமைத் தழுவினார். இஸ்லாம் அவருக்கு அளித்த தன்னம்பிக்கையும் கவுரவமும் பிரச்னைகள் நிரம்பியிருந்த அவரது கடந்த கால வாழ்க்கையை மறக்கடிக்கச் செய்தது. ஆனால் அவரது மனமாற்றத்தைப் பற்றி அவரது தாயை மட்டும் இன்னும் அவரால் புரிந்து கொள்ளச் செய்ய முடியவில்லை.

ஜான் ஸ்டாண்டிங்

ஜான், தனது முஸ்லிம் பெண் தோழி நசிராவை இஸ்லாமிலிருந்து வெளியேற்ற முயன்றார். நசிரா தனது நம்பிக்கையில் உறுதியாக இருப்பது தெரிந்த பிறகே, குர்ஆனைத் தானே படித்துப் புரிந்து கொள்ள ஜான் முடிவு செய்தார். சில மாதங்களுக்குள்ளாகவே அவர் இஸ்லாமைத் தழுவினார்.

அவர் முஸ்லிமாக ஆனதிலிருந்து மிக அமைதியான, கனிவான மனிதராக இருக்கிறார் என ஜானின் தந்தை டோனி ஒப்புக் கொள்கிறார். இருந்தாலும், ஜான் மூளைச் சலவை செய்யப் பட்டிருப்பாரோ எனத் தனக்கு இன்னும் ஐயம் இருப்பதாகவும் அவர் சொன்னார். ஜான் ஏதாவது வன்முறை தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுகிறார் எனத் தெரிந்தால் அவரை தமது குடும்பத்தை விட்டும் விலக்கிவிடுவதாகவும் அவரது தந்தை எச்சரித்திருக்கிறார். அவர் அப்படி எதையும் செய்துவிட மாட்டார் என்ற நம்பிக்கையும் அவரது குடும்பத்தினருக்கு இருக்கிறது.

ஜான் ஏன் தனது பெயரை ஜமாலுத்தீன் என மாற்றிக் கொள்ள வேண்டும்? நல்ல எதிர்காலமுள்ள இசைக்கலை தொடர்பான தொழிலை ஏன் அவர் கைவிட வேண்டும்? (இஸ்லாம் இசையைத் தடை செய்திருக்கிறது என்பது ஜானின் நம்பிக்கை). மேலும், ஒரு இஸ்லாமிய நாட்டிற்குக் குடிபெயர்வது பற்றி அவர் ஏன் யோசிக்க வேண்டும்? என்பதெல்லாம் ஜானின் தந்தைக்கு இன்னும் புரியாத புதிர்தான்.

இஸ்லாம் உண்மையில் இது போன்ற மாற்றங்களை கட்டாயமாக்கியிருக்கிறதா?

அகீல் பர்ட்டன்

அகீல், ஜமைக்காவைச் சேர்ந்த தன் கிருஸ்துவப் பெற்றோருடன் மான்செஸ்டர் நகரில் வளர்ந்தவர். தமது பெற்றோர் பின்பற்றிய கிருஸ்துவ மதம் அகீலுக்குப் பிடிக்கவில்லை. அது வெள்ளை இனத்தவருக்கான மதம் என்று அகீலுக்குத் தோன்றியது. இஸ்லாம் இதிலிருந்து மாறுபட்டது என்றும் அவருக்குத் தோன்றவில்லை. பள்ளிப் பருவத்தில் அவர் அறிந்திருந்த முஸ்லிம்களெல்லாம் ஆசிய நாடுகளிலிருந்து வந்தவர்கள். ஆனால், அவரைப் போன்றே ஜமைக்காவைச் சேர்ந்த ஒரு நண்பர் முஸ்லிமானது, அகீலுக்கும் இஸ்லாம் மீது ஆர்வம் ஏற்படக் காரணமான அமைந்தது. அவர் குர்ஆனைப் படிக்க ஆரம்பித்தார். பதில் கிடைக்காமல் அவரது மனதில் சுழன்று கொண்டிருந்த கேள்விகளுக்கெல்லாம் இஸ்லாமில் பதில் இருக்கிறது என்பதை அவர் கண்டு கொண்டார்.

ஒரு தொழில்முறை குத்துச்சண்டை வீரராக இருந்த அகீல், முஸ்லிமாக ஆனதிலிருந்து சண்டையிடுவதை நிறுத்திவிட்டு ஒரு பயிற்சியாளராகத் தொடர்கிறார். குத்துச்சண்டைக்காக அவர் பெற்ற கட்டுப்பாடு மற்றும் ஒழுங்குமுறைப் பயிற்சிகள், தமது புதிய இஸ்லாமிய வாழ்க்கைமுறையைக் கடைப்பிடிப்பதற்கும் துணைபுரிவதாக அகீல் உணர்கிறார்.

ஷஹ்நாஸ் மாலிக்

வெள்ளை இனக் குடும்பம் ஒன்றைச் சார்ந்த ஷஹ்நாஸ் அவரது ஆசிய ஆண் நண்பர் நசீரைத் திருமணம் முடித்தபோது இஸ்லாமைத் தழுவினார். அப்பொழுதெல்லாம் வெறும் பெயரளவில் மட்டும் முஸ்லிமாக இருந்த நசீரை கடந்த ஆறு ஆண்டுகளில் ஷஹ்நாஸ்தான் மார்க்கத்தில் பிடிப்புள்ளவராக மாற்றினார். முதலில் ஷஹ்நாஸ் ஹிஜாப் அணியத் தொடங்கினார். அதன் பிறகு சில ஆண்டுகள் கழித்து, நசீரின் தூண்டுதல் எதுவுமின்றியே முழு புர்கா அணிய ஆரம்பித்தார்.

உறவினர்கள், நண்பர்கள் சிலரின் கிண்டலும் கேலியும் ஷஹ்நாஸை தைரியமிழக்கச் செய்யவில்லை. மாறாக, அழகிப் போட்டியில் பங்கு கொள்வது போன்று ஆடை அணியும் மேற்கத்தியக் கலாச்சாரத்திலிருந்து விடுதலை பெற்றதாகவே அவர் உணர்கிறார்.

இந்த நான்கு புதிய முஸ்லிம்களும் வெவ்வேறு வழிகளில் தங்களது மனமாற்றத்திற்கு முந்தைய மேற்கத்திய கலாச்சார வாழ்க்கை முறைகளிலிருந்து இஸ்லாம் காட்டும் வாழ்க்கை நெறிமுறைகளுக்கு மாறியவர்களாவர். வழிமுறைகள் வேறாக இருந்தாலும், ‘மாற வேண்டும்’ என்ற உறுதி இவர்கள் அனைவரிடமும் இருக்கிறது. மாற்றங்களைத் தேடும் இவர்களின் வாழ்க்கைப் பயணத்தை உற்று நோக்கினால் அதில் இஸ்லாமிற்கும் மேற்கத்தியக் கலாச்சாரத்திற்கும் இடையிலான ஒரு தொடர்புப் பாலத்தை ஒருவேளை நாம் காணக்கூடும்.

மூலம்: http://news.bbc.co.uk/1/hi/programmes/3663771.stm

தமிழில் : இப்னு பஷீர்

Sunday, June 22, 2008

இஸ்லாமிய போதனைகள் - 6. இலஞ்சம் கொடுக்காதீர்!

மக்களுக்கு மத்தியில் தீர்ப்பு வழங்கும் நீதிபதிகளுக்கும் வழக்கறிஞர்களுக்கும் சத்தியத்தை மறைக்க, அசத்தியத்தை நிலை நாட்ட லஞ்சம் கொடுப்பது பெருங்குற்றமாகும். ஏனெனில் நிச்சயமாக இது தவறான தீர்ப்புக் கூறவும், நிரபராதிக்கு அநீதமிழைப்பதற்கும், சமுதாயத்தில் குழப்பம் ஏற்படுவதற்கும் காரணமாகிவிடும்.

அல்லாஹ் கூறுகிறான்:மேலும் உங்களுடைய செல்வங்களை உங்களுக்கடையில் உரிமையின்றி உண்ணாதீர்கள். நீங்கள் அறிந்து கொண்டே (பிற) மனிதர்களின் செல்வங்களிலிருந்து ஒரு பகுதியை பாவமான முறையில் நீங்கள் உண்ணுவதற்காக அவற்றை (இலஞ்சமாகக் கொடுக்க) அதிகாரிகளின்பால் கொண்டும் செல்லாதீர்கள். (அல்குர்ஆன் 2:188)

நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்: தீர்ப்புக்காக லஞ்சம் கொடுப்பவனையும் லஞ்சம் வாங்குபவனையும் அல்லாஹ் சபிப்பானாக! (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: அஹமத்)

சத்தியத்தை நிலைநாட்டுவதற்கும் அநீதியை தடுப்பதற்கும் லஞ்சத்தைத் தவிர வேறு மாற்றுவழியில்லையெனில் அதற்காக லஞ்சம் கொடுப்பது மேற்கூறிய இலஞ்ச எச்சரிக்கையில் இடம்பெறாது.

இக்காலத்தில் லஞ்சம் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கிறது. சில ஊழியர்களுக்கு அவர்களின் சம்பளத்தைவிட லஞ்ச வரவே அதிகம். பல நிறுவனங்களில் லஞ்சக் கவர்கள் சகஜமாக நடமாடுகின்றன. பல வேலைகள் ஆரம்பம் முதல் இறுதி வரை லஞ்சமின்றி சாத்தியமற்றதாகிவிட்டன. இதனால் வசதியற்றோர் பெரும் கஷ்டத்திற்குள்ளாகியுள்ளனர். இது பல ஒப்பந்தங்களை மீறுவதற்கும், ஊழியர்கள் நிறுவனப் பொறுப்பாளர்களை பெருங்குழப்பத்தில் ஆழ்த்தவும் காரணமாகிறது.

லஞ்சம் கொடுக்கவில்லை எனில் தரமான வேலை நடைபெறுவதில்லை. அல்லது தாமதப்படுத்தப்படுகிறது. லஞ்சத்தின் காரணமாக தொழில் நிறுவனங்களில் விற்க, வாங்க பொறுப்பேற்றுள்ள பிரதிநிதிகளின் பைகளில் பொருளாதாரம் நுழைந்து விடுகிறது. இதுபோன்ற தீயவிளைவுகளின் காரணங்களினால் தான் நபி(ஸல்) அவர்கள் இத்தவறுக்கு உடன்படும் இரு தரப்பினருக்கும் பாதகமாக பிரார்த்தித்தார்கள்.

நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்: லஞ்சம் கொடுப்பவன் மீதும் வாங்குபவன் மீதும் அல்லாஹ்வுடைய சாபம் உண்டாகட்டுமாக! (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர்(ரலி) நூல்: இப்னுமாஜா)

Thursday, June 19, 2008

இஸ்லாமிய போதனைகள் - 5. குர்ஆனில் பத்து கட்டளைகள்!

திருமறை வசனங்கள் 6:151-152 கீழ்க்கண்ட பத்து கட்டளைகளை அறிவிக்கின்றது:

"வாருங்கள்! உங்கள் இறைவன் உங்களுக்குத் தடைசெய்தவற்றைக் கூறுகிறேன்’ என்று (முஹம்மதே) கூறுவீராக! அவை:-

1. அல்லாஹ்வுக்கு எதையும் இணை வைக்கக் கூடாது.

2. பெற்றோருக்கு உதவுங்கள்.

3. வறுமையின் காரணமாக உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள். உங்களுக்கும், அவர்களுக்கும் நாமே உணவளிக்கிறோம்.

4. வெட்கக்கேடான காரியங்களில் வெளிப்படையானதையும், இரகசியமானதையும் நெருங்காதீர்கள்.

5. அல்லாஹ் தடைசெய்துள்ள எவரையும் உரிமையிருந்தாலே தவிர கொல்லாதீர்கள். நீங்கள் புரிந்து கொள்வதற்காக இதையே உங்களுக்கு உபதேசம் செய்கிறான். (6:151)

6. அநாதையின் செல்வத்தை அவன் பருவமடையும் வரை நியாயமான முறையிலே அன்றி (அனுபவிக்க) நெருங்காதீர்கள்.

7. அளவையும், நிறுவையையும், நேர்மையாக நிறைவேற்றுங்கள்.

8. எவரையும் அவரது சக்திக்கு மேல் நாம் சிரமப்படுத்துவதில்லை.

9. உறவினராகவே இருந்தாலும் பேசும்போது நீதியையே பேசுங்கள்.

10. அல்லாஹ்வின் ஒப்பந்தங்களை நிறைவேற்றுங்கள். (6:152)

இதுவே எனது நேரான வழியாகும். எனவே இதனையே பின்பற்றுங்கள். பலவழிகளைப் பின்பற்றாதீர்கள். அவை அவனது (ஒரே) வழியை விட்டும் உங்களைப் பிரித்துவிடும். நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக இதையே அவன் உங்களுக்கு உபதேசிக்கிறான்"

நன்றி: அல்பாக்கவி.காம்

Wednesday, June 18, 2008

இஸ்லாமிய போதனைகள் - 4. கோபத்தை கட்டுப்படுத்துபவனே சிறந்த வீரன்!

"(பயபக்தியுடையவர்கள்) கோபத்தை அடக்கிக்கொள்வார்கள். மனிதர்(கள் செய்யும் தவறு)களை மன்னிப்பார்கள்." (அல்குர்ஆன் 3 : 134)


நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து 'எனக்கு உபதேசம் செய்யுங்கள்' என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் 'கோபம் கொள்ளாதே!' எனக் கூறினார்கள். மீண்டும் அந்த மனிதர் 'உபதேசம் செய்யுங்கள்' எனக்கூறவே, மீண்டும் 'கோபம் கொள்ளாதே' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) - நூல் : புகாரி)


"கோபத்தின் போது தன்னை கட்டுப்படுத்திக் கொள்பவனே சிறந்த வீரன் ஆவான்" என நபி ( ஸல் ) அவர்கள் அருளினார்கள். (அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) - நூல்கள் : புகாரி , முஸ்லிம்)


பொதுவாகவே ஷைத்தான் மனிதனை ஆக்ரமிப்பதற்கு முதல்படியே அவனது கோபத்தைத் தூண்டி விடுவதுதான். தேவையில்லாத, உப்புப்பெறாத விஷயத்திற்கெல்லாம் ஒருவர் கோபப்பட்டால் அவரிடம் ஷைத்தான் குடி கொண்டிருக்கிறான் என்பதை தெளிவாக தெரிந்து கொள்ளலாம். எதிரில் யார் இருக்கிறார் என்று கூடத் தெரியாத அளவுக்கு பேசித் தீர்த்து விடுவார். சிலவேளை ஏச்சுப் பேச்சுக்களையும் மீறி சட்டை கையை மடக்கி முழங்கைக்கு மேல் உயர்த்திக் கொண்டு பாய்வதற்கும் தயாராகி விடுவார். பின்விளைவுகளைப் பற்றிக்கூட யோசிப்பதில்லை. கோபம் கொண்ட அந்த வினாடியில் அவரது சிந்தனைத்திறன் செயலிழந்து விடுகிறது.


மேலும் ஒருவன் தன்னை வீரன் என்று காட்டுவதற்காகவும் கோபத்தைக் காட்டுவான். 'அவர் பெரிய கோபக்காரர். அவருக்கு கோபம் வந்தால் அவரை யாராலும் கட்டுப்படுத்தவே முடியாது' என்றெல்லாம் கோபம் கொள்பவர்களை சிலாகித்து ஒரு சிலர் கூறி அவரை வாழ்நாள் முழுவதும் கோபக்காரராக்கி விடுவார்கள். அதற்கு தகுற்தாற் போல் அவரும் தன்னை ஆக்கிக்கொள்வார். தேவையில்லாததற்கெல்லாம் கோபப்படுவார். இவருக்கு சமுதாயம் 'வீரன்', 'தைரியசாலி' என்றெல்லாம் பட்டம் சூட்டி விடும்!


கோபம் மனிதனுக்கு தேவை தான்! ஆனால் அதை சூழ்நிலைக்கேற்ப பயன்படுத்த வேண்டும். அதைக் கட்டுப்படுத்த வேண்டிய நேரத்தில் கட்டுப்படுத்தவும் பழகிக் கொள்ள வேண்டும். நமது கோபம் நம்மையே மிகைத்துவிட அனுமதிக்கக் கூடாது!