Thursday, May 29, 2008

23 முறை கேட்ட கேள்வி!

வசதியான வீடு ஒன்றின் வரவேற்பறை அது! 80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சன்னலுக்கருகில் சாய்வு நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். மூதாட்டியான அவரது மனைவி அவருக்கருகில் அமர்ந்து தனது இடுங்கியக் கண்களால் திருமறையை ஓதிக் கொண்டிருக்கிறார். நன்கு படித்து, பெரிய பதவியில் இருக்கும் 45 வயதுடைய அவர்களின் மகனும் தனது லேப்-டாப்பில் ஏதோ வேலை செய்துக் கொண்டிருக்கிறார்.

திடீரென ஒரு காகம் முதியவரின் அருகிலிருந்த சன்னலில் வந்து அமர்ந்தது.

“என்ன இது?” என்று கேட்டார் முதியவர்.

லேப்-டாப்பிலிருந்து கண்களை விளக்கிய மகன் சொன்னார், “அது ஒரு காகம்”

சில நிமிடங்கள் கழிந்தன. அந்த முதியவர் மீண்டும் கேட்டார், “என்ன இது?”

“இப்பத்தானே சொன்னேன், அது ஒரு காகம்” என்றார் மகன்.

சிறிது நேரம் கழித்து மூன்றாம் முறையாக அந்த முதியவர் தன் மகனிடம் கேட்டார், “என்ன இது?”

சற்று எரிச்சலான குரலில் மகன் பதிலளித்தார், “அது ஒரு காகம், காகம்!”

இன்னும் சிறிது நேரம் கழித்து அந்தத் தந்தை நான்காவது முறையாக அதே கேள்வியைக் கேட்டார், “என்ன இது?”

மகனோ பொறுமையை இழந்து விட்டார். தனது தந்தையைப் பார்த்து அவர் கத்தினார், “அதே கேள்வியை ஏன் திரும்பத் திரும்ப கேட்டுட்டே இருக்கீங்க? எத்தனை முறைதான் பதில் சொல்வது, ‘அது ஒரு காகம்’ என்று? இதைக்கூட உங்களால புரிஞ்சுக்க முடியலையா?”

முதுமை அடைந்து விட்டதால் மீண்டும் சிறு குழந்தை போல ஆனதாலோ என்னவோ, தந்தையின் முகத்தில் எந்தவித உணர்ச்சிகளும் தென்படவில்லை. அவருக்கருகில் அமர்ந்து அமைதியாகக் குர்ஆனை ஓதிக்கொண்டிருந்த அவரது மனைவி எழுந்து தமது அறைக்குச் சென்று திரும்பினார். அவரது கையில் மிகப் பழைய நாட்குறிப்பு ஒன்று இருந்தது.

அது அந்தத் தந்தையின் நாட்குறிப்பு. தன் மகன் பிறந்ததிலிருந்து அவர் அதில் எழுதி வந்தார். அதில் ஒரு பக்கத்தைத் திறந்தத் தாய் அதைத் தன் மகனிடம் கொடுத்து படிக்கச் சொன்னார்.

அந்தப் பக்கத்தில் இவ்வாறு எழுதப் பட்டிருந்தது;
“எனது சின்னஞ்சிறு மகன் என்னுடன் உட்கார்ந்திருக்கும்போது சன்னலில் ஒரு காகம் வந்தமர்ந்தது. என் மகன் ‘அது என்ன’ என்று 23 தடவைகள் கேட்டான். ‘அது ஒரு காகம்’ என்று நான் 23 தடவைகளும் பதில் சொன்னேன். அவன் ஒவ்வொரு முறை அந்தக் கேள்வியை கேட்டபோதும் நான் அவனை பாசத்துடன் அணைத்துக் கொண்டேன். அவன் திரும்பத் திரும்பக் கேட்ட அதே கேள்வி என்னை எரிச்சலடையச் செய்யவில்லை. அதற்கு மாறாக, கள்ளங்கபடமற்ற அச்சிறு குழந்தையின் மீது எனக்கு பிரியம்தான் அதிகமானது”.

இதைப் படித்த மகனின் கண்கள் பனித்து விட்டன. 23 தடவை அதே கேள்வியை கேட்டபோதும் தன் மீது பாசமழை பொழிந்த தன் தந்தை மீது எரிச்சலடைந்ததற்காக அவரது மனம் வருந்தியது.

திருமறை குர்ஆனின் கீழ்க்கண்ட போதனைகளும் அவரது நினைவுக்கு வந்தன.

(நபியே!) உமதிறைவன் தன்னைத்தவிர (மற்றெவரையும்) வணங்கக் கூடாதென்றும் (கட்டளையிட்டிருப்பதுடன்) தாய், தந்தைக்கு நன்றி செய்யும்படியாகவும் கட்டளையிட்டிருக்கிறான். அவர்களில் ஒருவரோ, அல்லது இருவருமோ முதுமையை அடைந்துவிட்ட போதிலும் உம்மிடமிருந்து அவர்களை வெருட்டவும் வேண்டாம், அவர்களை (நிந்தனையாக)ச் ‘சீ’ என்று சொல்லவும் வேண்டாம். அவர்களிடம் (எதைக் கூறியபோதிலும் புஜம் தாழ்த்தி) மிக்க மரியாதையாக(வும் அன்பாக)வுமே பேசும்.

அவர்களுக்கு மிக்க அன்புடன் பணிந்து நடப்பீராக! அன்றி, என்இறைவனே! நான் குழந்தையாக இருந்தபோது (மிக்க அன்பாக) என்னை அவர்கள் வளர்த்து, பரிபாலித்த பிரகாரமே, நீயும் அவ்விருவர் மீதும், அன்பும் அருளும் புரிவாயாக! என்றும் நீர் பிரார்த்திப்பீராக! (அல்குர்அன் 17:23,24)

தமது பெற்றோருக்கு நன்மை செய்யுமாறு மனிதனுக்கு நாம் உபதேசித்தோம். அவனுடைய தாய் அவனைச் சிரமத்துடன் (கர்ப்பத்தில்) சுமந்திருந்து, சிரமத்துடனே அவனை ஈன்றெடுத்தாள். அவனை (கர்ப்பத்தில்) சுமந்திருந்ததும், அவனுக்குப் பால் குடியை மறக்கடித்ததும் முப்பது மாதங்களாகும்.

முடிவில் அவன் தனது வாலிபத்தை அடைந்து, நாற்பது ஆண்டுகளை அவன் அடைந்திட்ட பொழுது, “என்னுடைய ரப்பே! நீ எனக்கும், எனது பெற்றோருக்கும் அருளிய உனது அருட்கொடைக்கு நான் நன்றி செலுத்துவதற்கும், நீ எதனைப் பொருந்திக் கொள்வாயோ அத்தகைய நற்செயல்களை நான் செய்வதற்கும், எனக்கு உள்ளுணர்வை உதிப்பாக்குவாயாக! என் சந்ததியினரை எனக்கு நல்லிணக்கமாக்கி வைப்பாயாக! நிச்சயமாக நான் உன் பக்கமே (தவ்பாச் செய்து) மீண்டு விட்டேன். நிச்சயமாக நான் (உனக்கு வழிப்படுகின்ற) முஸ்லிம்களில் உள்ளவனாக இருக்கின்றேன்” என்று அவன் கூறுகின்றான். (அல் குர்ஆன் 46:15)

நன்றி: இஸ்லாம்கல்வி.காம்

Tuesday, May 27, 2008

இறைத்தூதர் அவர்களின் இறுதிப் பேருரை!

இதற்கு முன் என்றுமே இருந்திராத அளவிற்கு மாபெரும் கூட்டத்தால் அன்று சங்கைமிகு மக்காவின் புனித பள்ளிவாசல் நிரம்பி வழிந்தது. அங்கு கூடியிருந்தோரின் உள்ளச்சமும் வணக்க வழிபாடுகளும் அவர்களின் ஆன்மிக உணர்வுகள் முழுமை அடைந்திருந்ததை வெளிப்படுத்திக் கொண்டிருந்தன.

அதுதான் ஹிஜ்ரி 10-ஆம் ஆண்டு ஹஜ் கடமையை நிறைவேற்ற கூடியிருந்த மாபெரும் கூட்டத்தின் எதார்த்த நிலையாகும். அரபுலகம் முழுவதிலுமிருந்து சுமார் ஒரு இலட்சத்து இருபதாயிரத்திற்கும் அதிகமானவர்கள் அங்கே குழுமியிருந்தார்கள். அதுவும் ஒரு மகத்தான வணக்கத்தை, மகத்தான இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுடன் சேர்ந்து நிறைவேற்றுகிற மன மகிழ்ச்சியில் திளைத்திருந்தார்கள்.

இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் அங்கு வந்திருந்த அனைவரையும் துல்ஹஜ் பிறை எட்டின் நடுப்பகலுக்குப் பிறகு மக்காவிலிருந்து 'மினா'விற்கு அழைத்துச் சென்றார்கள். அங்கு ளுஹர், அஸ்ர், மக்ரிப், இஷா, ஸுப்ஹு ஆகிய தொழுகைகளை முடித்துவிட்டு சூரிய உதயத்திற்குப் பின், தோழர்களுடன் அரஃபா நோக்கிப் புறப்பட்டார்கள். அங்கு நமிரா பள்ளத்தாக்கில் நபியவர்களுக்காக கூடாரம் அமைக்கப்பட்டிருந்தது. அதில் சூரியன் உச்சி பொழுதைக் கடக்கும் வரை தங்கி இருந்தார்கள். அதன் பிறகு தமது 'கஸ்வா' ஒட்டகத்தைத் தயார் படுத்தக் கூறி, அதில் பயணித்து, 'பத்னுல்வாதி' எனும் பகுதிக்கு வந்தார்கள்.

அமைதி காத்த நிலையில் அந்த மக்கள் நபி (ஸல்) அவர்களைப் பார்த்தபடி நிற்க, அதே இடத்தில் தமது ஒட்டகத்தின் மீதமர்ந்தபடி நபியவர்கள் ஒரு சொற்பொழிவு ஆற்றினார்கள்.

நபி(ஸல்) அவர்கள் அப்போது ஆற்றிய அந்த உரையே "நபியவர்களின் இறுதிப் பேருரை" என்பதாக இன்று அறியப்படுகிறது.

கூட்டம் பிரமாண்டமாக இருந்ததால், நபி (ஸல்) அவர்களின் சொற்பொழிவு அனைவரின் செவிகளுக்கும் சென்றடைவது சாத்தியமில்லை என்ற நிலை உருவானது. எனவே, அங்கிருந்தோரிலேயே மிக உரத்த குரல் கொண்டிருந்த ரபீ இப்னு உமய்யா இப்னு கலஃபை அழைத்து, தமது பேச்சை எல்லோரும் செவியுறும் விதமாக ஒவ்வொரு வாக்கியமாய் திரும்பச் சொல்லுமாறு பணித்தார்கள். (அல் பிதாயா இப்னு கஸீர் 5/189)

தொடக்க துதி மொழிகள்
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! அவனையே நாம் புகழ்கிறோம்; அவனிடமே நாம் உதவி தேடுகிறோம். நம்முடைய மன இச்சைகளின் கெடுதிகளை விட்டும், நம்முடைய செயல்களின் தீமைகளை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகிறோம். யாருக்கு அல்லாஹ் நேர்வழி காட்டுவானோ, அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. யாரை அல்லாஹ் வழிகேட்டில் விட்டுவிடுவானோ, அவரை நேர்வழியில் செலுத்துபவர் யாரும் இல்லை. இன்னும், நான் சாட்சி சொல்கிறேன்: "அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாரும் இல்லை. அவன் தனித்தவன்; அவனுக்குக் கூட்டாளி யாரும் இல்லை.' மேலும், நான் சாட்சி சொல்கிறேன்: "நிச்சயமாக முஹம்மது, அவனுடைய அடியாரும் அவனுடைய தூதரும் ஆவார்.' (ஸுனன் இப்னு மாஜா 1892,1893)

பிரிவின் முன்னறிவிப்பு
ஒ... மக்களே! என் பேச்சை கவனமாகக் கேளுங்கள்! இந்த ஆண்டிற்குப் பிறகு மீண்டும் இந்த இடத்தில் சந்திப்பேனா என்பது எனக்குத் தெரியாது (தாரீக் இப்னு கல்தூன் 2/58, இப்னு ஹிஷாம் 2/603, அர்ரஹீக் அல்மக்தூம் 461)

பிறப்பால் உயர்வு தாழ்வு காட்டாதீர்!
மக்களே! உங்களது இறைவன் ஒருவனே; (உங்களது தந்தையும் ஒருவரே!) அறிந்து கொள்ளுங்கள்: எந்த ஒர் அரபிக்கும் ஒர் அரபி அல்லாதவரை விடவோ, எந்த ஒர் அரபி அல்லாதவருக்கும் ஒர் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. எந்த ஒரு வெள்ளையருக்கும் ஒரு கருப்பரை விடவோ, எந்த கருப்பருக்கும் ஒரு வெள்ளையரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. இறையச்சம் மட்டுமே ஒருவரின் மேன்மையை நிர்ணயிக்கும். நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிகச் சிறந்தவர் உங்களில் அதிகம் இறை அச்சம் உள்ளவர்தான். (அஸ்ஸில்ஸலதுல் ஸஹீஹா2700, அத்தர்கீப் வத்தர்ஹீப், அல்பைஹகீ, தஹாவி)

தலைமைக்குக் கீழ்ப்படிவீர்!
ஒ... மக்களே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் கருப்பு நிற (அபிசீனிய) அடிமை ஒருவர் உங்களுக்குத் தலைவராக ஆக்கப்பட்டாலும் அவர் அல்லாஹ்வின் வேதத்தைக் கொண்டு உங்களை வழி நடத்தி அதை உங்களுக்கிடையில் நிலைநிறுத்தும் காலமெல்லாம் (அவரது சொல்லைக்) கேட்டு நடங்கள்; (அவருக்குக்) கீழ்ப்படியுங்கள்! (ஸுனன் நஸாயி 4192, ஜாமிவுத் திர்மிதி1706)

பிறர் உடமையைப் பேணுவீர்!
ஒ... மக்களே! இந்த (துல்ஹஜ்) மாதமும், இந்த (துல்ஹஜ் 9ம்) நாளும், இந்த (மக்கா) நகரமும் எவ்வளவு புனிதமானவையோ, அப்படியே உயிர்களும், உங்கள் உடமைகளும் உங்கள் மானம் மரியாதைகளும் உங்களுக்குப் புனிதமானவை.

அராஜகம் செய்யாதீர்கள்!
அறிந்து கொள்ளுங்கள்! எனக்குப் பிறகு ஒருவர் மற்றவரின் கழுத்தை வெட்டி மாய்த்துக் கொள்ளும் வழிகெட்டவர்களாய் இறை நிராகரிப்பாளர்களாய் மாறி விடாதீர்கள். (ஸஹீஹுல் புகாரி 4403)

உங்களது இறைவனை நீங்கள் சந்திக்கும் வரை (இப்படியே வாழுங்கள்!) நீங்கள் அனைவரும் தவறாமல் அல்லாஹ்வின் முன்னிலையில் ஆஜராகப் போகிறீர்கள்! அப்போது அல்லாஹ் உங்களது செயல்களைப் பற்றி விசாரிப்பான்.

நான் மார்க்கத்தை உங்களுக்கு எடுத்துரைத்து விட்டேன். உங்களில் எவராவது மற்றவருடைய பொருளின் மீது பொறுப்பேற்றிருந்தால், அதை அவர் உரிய முறையில் அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்து விடட்டும்! (ஸஹீஹ் முஸ்லிம் 2334, ஸஹீஹுல் புகாரி 67, 105, 1741, 1742)

பணியாளர்களைப் பேணுவீர்!
ஒ..மக்களே! முஸ்லிம்கள் அனைவரும் சகோதரர்கள். உங்கள் அடிமைகள் விஷயத்தில் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ளுங்கள்! அவர்களை நன்றாகப் பராமரியுங்கள்! நீங்கள் உண்பதையே அவர்களுக்கும் உண்ணக் கொடுங்கள்; நீங்கள் உடுத்துவதையே அவர்களுக்கும் உடுத்தச் செய்யுங்கள்! (தபகாத் இப்னு ஸஅது, முஹம்மது அந்நபிய்யுல் காதிம் மாஜித் அலீ கான்)

மறுமைக்கு அஞ்சுவீர்!
ஓ... குரைஷிகளே! நாளை மறுமைக்கான தயாரிப்புடன் மக்கள் வரும்போது நீங்கள் உங்கள் பிடரிகளின் மீது உலகச் சுமைகளைச் சுமந்துகொண்டு வந்து விடாதீர்கள். அப்போது அல்லாஹ்வின் புறத்திலிருந்து நான் எந்த ஒரு விஷயத்திலும் உங்களுக்குப் பலன் அளித்திட முடியாது (மஜ்மவுஸ் ஸவாயிது 272/3)

அநீதம் அழிப்பீர்!
அறியாமைக்கால அனைத்து விவகாரங்களும் என் பாதங்களுக்குக் கீழ் புதைப்பப்பட்டு விட்டன. மேலும், இன்று வரையிலான எல்லா வட்டிக் கணக்குகளையும் ரத்துச் செய்து விட்டேன். எனினும், உங்களது மூலதனம் உங்களுக்கே உரியது. வட்டியை அல்லாஹ் தடைசெய்து விட்டான். எனவே, முதலில் (என் குடும்பத்தைச் சேர்ந்த) அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிபின் வட்டியைச் செல்லாததாக ஆக்குகிறேன்.

அறியாமைக்கால இரத்தப் பழிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு விட்டன. இனி, பழைய கொலைக்குப் பழிவாங்கும் உரிமை எவருக்கும் இல்லை. இதில் முதலாவதாக என் குடும்பத்தைச் சேர்ந்த ரபீஆ இப்னு அல்ஹாரிஸ் இப்னு அப்துல் முத்தலிப் கொல்லப்பட்டதற்கான பழிவாங்கலை ரத்துச் செய்கிறேன். அறியாமைக் கால கொலை குற்றத்தில் இதை நான் முதலாவதாக தள்ளுபடி செய்கிறேன் (ஸஹீஹ் முஸ்லிம் 2334, இப்னு மாஜா 3074)

முறைதவறி நடக்காதீர்!
அறிந்து கொள்ளுங்கள்! குழந்தை விரிப்புக்கே சொந்தமானது. (அனுமதிக்கப்பட்ட திருமண உறவுடன் இருக்கும் கணவனுக்கே குழந்தை உரியதாகும்) மணமுடித்துக் கொண்ட பிறகும் விபசாரம் செய்பவர் கல்லெறிந்து கொல்லப்பட வேண்டும். எவர் தம் தந்தை அல்லாதவரை தம்முடைய தந்தையாக அழைக்கிறாரோ, எவர் தம் உரிமையாளர் அல்லாதவருடன் தம்மை இணைத்துக் கொள்கிறாரோ, அவர்கள் மீது அல்லாஹ்வுடைய, வானவர்களுடைய இன்னும், மக்கள் அனைவருடைய சாபமும் உண்டாகட்டும்! அவர்களின் கடமையான உபரியான எந்த வணக்கமும் ஏற்றுக் கொள்ளப்படாது. (இப்னு மாஜா 2712, ஸஹீஹுல் ஜாமிஇ1789)

உரிமைகளை மீறாதீர்!
ஒரு பெண் தமது கணவரின் வீட்டிலிருந்து அவரது அனுமதியின்றி எதையும் செலவு செய்யக்கூடாது. அப்போது, "உணவையுமா?' என்று கேட்கப்பட்டது. அதற்கு நபியவர்கள், "ஆம்! அதுதான் நமது செல்வங்களில் மிகச் சிறந்தது' என்றார்கள். (ஸஹீஹுல் ஜாமிஇ1789, ஸுனன் அபூ தாவூத் 3565)

ஒ... மக்களே! ஒவ்வொருவருக்கும் சொத்தில் அவரவரின் உரிமைகளை அல்லாஹ் வழங்கி இருக்கின்றான். இனி, எவரும் தமது எந்த வாரிசுக்கும் உயில் எழுதக் கூடாது.(நஸாயி 3642, ஸுனன் அபூதாவூத் 2870, 3565, தபகாத் இப்னு ஸஅது)

இரவலாக வாங்கப்பட்ட பொருட்கள் உரியவரிடமே ஒப்படைக்கப் படவேண்டும்; பாலைக் கொண்டு பயன்பெற கொடுப்பட்ட கால்நடைகள் (அவற்றின் பயன்பாடு தீர்ந்தவுடன்) அவற்றின் உரிமையாளரிடமே திருப்பிக் கொடுக்கப்பட வேண்டும்; கடன்கள் நிறைவேற்றப்பட வேண்டும்; இழப்பீடுகளை நிறைவேற்ற தலைவனே பொறுப்பாளன். (ஸுனன் அபூதாவூத் 3565, ஜாமிவுத் திர்மிதி 2120, 2121, ஸுனன் இப்னு மாஜா தபகாத் இப்னு ஸஅது, தாரீக் இப்னு இஸ்ஹாக்)

பெண்களை மதிப்பீர்!
கவனியுங்கள்! பெண்கள் விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்; அவர்களுக்கு நன்மையே நாடுங்கள்; அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டவர்கள். அல்லாஹ்வுடைய அமானிதமாக அவர்களை நீங்கள் பெற்றுள்ளீர்கள்! எப்படி உங்கள் மனைவியர் மீது உங்களுக்கு உரிமைகள் இருக்கின்றனவோ, அதே போல் உங்கள் மனைவியருக்கும் உங்கள் மீது உரிமைகள் இருக்கின்றன. அவர்கள் உங்களுக்குச் சிறந்த முறையில் பணிவிடை ஆற்றட்டும்! அவர்களுக்குரிய கடமை என்னவென்றால், நீங்கள் எவரை விரும்ப மாட்டீர்களோ, அவரை அவர்கள் வீட்டுக்குள் அனுமதிக்காமல் இருக்கட்டும்; இன்னும், மானக்கேடான செயலைச் செய்யாமல் இருக்கட்டும்! அவர்கள் குற்றம் புரிந்தால், அவர்களைத் தண்டிக்கிற உரிமையும் உங்களுக்கு உண்டு. அது அவர்களை இலேசாக காயம்படாதபடி அடிப்பதாகும். அவர்களுக்கு ஒழுங்கான முறையில் உணவும் உடையும் வழங்குங்கள்; அவர்களுக்கு நன்மையை நாடுங்கள்; அவர்கள் உங்களின் உதவியாளர்களாகவும் உங்களைச் சார்ந்தவர்களாகவும் இருக்கிறார்கள். அல்லாஹ்வின் பெயரை முன்மொழிந்தே நீங்கள் அவர்களுடன் மணவாழ்க்கை மேற்கொண்டுள்ளீர்கள்! (ஸஹீஹ் முஸ்லிம் 2334, ஸஹீஹ் ஜாமிஇ 7880)

இரண்டைப் பின்பற்றுவீர்!
மக்களே! சிந்தித்துப் புரிந்து கொள்ளுங்கள்; எனது பேச்சை கவனமாக கேட்டுக் கொள்ளுங்கள். நான் எனது பிரசாரத்தை உங்களுக்கு எடுத்துரைத்து விட்டேன். உங்களிடையே அல்லாஹ்வின் வேதத்தை(யும் அவனது தூதரின் வழிமுறையும்) விட்டுச் செல்கிறேன். நீங்கள் அவற்றைப் பின்பற்றினால், ஒருபோதும் வழிகெட மாட்டீர்கள்! (ஸஹீஹ் முஸ்லிம் 2334, இப்னு மாஜா 3074) (முஅத்தா இமாம் மாலிக்/மிஷ்காத்182. ஸஹீஹுத் தர்கீப் 40.)

எச்சரிக்கையாக இருப்பீர்!
மக்களே! உங்களது இந்த நகரத்தில், தான் வணங்கப்படுவதைப் பற்றி ஷைத்தான் நம்பிக்கை இழந்து விட்டான். ஆனாலும், அவன் மகிழ்ச்சியுறும் விதமாய் நீங்கள் அற்பமாக கருதும் சில விஷயங்களில் அவனுக்கு நீங்கள் கீழ்ப்படிவீர்கள். ஆகவே, உங்களது மார்க்க விஷயத்தில் அவனிடம் எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்! (பிக்ஹு சூரா456. ஸஹீஹ் ஜாமிஇ 7880/முஸ்தத்ரகுல் ஹாகிம். ஸஹீஹுத் தர்கீப் 40)

இன்னும், (மகா பொய்யன்) தஜ்ஜாலைப் பற்றியும் உங்களுக்கு எச்சரிக்கிறேன். அல்லாஹ் அனுப்பிய எந்த இறைத்தூதரும் (அவனைப் பற்றித்) தம் சமுதாயத்தாரை எச்சரிக்காமல் இருந்ததில்லை. (இறைத் தூதர்) நூஹ் அவர்கள் (தம் சமுதாயத்தாருக்கு) அவனைப் பற்றி எச்சரித்தார்கள். அவர்களுக்குப் பின்னால் வருகை தந்த இறைத்தூதர்களும் எச்சரித்தார்கள். மேலும், (என் சமுதாயத்தினரான) உங்களிடையேதான் (இறுதிக் காலத்தில்) அவன் தோன்றுவான். அவனது (அடையாளத்) தன்மைகளில் எதேனும் சில உங்களுக்குப் புலப்படாமல் போனாலும், நிச்சயமாக உங்களுடைய இறைவன் உங்களுக்குத் தெரியாதவனல்லன் என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும்! உங்கள் இறைவன் ஒற்றைக் கண்ணன் அல்லன். அவனோ, (தஜ்ஜாலோ) வலது கண் குருடானவன். அவனது கண் (ஒரே குலையில்) துருத்திக் கொண்டிருக்கும் திராட்சை போன்று இருக்கும். (ஸஹீஹ்ுல் புகாரி 4402)

இறை ஏற்பாட்டை மாற்றாதீர்!
(மாதத்தின் நாட்களை தன் இஷ்டப்படி) முன் பின்னாக்குவதெல்லாம் இறை நிராகரிப்பை அதிகரிக்கும் செயலாகும். ஆதனால் நிராகரிப்பவர்கள்தான் வழிகெடுக்கப்படுகிறார்கள். எனென்றால், அவர்கள் தங்கள் இஷ்டப்படி மாதங்களை முன் பின்னாக்கி ஒர் அண்டில் அம்மாதங்களில் போர் புரிவதை ஆகுமாக்கிக் கொள்கிறார்கள். மற்றோர் ஆண்டில் அதே மாதங்களில் போர் புரிவது கூடாது என்று தடுத்து விடுகிறார்கள். இவ்வாறு அவர்கள் செய்வதன் நோக்கமெல்லாம் தாங்கள் தடுத்திருக்கும் மாதங்களின் எண்ணிக்கையை அல்லாஹ் தடுத்திருக்கும் மாதங்களின் எண்ணிக்கைக்குச் சரியாக்கி, அல்லாஹ் தடுத்திருக்கும் மாதங்களையும் தாங்கள் ஆகுமாக்கிக் கொள்வதற்குத்தான். (அல்குர்அன்9:37) (தாரீக் இப்னு கல்தூன் 59/2)

அறிந்து கொள்ளுங்கள்: நிச்சயமாக காலம், வானங்களையும் பூமியையும் அல்லாஹ் படைத்த அன்றிருந்த அதன் அமைப்பைப் போன்றே, இப்போதும் சுற்றிவருகின்றது. அல்லாஹ்விடத்தில் மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டாகும். இப்படித்தான் வானங்களையும் பூமியையும் அல்லாஹ் படைத்த அன்று, அவனது புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவற்றில் நான்கு மாதங்கள் சங்கைக்குரியன. மூன்று, தொடர்ந்து வருபவை. அவை துல்கஅதா, துல்ஹஜ், முஹர்ரம், நான்காவது ஜுமாதல் உலாவிற்கும் ஷஅபானிற்கும் இடையில் உள்ள ரஜப் ஆகும். (ஸஹீஹுல் புகாரி 4662, ஸுனன் அபூதாவூத் 1942)

சகோதரம் பேணுவீர்!
ஒவ்வொரு முஸ்லிமும் மற்ற முஸ்லிமுக்குச் சகோதரர் ஆவார். முஸ்லிம்கள் அனைவரும் சகோதரர்களே! ஒரு முஸ்லிமின் பொருள் பிறருக்கு அறவே ஆகுமானதல்ல; மனமுவந்து கொடுத்தாலே தவிர! உங்களுக்கு நீங்கள் அநீதம் இழைத்துக் கொள்ளாதீர்கள் (ஸஹீஹுல் ஜாமிஇ 7880, தாரீக் இப்னு கல்தூன் 59/2, பிக்ஹுஸ் ஸீரா 456)

சொர்க்கம் செல்ல இதுதான் வழி!
ஒ... மக்களே! உங்கள் இறைவனையே வணங்குங்கள்; உங்கள் இறைவனுக்கே பயந்து கொள்ளுங்கள்; கடமையான ஐவேளைத் தொழுகைகளையும் தவறாது பேணுங்கள்; (ரமழானில்) நோன்பு நோற்று வாருங்கள்; விருப்பமுடன் ஸகாத் கொடுத்து விடுங்கள்; அல்லாஹ்வின் இல்லத்தை ஹஜ் செய்யுங்கள்; உங்களில் அதிகாரம் உடையோருக்குக் கட்டுப்பட்டு நடங்கள்; நீங்கள் சொர்க்கம் செல்வீர்கள்!. (ஜாமிவுத் திர்மிதி616, ஸஹீஹுத் திர்மிதி516, மிஷ்காத் 576, முஸ்னத் அஹ்மத், தாரீக் இப்னு ஜரீர், தாரீக் இப்னு அஸப்கிர், மஆதினுல் அஃமால் 1108,1109)

குற்றவாளியே தண்டிக்கபடுவார்!
ஒருவர் குற்றம் செய்தால் அதற்கான தண்டனை அவருக்கே கொடுப்படும்; மகனுடைய குற்றத்திற்காக தந்தையோ, தந்தையின் குற்றத்திற்காக மகனோ தண்டிக்கப்பட மாட்டார். (ஸஹீஹுல் ஜாமிஇ 7880, ஜாமிவுத் திர்மிதி2159,3078, ஸஹீஹுத் திர்மிதி373,461, ஸுனன் இப்னு மாஜா 3055, ஸஹீஹ் இப்னு மாஜா 1015.)

இஸ்லாம் முழுமையாகி விட்டது!
ஒவ்வோரு இறைத்தூதரின் பிரார்தனையும் (இவ்வுலகிலேயே) முடிந்து விட்டன; என் பிரார்த்தனையைத் தவிர! நான் அதை மறுமை நாளுக்காக என் இறைவனிடம் சேமித்து வைத்திருக்கிறேன். அறிந்து கொள்ளுங்கள்; மறுமை நாளில் இறைத்தூதர்கள் தங்களது சமுதாயத்தினர் அதிகமாக இருப்பதைக் கண்டு மகிழ்ச்சியுறுவார்கள். அப்போது என்னை நீங்கள் கேவலப்படுத்தி விடாதீர்கள். நான் உங்களுக்காக கவ்ஸர் நீர் தடாகத்திற்கு அருகில் உட்கார்ந்திருப்பேன். (மஜ்மவுஸ் ஸவாயிது 271/3)

மக்களே! எனக்குப்பின் எந்த ஒர் இறைத்தூதரும் இல்லை; உங்களுக்குப்பின் எந்த ஒரு சமுதாயமும் இல்லை. (ளிலாலுஸ் ஜன்னா 1061)

இங்கு வந்திருப்பவர்கள், வராதவர்களுக்கு இந்த வழிகாட்டல்களை எடுத்துச் சொல்லட்டும்; விஷயம் சென்று சேருபவர்களில் சிலர், நேரடியாக கேட்பவரைவிட நன்கு ஆராயும் தன்மை உடையவராக இருக்கலாம். (ஸஹீஹுல் புகாரி 67,105,1741)

பிறகு நபி (ஸல்) அவர்கள் மக்களை நோக்கி, "மறுமை நாளில் உங்களிடம் என்னைப் பற்றி விசாரிக்கப்படும்போது நீங்கள் என்ன சொல்வீர்கள்?'' என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், "நீங்கள் (மார்க்க போதனைகள் அனைத்தையும் எங்களிடம்) தெரிவித்து விட்டீர்கள்; (உங்களது தூதுத்துவப் பொறுப்பை) நீங்கள் நிறைவேற்றி விட்டீர்கள்; (சமுதாயத்திற்கு) நன்மையை நாடினீர்கள் என நாங்கள் சாட்சியம் அளிப்போம்'' என்றார்கள்.

உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தமது ஆட்காட்டி விரலை வானை நோக்கி உயர்த்தி சைகை செய்துவிட்டுப் பிறகு, அதை மக்களை நோக்கித் தாழ்த்தி "இறைவா! இதற்கு நீயே சாட்சி! இறைவா! இதற்கு நீயே சாட்சி! இறைவா! இதற்கு நீயே சாட்சி!'' என்று முடித்தார்கள். (ஸஹீஹ் முஸ்லிம் 2334)

இவ்வாறு அவர்கள் கூறிய அதே இடத்தில் அல்லாஹ்வின் புறத்திலிருந்து கீழ் வருமாறு இறைவசனம் இறங்கியது:"இன்றைய தினம் உங்களுக்காக உங்களுடைய மார்க்கத்தை முழுமையாக்கி விட்டேன்; மேலும், நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்; இன்னும், உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே தேர்ந்தெடுத்துக் கொண்டேன். (அங்கீகரித்துக் கொண்டேன்.)'' (அல்குர்அன் 5:3) (ஸஹீஹுல் புகாரி 4406, 4407, முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா, தாரீக் இப்னு ஜரீர், தாரீக் இப்னு கஸீர், அத்துர்ருல் மன்ஸுர்)

நன்றி: தாருல் ஹுதா

Wednesday, May 21, 2008

இஸ்லாமிய போதனைகள் - 1. சமத்துவ சமுதாயம்

'மனிதர்கள் அனைவரும் ஒரே சமுதாயத்தைச் சார்ந்தவர்களே!' என்று அறிவிக்கிறது இஸ்லாம்.

'மனிதர்களுக்கிடையில் ஏற்றத் தாழ்வில்லை. யாரும் யாருக்கும் உயர்ந்தவரும் இல்லை. தாழ்ந்தவரும் இல்லை. மேலும் படைக்கப் பட்ட உயிரினங்கள் பலவற்றை விடவும் மேன்மைப் படுத்தப் பட்டவர்கள் மனிதர்களே' எனவும் திருமறையும் நபி(ஸல்) அவர்களின் வாக்குகளும் தெளிவு படுத்துகின்றன.

உங்களின் இந்தச் சமுதாயம் உண்மையில் ஒரே ஒரு சமுதாயமே. மேலும் நானே உங்கள் அதிபதி. எனவே நீங்கள் எனக்கே அடிபணியுங்கள். (குர்ஆன் 21:92)

"மனிதர்களே! நாம் உங்களை ஓர் ஆணிலிருந்தும் பெண்ணிலிருந்தும் படைத்தோம். பிறகு நீங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக் கொள்ளும் பொருட்டு உங்களை சமூகங்களாகவும், கோத்திரங்களாகவும் அமைத்தோம். உண்மையில், உங்களில் இறைவனிடத்தில் அதிக கண்ணியம் வாய்ந்தவர்கள் அதிக இறையச்சம் கொண்டவர்கள்தாம்". (குர்ஆன் 49:13)

"மனிதர்களே! உங்கள் அனைவரையும் ஓர் ஆன்மாவிலிருந்து படைத்த உங்களின் இறைவனுக்கு நீங்கள் அஞ்சுங்கள்" (குர்ஆன் 4:1)

"நிச்சயமாக, நாம் ஆதமுடைய சந்ததியைக் கண்ணியப்படுத்தினோம்; இன்னும், கடலிலும், கரையிலும் அவர்களைச் சுமந்து, அவர்களுக்காக நல்ல உணவு(ம் மற்றும்) பொருட்களையும் அளித்து, நாம் படைத்துள்ள (படைப்புகள்) பலவற்றையும் விட அவர்களை (தகுதியால்) மேன்மைப் படுத்தினோம்." (குர்ஆன் 17:70)

"கறுப்பரை விட வெள்ளையரோ, வெள்ளையரை விட கறுப்பரோ சிறந்தவரல்லர்; அரபியரை விட அரபியல்லாதவரோ, அரபியல்லாதவரை விட அரபியரோ சிறந்தவரல்லர். இறையச்சம் உடையவரே உங்களில் சிறந்தவர்". - நபிகள் நாயகம் (ஸல்)

படைப்புகள் அனைத்தும் இறைவனின் குடும்பமாகும். அவற்றை நேசிப்பவனே இறைவனை நேசிப்பவனாவான் - நபிகள் நாயகம் (ஸல்) - நூல்: பைஹகி

Friday, May 16, 2008

எதிரிகளாலும் போற்றப் பட்ட முஹம்மது நபி(ஸல்)!

இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதற்கு இரு முஸ்லிமல்லாதவர்களுக்கிடையே நடைபெற்ற கீழ்க்கண்ட உரையாடல் நல்லதொரு விளக்கமளிக்கிறது.


உரையாடிய இருவரில் ஒருவர் ரோம் மன்னர் ஹிர்கல் (ஹெர்குலஸ்). மற்றொருவர் முஹம்மது நபி (ஸல்) அவர்களை எதிரியாக பாவித்திருந்த அபூஸுஃப்யான்.


அபூ ஸுஃப்யான் மற்றும் குறைஷி காஃபிர்களுடன் நபி (ஸல்) அவர்கள் ஹுதைபிய்யாவில் ஒப்பந்தம் செய்திருந்த காலம் அது. அக்காலத்தில் அபூ ஸுஃப்யானும் குறைஷி காஃபிர்களும், வணிகர்களாக ஷாம் (சிரியா) சென்றிருந்தார்கள். அபூ ஸுஃப்யான் தனது சக தோழர்களுடன் இருக்கும் போது அவரிடம் ஹெர்குலிஸ் (ஹிர்கல்) மன்னன், ஒரு தூதுவனை அனுப்பி ரோம் நகரப் பெருந்தலைவர்கள் கூடியிருக்கும் மஸ்ஜிதுல் அக்ஸாவில் தனது அவைக்கு வரும்படி அழைப்பு விடுத்தார். (ஹிர்கல் ரோமிலிருந்து அங்கு அப்போது வந்திருந்தார்.)


அபூ ஸுஃப்யான் தனது குழுவுடன் அங்கு வரவே அவர்களை ஹிர்கல் வரவேற்று அமரவைத்தார். பிறகு தனது மொழிபெயர்ப்பாளரையும் அவைக்கு வரவழைத்தார். இதற்குப் பின் நாம் நேரடியாக அபூ ஸுஃப்யான் கூறுவதைக் கேட்போம்.


மன்னர்: தன்னை நபி என்று கூறும் அந்த மனிதருக்கு உங்களில் மிக நெருங்கிய உறவினர் யார்?


அபூஸுஃப்யான்: அவர்களுக்கு மிக நெருங்கிய உறவினன் நான்தான்.


மன்னர்: அவரை என்னருகே கொண்டு வாருங்கள் அவருடைய தோழர்களை அவருக்கு பின் பக்கம் இருக்க வையுங்கள்.


(தனது மொழிபெயர்ப்பாளடம்) தன்னை நபியெனக் கூறும் அந்த மனிதரை (நபியை)ப் பற்றி இவ (அபூஸுஃப்யானி)ரிடம் நான் கேட்பேன். இவர் என்னிடம் பொய்யுரைத்தால் (அபூ ஸுஃப்யான் தோழர்களான) நீங்கள் இவர் பொய் கூறுகிறார் என்று தெரிவிக்கவும். இதனை மொழிபெயர்த்து இவர்களிடம் கூறு.


அபூஸுஃப்யான் (மனதிற்குள்): நான் பொய் கூறுவதாக என் நண்பர்கள் சொல்லி விடுவார்களோ என்ற வெட்கம் மட்டும் எனக்கு இல்லாவிட்டால் அல்லாஹ்வின் மீதாணையாக! நபியவர்களைப் பற்றி நான் பொய் சொல்லியிருப்பேன்.


மன்னர்: உங்களில் அவரது குடும்பம் எப்படிப்பட்டது?


அபூஸுஃப்யான்: அவர் எங்களில் நல்ல குடும்பத்தைச் சார்ந்தவர்.


மன்னர்: இதற்கு முன்பு (இறைவன் ஒருவன். நான் அவனது தூதன் என்ற) இச்சொல்லை உங்களில் யாராவது சொல்லியிருக்கின்றனரா?


அபூஸுஃப்யான்: இல்லை.


மன்னர்: ‘’இவரது முன்னோர்களில் யாராவது அரசராக இருந்தாரா?'’.


அபூஸுஃப்யான்: இல்லை.


மன்னர்: அவரை பின்பற்றுபவர்கள் மக்களில் சிறந்தவர்களா அல்லது எளியவர்களா?


அபூஸுஃப்யான்: எளியவர்களே பின்பற்றுகிறார்கள்.


மன்னர்: அவர்கள் அதிகரிக்கின்றனரா? குறைகின்றனரா?


அபூஸுஃப்யான்: இல்லை! அதிகரிக்கின்றனர்.


மன்னர்: அவரது மார்க்கத்தில் இணைந்த பின் யாராவது அம்மார்க்கத்தின் மீது வெறுப்பு கொண்டு மதம் மாறுகின்றனரா?


அபூஸுஃப்யான்: இல்லை.


மன்னர்: இச்சொல்லைச் சொல்வதற்கு முன்பு அவர் பொய் பேசுவார் என சந்தேகப் பட்டதுண்டா?


அபூஸுஃப்யான்: இல்லை.


மன்னர்: அவர் மோசடி செய்ததுண்டா?


அபூஸுஃப்யான்: இல்லை. நாங்கள் அவரிடம் தற்போது ஓர் உடன்படிக்கை செய்திருக் கிறோம். அதன்படி அவர் செயல்படுவாரா அல்லது மாட்டாரா என்பது எங்களுக்குத் தெரியாது. (நபியைப் பற்றி குறை கூற இந்த வாக்கியத்தைத் தவிர வேறு வாக்கியத்தை என் பேச்சின் இடையே சேர்க்க எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.)


மன்னர்: அவருடன் போர் செய்துள்ளீர்களா?


அபூஸுஃப்யான்: ஆம்!


மன்னர்: அவருடன் நீங்கள் புரிந்த போர் முடிவு எவ்வாறு இருந்தது?


அபூஸுஃப்யான்: அவருக்கும் நமக்கும் இடையே போர் ஏற்றம் இறக்கமாக, அதாவது சில நேரம் அவர் எங்களை வெல்வார் சிலநேரம் நாங்கள் அவரை வெல்வோம்.


மன்னர்: அவர் உங்களுக்கு என்ன கட்டளையிடுகிறார்?


அபூஸுஃப்யான்: அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள். அவனுக்கு எதையும் இணை ஆக்காதீர்கள். உங்கள் முன்னோர் கூறியதை விட்டுவிடுங்கள் என்று கூறி தொழுகை, வாய்மை, கற்பொழுக்கம், உறவைப் பேணுதல் போன்ற நற்பண்புகளைக் கட்டளையிடுகிறார்.


அனைத்தையும் ஆழ்ந்து கேட்ட மன்னர் தனது மொழிபெயர்ப்பாளடம் தான் இனி பேசுவதை மொழிபெயர்த்துக் கூறச் சொன்னார். அதாவது:


"உன்னிடம் அவரது குடும்பம் பற்றிக் கேட்டேன். ‘’அவர் உங்களில் நல்ல குடும்பத்தைச் சார்ந்தவர்'’ என்றாய். இவ்வாறுதான் இறைத்தூதர்கள், சமுதாயத்தில் நல்ல குடும்பத்தில் அனுப்பப்படுவார்.


அடுத்து, உன்னிடம் ‘’இதற்கு முன்பு (இறைவன் ஒருவன். நான் அவனது தூதன் என்ற) இச்சொல்லை உங்களில் யாராவது சொல்லியிருக்கின்றனரா?'’ எனக் கேட்டேன், ‘’இல்லை'’ என்றாய். இச்சொல்லை இதற்கு முன்பு யாராவது சொல்லியிருந்தால் அவரைப் பின்பற்றி இவரும் கேள்விப்பட்டதை கூறுகிறார் என்று சொல்லியிருப்பேன்.


அடுத்து உன்னிடம் ‘’இவரது முன்னோர்களில் யாராவது அரசராக இருந்தாரா?'’ எனக் கேட்டேன். நீ ‘’இல்லை'’ என்றாய். அங்ஙனம் இவரது முன்னோர்களில் யாராவது மன்னராக இருந்திருந்தால் அவருடைய முன்னோரின் அரசாட்சியை ஆசைப்படுகிறார் என்றிருப்பேன்.


அடுத்து உன்னிடம் ‘’(இறைவன் ஒருவன். நான் அவனது தூதன் என்ற) இச்சொல்லைச் சொல்வதற்கு முன்பு அவர் பொய்யுரைப்பார் என சந்தேகப்பட்டதுண்டா?'’ எனக் கேட்டேன். நீ ‘’இல்லை'’ என்றாய். மக்களிடம் பொய்யுரைக்கத் துணியாதவர் நிச்சயம் அல்லாஹ்வின் மீது பொய்யுரைக்க மாட்டார் என்பதை நன்கு புரிந்துகொண்டேன்.


அடுத்து அவரை பின்பற்றுபவர்கள் மக்களில் சிறந்தவர்களா அல்லது எளியவர்களா'’? என்று உன்னிடம் கேட்டேன் ‘’அவரை சாதாரண எளிய மக்கள்தான் பின்பற்றுகிறார்கள்'’ என்று கூறினாய். (பெரும்பாலும் ஆரம்பத்தில்) அத்தகைய மக்கள்தான் இறைத்தூதர்களைப் பின்பற்றுவார்கள்.


அடுத்து உன்னிடம் ‘’அவரைப் பின்பற்றுபவர்கள் அதிகரிக்கின்றனரா குறைகின்றனரா'’ என்று கேட்டேன். ‘’அதிகரிக்கின்றனர்'’ என்றாய் நீ. அவ்வாறே இறை நம்பிக்கை முழுமை அடையும்வரை அது வளர்ந்து கொண்டே இருக்கும்.


அடுத்து உன்னிடம் ‘’அவரது மார்க்கத்தில் இணைந்த பின் யாராவது அம்மார்க்கத்தின் மீது வெறுப்பு கொண்டு மதம் மாறி இருக்கின்றனரா'’ என்று கேட்டேன். நீ ‘’இல்லை'’ என்றாய். ஆம்! இறை நம்பிக்கையின் நிலை அவ்வாறுதான் இருக்கும். அதன் தெளிவு உள்ளத்துடன் ஒன்றோடு ஒன்றாக கலந்துவிட்டால் எவரும் அதைவிட்டு வெளியேற மாட்டார்கள்.


அடுத்து உன்னிடம் ‘’அவர் மோசடி செய்ததுண்டா'’? என்று கேட்டேன். நீ ‘’இல்லை'’ என்றாய். அவ்வாறே இறைத்தூதர்கள் மோசடி செய்ய மாட்டார்கள்.


அடுத்து உன்னிடம் அவர் உங்களுக்கு என்ன கட்டளையிடுகிறார்? என்று கேட்டேன். ‘’அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள். அவனுக்கு எதையும் இணையாக்காதீர்கள் என்று கட்டளையிட்டு, சிலை வணக்கத்தை விட்டு உங்களைத் தடுக்கிறார். மேலும் தொழுகை, வாய்மை, கற்பொழுக்கம், உறவைப் பேணுதல் போன்ற நற்பண்புகளை ஏவுகிறார்'’ என்று கூறினாய்.



‘’நீ கூறியவை அனைத்தும் உண்மையாக இருந்தால் என்னிரு கால்களுக்குக் கீழுள்ள இவ்விடங்களை அவரே அரசாள்வார். நிச்சயம் அவர் தோன்றுவார் என்பது எனக்குத் தெரியும். ஆனால், உறுதியாக அவர் உங்களிலிருந்து வருவார் என நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை. அவரைச் சென்றடையும் வழி எனக்குத் தெரிந்திருப்பின் சிரமம் பாராது அவரை சந்திப்பேன். நான் அவரருகில் இருந்தால் அவருடைய கால்களைக் கழுவுவேன்'’ என்றார்.


பின்பு புஸ்ராவின் ஆளுநர் வாயிலாக தனக்காக திஹ்யாவிடம் நபி (ஸல்) கொடுத்தனுப்பிய கடிதத்தைத் தன்னிடம் கொடுக்க வேண்டினார். ஆளுநர் அதனை மன்னனிடம் தந்தார். அக்கடிதத்தை மன்னர் படித்து முடித்தபோது அங்கே மக்களின் சப்தங்கள் உயர்ந்தன. கூச்சல்கள் அதிகமாயின.


அபூ ஸுஃப்யான் கூறுகிறார்: ‘’எங்களை வெளியேற்றும்படி கூற நாங்கள் வெளியேற்றப் பட்டோம். நாங்கள் வெளியேறும் போது நான் என் தோழர்களிடம் கூறினேன்: ரோமர்களின் மன்னன்கூட அவரைக் கண்டு அஞ்சும் அளவுக்கு அபூ கபிஷாவின் பேரனுடைய காரியம் உறுதியாகி விட்டது'’


அப்போதே அல்லாஹ்வின் தூதர் விஷயத்தில் நிச்சயம் அவர்கள் வெற்றி பெறுவார்கள் என நான் நம்பிக்கையுடன் இருந்தேன். முடிவில் அல்லாஹ் எனக்கு இஸ்லாமை ஏற்க அருள் செய்தான் என்று அபூஸுஃப்யான் கூறினார்.


(ஆதாரம்: ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

Thursday, May 15, 2008

தாய்ப் பாசத்திற்கு பரிசு சுவனம்!

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் சொன்னார்கள்,

"தன் இரு பெண் குழந்தைகளைக் கூட்டிக் கொண்டு என்னிடத்தில் ஒர் எழைப் பெண் வந்தார். அவருக்கு நான் மூன்று பேரீச்சம் பழங்களைக் கொடுத்தேன்.

அவ்விரு குழந்தைகளுக்கும் (ஆளுக்கு) ஒரு பேரீச்சம் பழத்தைக் கொடுத்து விட்டு, ஒரு பேரீச்சம் பழத்தைத் தான் சாப்பிடுவதற்காக தனது வாய்க்குக் கொண்டு சென்றார்.

அப்போது அவ்விரு குழந்தைகளும் தங்களுக்கு சாப்பிடத் தருமாறு கேட்டன! தான் சாப்பிட நினைத்த அந்தப் பேரீச்சம் பழத்தை இரு துண்டுகளாகப் பிய்த்து (குழந்தைகளிடம்) கொடுத்தார்.

அந்தப் பெண்ணின் அச்செயல் என்னை ஆச்சரியப்பட வைத்தது.

அவர் செய்த அந்தக் காரியத்தை நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தெரிவித்தேன். அதற்கு அவர்கள், "இதன் மூலம் அல்லாஹ் அப்பெண்ணுக்கு சுவனத்தை விதித்து விட்டான்'' என்றோ அல்லது "அப்பெண்ணுக்கு நரகிலிருந்து விடுதலை அளித்து விட்டான்'' என்றோ கூறினார்கள்."

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல் : முஸ்லிம்

தனக்கின்றி தான் பெற்ற குழந்தைக்கு வழங்கும் அந்தத் தாய்க்கு நபி (ஸல்) அவர்கள் சொர்க்கம் என்கின்றார்கள். அந்தத் தாய் தன் குழந்தைகளுக்குக் காட்டிய கருணைக்காக - ஊட்டிய பேரீச்சம்பழங்களுக்காக இறைவன் அவரை சுவனத்திற்குக் கொண்டு செல்கின்றான்.

இன்றைய தாய்மார்களுக்கோ தாய்ப்பால் ஊட்டுவதற்குக் கூட வருத்தமாக உள்ளது. அல்லாஹ் தன் திருமறையில் இரண்டு ஆண்டுகள் தாய்ப் பாலூட்டுமாறு கட்டளையிடுகின்றான். இதை இந்தத் தாய்மார்கள் பொருட்படுத்துவதில்லை. பாலூட்டுவதால் தங்கள் மேனி கட்டழகு கெட்டு விடும் என்று கற்பனை செய்து தங்கள் பிள்ளைகளுக்குச் செய்ய வேண்டிய மனிதாபிமானக் கடமையைச் செய்யத் தவறி விடுகின்றார்கள்.

நம்மைச் சுற்றி வலம் வருகின்ற ஆடு, மாடு போன்ற கால்நடைகள் தாங்கள் ஈனுகின்ற குட்டிகளுக்குப் பால் கொடுக்கத் தவறுவதில்லை. அனால் மனித இனத்தைச் சேர்ந்த நம் தாய்மார்களோ பெற்ற பிள்ளைக்கு 'புட்டி' பாலைக் கொடுத்து, அந்தப் பால் மாவில் கலந்துள்ள இரசாயனக் கலவையின் மூலம் குழந்தையின் குடலில் கோளாறு எற்பட வழிவகுக்கின்றனர்.

ஒரு குழந்தை அரை மணி நேரம் குடிக்கும் தாய்ப்பால் அதன் ஆயுள் முழுமைக்கும் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கின்றது என்று மருத்துவம் கூறுகின்றது. இந்தத் தாய் அதையெல்லாம் கண்டு கொள்ளாது காலா காலம் நோயில் சிக்கித் தவிக்க வழி வகுக்கின்றாள். இது மனிதப் பண்பா? என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். எனவே தாய்மார்கள் இதைக் கவனத்தில் கொண்டு தங்கள் குழந்தைகள் மீது உண்மையான பாசத்தைக் காட்ட வேண்டும். பாலூட்ட வேண்டும்.

நாகரீக மோகத்தில் இராப் பகலாய் பொருளீட்டுவதற்காகப் பாடுபடுகின்ற இயந்திர வாழ்க்கையில் தாய் தந்தையர்கள் தங்கள் பிள்ளைகளைக் குழந்தைக் காப்பகங்களில் விட்டு விடுகின்றனர். அல்லது உறவினர் வீட்டில் விட்டு விட்டு வெளிநாடுகளில் ஐக்கியமாகி விடுகின்றார்கள்.

இந்தக் குழந்தைகளுக்கு உயர்தரமான உணவு, உறைவிடம், வாகனங்கள் என்று எல்லாவித வசதிகளும் தாராளமாகக் கிடைக்கின்றன. ஆனால் அந்தக் குழந்தைகளுக்குத் தேவையான தாயின் அன்பு அரவணைப்பு, தந்தையின் பாசப் பிணைப்பு கிடைக்காமல் விரக்தியாக, மனித சடலங்களாக வளர்கின்றனர். உலகத்தை வெறுத்து, வெறித்துக் பார்க்கின்றனர். இந்த வெறுமை அக்குழந்தைகளை ஒரு கால கட்டத்தில் தடம் புரள வைத்து விடுகின்றது.

இப்படிப்பட்ட படு மோசமான நிலைகளை விட்டு நீங்கி, குழந்தைகளுடன் பாசப் பிணைப்புடன் வாழ வேண்டும். குழந்தைகள் மீது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காட்டிய அன்பு அரவணைப்பை நாமும் காட்ட வேண்டும்.

நன்றி: சித்தார்கோட்டை.காம்

Tuesday, May 13, 2008

நான் இஸ்லாத்தை தழுவியவிதம்! - Shariffa Carlo

இஸ்லாமிற்கு எதிராக பிரச்சாரம் செய்வதற்காக பயிற்சி அளிக்கப்பட்ட ஒரு சகோதரி, அதே இஸ்லாமிய கொள்கைகளினால் ஈர்க்கப் பட்டு முஸ்லிமான நிகழ்வு..

"நான் இஸ்லாத்தை தழுவிய விதம் பல திட்டங்கள் அமைந்தவை. நான் ஒரு திட்டம் வகுத்தேன். நான் சார்ந்த குழுவினர் ஒரு திட்டம் வகுத்தார்கள். அல்லாஹ் ஒரு திட்டம் போட்டு என்னை இஸ்லாத்தை தழுவச் செய்தான். திட்டம் வகுப்பதில் அல்லாஹ் மிக மேலானவன்.

என்னுடைய பருவ வயதில் நான் இஸ்லாத்திற்கு எதிரான தீவிர நோக்கம் கொண்ட ஒரு குழுவினரால் ஈர்கப்பட்டேன். இவர்களில் பெரும்பாலோர் அமெரிக்க அரசாங்கத்தில் உயர் பதவிகளை வகிப்பவர்கள். இவர்கள் இப்பதவியில் இருந்துக்கொண்டே தங்கள் நோக்கத்தை நிறைவேற்றி கொண்டிருந்தார்கள். அரசாங்கத்திற்கு சம்பந்தமில்லாமல் தங்கள் பதவிகளை தவறாக பயன்படுத்தினார்கள்.

என்னிடம் இயற்கையிலே அமைந்த துணிச்சல், தன்னம்பிக்கை பெண்ணுரிமைக்காக போராடும் தன்மையைக் கண்டு என்னை அவர்கள் அனுகி International Relations என்ற கல்விப் பயிற்சியை முடித்தால் எகிப்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் பணியாற்றவும் அதனைக் கொண்டு அங்கு பெண்களுக்கு பெண்ணுரிமைக்காக குரல் கொடுத்து போராட வேண்டும் என்று அவர்கள் கூறியது எனக்கு பொருத்தாமகத் தோன்றியது. எகிப்திய பெண்களை நான் தொலைக்காட்சியில் பார்த்ததில் அவர்கள் பளு, சுமை நிறைந்தவர்களாக கண்டதால் அவர்களை சுதந்திர இருபதாம் நூற்றாண்டிற்கு வழிகாட்ட நினைத்தேன்.

இஸ்லாமிய நாட்டில் இந்தப் பணியை தொடங்க இருப்பதால் நான் குர்ஆனையும், ஹதீதையும் இஸ்லாமிய வரலாறுகளையும் கற்றுக்கொண்டேன். நாங்கள் கொண்ட நோக்கப்படி இஸ்லாத்தை பற்றி பிரச்சாரத்தின் மூலம் திசை திருப்ப ஆரம்பித்தேன். அதனால் எனக்கு மிக பயமாகவும் இருந்தது. இதை முறியடிக்க கிறிஸ்தவத்தை கற்க எண்ணி மதிப்பும் மரியாதையும் உள்ள ஒரு (Ph.D in Theology, Harvard University) பேராசிரியரிடம் அனுப்பப்பட்டேன். நான் ஒரு சிறந்த பேராசிரியரிடம் தான் கிறிஸ்தவத்தை கற்க போகிறேன் என்று நினைத்தேன். ஆனால் உண்மை அப்படி அல்ல. காரணம் அவர் ஒரு (Unitarian Christian ) அதாவது மாதா, பிதா, பரிசுத்தஆவி என்ற கிறிஸ்தவ கொள்கையில் அவருக்கு நம்பிக்கை கிடையாது. உண்மையில் ஜீஸஸ் (ஈஸா நபி) அவர்களை இறைவனின் தூதர் என்றுதான் நம்புகிறார்.

இதனை நிரூபிக்க அவர் என்னிடம் பழைய பைபிள் மூல நூல்களை (Greek, Hebrew, and Aramaic) எடுத்து பைபிளில் எங்கெங்கு மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது என்று என்னிடம் நிரூபித்தார். இதைக் கண்டதும் நான் என் கிறிஸ்தவ மதத்தின் மீது உள்ள நம்பிக்கையை இழந்தேன். இருந்த போதிலும் எந்த நோக்கத்தோடு இந்தப் பணியில் சேர்ந்தேனோ என் எதிர்கால வாழ்க்கையையும் கருத்தில் கொண்டு தொடர்ந்து மூன்று ஆண்டுகள் படித்து வந்தேன். இதற்கிடையில் இஸ்லாத்தை அறியும் பொருட்டு முஸ்லிம் சகோதரர்களிடம் உரையாடி வந்தேன்.

என்னுடைய ஆர்வத்தை கண்ட முஸ்லிம் சகோதரர் (MSA) என்னுடைய சந்தேகங்களை களைந்து இஸ்லாத்தை மேலும் கற்றுக்கொடுத்தார். அல்ஹம்துலில்லாஹ். அச்சகோதரருக்கு மென்மேலும் அல்லாஹ் நன்மையை அளித்தருள்வானாக!

ஒரு நாள் இந்த சகோதரர் என்னிடம் இருபது முஸ்லிம் சகோதரர்கள் (ஜமாஅத்) வந்திருப்பதாகவும் இஷா வேளைக்குப் பிறகு அதில் கலந்து கொள்ளும்படியும் கூறினார். நான் அங்கு சென்று கலந்து கொண்டேன். அவர்களில் ஒருவர் பாகிஸ்தானியர். அவர் அதிகம் கிறிஸ்தவத்தை அறிந்தவராயிருந்தார். நானும் அவரும் பைபிளையும், குர்ஆனையும் பல கோணங்களில் காலை பஜ்ர் நேரம் வரை கருத்து பரிமாற்றமும் விவாதமும் செய்தோம்.

மூன்று ஆண்டுகளாக நான் இஸ்லாத்தைப் பற்றி சொல்லி கொடுக்கப்பட்டேன், வாதம் புரிந்தேன், குறை சொல்லப்பட்டேன் ஆனால் யாரும் என்னை இஸ்லாத்தை தழுவ அழைப்பு விடுக்கவில்லை. ஆனால் இவர் என்னை இஸ்லாத்தை தழுவும்படி அழைப்பு விடுத்தார். அல்ஹம்துலில்லாஹ்! அல்லாஹ் என் இதயத்தை திறந்தான். நான் முஸ்லிமாக விருப்பம் தெரிவித்து கலிமாவை மொழிந்து நிம்மதி பெருமூச்சு அடைந்தேன். நான் எனது இறுதி நாள் வரை சிறந்த முஸ்லிமாக வாழ்ந்து மரணிக்க வேண்டுமென அல்லாஹ்விடம் துஆச் செய்கிறேன். ஆமீன்!"

ஆங்கிலத்தில்: Trained to destroy Islam
தமிழில்: ஜகபர் அலி

Monday, May 12, 2008

நற்குணம் கொண்டு அழகாகுங்கள்!

உண்மை முஸ்லிம் நற்குணமுடையவராகவும், மென்மையாக உரையாடுபவராகவும் இருப்பார். இது விஷயத்தில் நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டுதல் அவருக்கு உண்டு.

நபி(ஸல்) அவர்களின் பணிவிடையாளரான அனஸ் (ரழி) அவர்கள் கூறியதுபோல, நபி(ஸல்) அவர்கள் மனிதர்களில் மிகவும் நற்குணம் உடையவர்களாகத் திகழ்ந்தார்கள். அனஸ் (ரழி) அவர்கள் இதை மிகையாகக் கூறவில்லை. நபி(ஸல்) அவர்களின்பால் அவர்கள் கொண்டிருந்த அன்பு அவர்களை மிகைப்படுத்திக் கூறத் தூண்டவுமில்லை. நபி(ஸல்) அவர்களிடம் வேறு எவரும் காணாத விஷயங்களை கண்டார்கள்.

நபி(ஸல்) அவர்களின் நற்குணத்தின் ஒரு பகுதியை பின்வருமாறு சுட்டிக்காட்டினார்கள்:

அனஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: "நான் நபி(ஸல்) அவர்களுக்கு பத்து ஆண்டுகள் பணிவிடை செய்தேன். அவர்கள் என்னிடம் ஒருபோதும் "சீ' என்று கூறியதில்லை. நான் செய்த எந்த காரியத்துக்கும் ஏன் செய்தாய் என்றோ நான் செய்யாத எந்த காரியத்திற்கும் ஏன் அதைச் செய்யவில்லை? என்றோ கூறியதில்லை.'' (ஸஹீஹுல் புகாரி)

நபி(ஸல்) அவர்கள் ஆபாசமாகவோ அருவருப்பாகவோ பேசியதே இல்லை. நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: "உங்களில் சிறந்தவர் யாரெனில் உங்களில் நற்குணத்தால் அழகானவரே.'' (ஸஹீஹுல் புகாரி)

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: அசிங்கமான சொல், செயல்கள் இஸ்லாமில் உள்ளவை அல்ல. மனிதர்களில் அழகானவர் யாரெனில் அவர்களில் நற்குணத்தால் அழகானவரே. (முஸ்னத் அஹ்மத்)

மேலும் கூறினார்கள்: "உங்களில் எனக்கு மிகவும் நேசத்திற்குரியவரும், மறுமையில் சபையால் எனக்கு மிகவும் நெருக்கமானவரும் யாரெனில் உங்களில் குணத்தால் மிக அழகானவரே. உங்களில் எனக்கு மிகவும் கோபத்திற்குரியவர், மறுமை நாளில் என்னிடமிருந்து மிகவும் தூரமானவர் யாரெனில் அதிகமாகப் பேசுபவர், அடுக்குமொழியில் பேச முயற்சிப்பவர், அகந்தை உடையவர் ஆகியோரே.'' (ஸுனனுத் திர்மிதி)

அல்லாஹ்வின் அருள் பெற்ற நபித்தோழர்கள் நபி(ஸல்) அவர்களிடமிருந்து நற்பண்பு மிக்க இவ்வழிகாட்டுதலை செவியேற்றார்கள். அவர்கள் தங்களது கண்களால் நபி (ஸல்) அவர்கள் மக்களிடம் வெளிப்படுத்திய பண்புகளைக் கண்டார்கள். ஆகவே அவர்களின் பொன்மொழியை முழுமையாக ஏற்று செயல்படுத்தினார்கள். இதனால் உலகில் எந்த சமுதாயத்திலும் காணமுடியாத மகத்தான முன்னோடிகளாகத் திகழ்ந்தார்கள்.

அனஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்:

"நபி(ஸல்) அவர்கள் கருணையாளராக இருந்தார்கள். அவர்களிடம் எவர் வந்தாலும் அவருக்கு வாக்களித்து தன்னிடமிருப்பதைக் கொடுத்து உதவுவார்கள்.

ஒருமுறை ஜமாஅத் தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டது. அப்போது ஒரு கிராமவாசி நபி(ஸல்) அவர்களிடம் வந்து அவர்களின் ஆடையைப் பிடித்துக் கொண்டார்.

அவர் "என் தேவைகளில் சில நிறைவேறவில்லை; (இப்போது செய்யவில்லையெனில்) அதை நான் மறந்து விடுவேனோ என அஞ்சுகிறேன்'' என்றார்.

நபி(ஸல்) அவர்கள் அம்மனிதருடன் சென்று அவரது வேலையை முடித்து வந்தபின் தொழவைத்தார்கள்.'' (அல் அதபுல் முஃப்ரத்)

நபி(ஸல்) அவர்கள் அந்த கிராமவாசியின் கோரிக்கைக்கு செவி சாய்த்து அதை நிறைவேற்றுவதை தொழுகைக்கான இகாமத்தின் சமயத்தில் கூட சிரமமாகக் கருதவில்லை. தொழுகைக்கு முன் தனது தேவையை நிறைவேற்றிக் கொள்வதற்கு ஆடையைப் பிடித்து இழுத்த கிராமவாசியின் செயல் அவர்களது இதயத்தை சங்கடத்தில் ஆழ்த்தவில்லை. ஏனெனில், அவர்கள் நற்குணத்தின் சங்கமமாக இருந்தார்கள்.

ஒரு முஸ்லிம் தனது சகோதரனிடம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டுமென்பதை கற்றுக் கொடுத்தார்கள். இஸ்லாமிய சமூகம் இத்தகைய சிறப்புப் பண்புகளைக் கொண்டிருக்க வேண்டுமென்ற கருத்தையும் உறுதிப்படுத்தினார்கள்.

முஸ்லிமல்லாத ஒருவரிடம் நற்குணங்கள் காணப்பட்டால் அதற்கு சிறந்த வளர்ப்பு முறைகளும், உயர் கல்விகளும்தான் காரணமாக இருக்கும். ஆனால் முஸ்லிமிடம் காணப்படும் இப்பண்புகளுக்கு முதன்மைக் காரணம் மார்க்கத்தின் போதனைதான். மார்க்கம் இப்பண்புகளை முஸ்லிமின் இயற்கையாகவே மாற்றிவிடுகிறது. முஸ்லிமின் அந்தஸ்தை உலகில் உயர்த்துவதுடன், மறுமையின் தராசில் நன்மையின் தட்டை கனமாக்குகின்றன. மறுமை நாளில் நன்மையின் தராசுத்தட்டை கனமாக்குவதில் நற்பண்புகளுக்கு இணையானது வேறெதுவுமில்லை.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: "மறுமை நாளில் முஃமினின் தராசுத் தட்டில் நற்பண்புகளைவிட கனமானது வேறெதுவுமில்லை. நிச்சயமாக அல்லாஹ் இழி நடத்தை உள்ளவனையும் அருவருப்பாகப் பேசுபவனையும் கோபிக்கிறான்.'' (ஸுனனுத் திர்மிதி)

நற்குணத்தை, ஈமான் பூரணமடைந்ததற்கான அடையாளமாக இஸ்லாம் கூறுகிறது. நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: "ஈமானால் பரிபூரணமானவர் யாரெனில் அவர்களில் குணத்தால் மிக அழகானவரே.'' (ஸுனனுத் திர்மிதி)

நற்குணமுடையவர் அல்லாஹ்வின் அடியார்களில் மிகவும் நேசத்துக்குரியவர் என்பதை இஸ்லாம் வலியுறுத்துகிறது. இதற்கு உஸப்மா இப்னு ஷுரைக் (ரழி) அவர்கள் அறிவித்த நபிமொழி சான்றாகும்.

"நாங்கள் நபி(ஸல்) அவர்களின் சமூகத்தில் எங்களுடைய தலைகளில் பறவை அமர்ந்திருப்பது போல (ஆடாமல் அசையாமல்) அமர்ந்திருந்தோம். நபி(ஸல்) அவர்களின் சபையில் எங்களில் எவரும் பேசமாட்டார்.

அப்போது சிலர் வந்து நபி(ஸல்) அவர்களிடம் "அல்லாஹ்வின் அடியார்களில் அல்லாஹ்வுக்கு மிக நேசத்திற்குரியவர் யார்?' என்று வினவினர்.

நபி(ஸல்) அவர்கள், "அவர்களில் குணத்தால் மிக அழகானவர்'' எனக் கூறினார்கள்.

நற்குணமுடையவர் அல்லாஹ்வின் அன்பிற்குரியவராக இருப்பதில் ஆச்சரியம் எதுமில்லை. எனெனில் நற்குணம் இஸ்லாமில் மகத்தான விஷயமாகும்.

நாம் முன்பு கண்டதுபோல், இது மறுமை நாளில் அடியானின் தராசுத் தட்டில் வைக்கப்படும் மிகக்கனமான அமலாகும். இஸ்லாமின் இரண்டு பெரும் தூண்களான தொழுகை, நோன்புக்கு இணையானதாகும்.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: "தராசுத் தட்டில் வைக்கப்படுவதில் நற்குணத்தைவிட மிகக் கனமான அமல் வேறெதுவுமில்லை. நற்குணம் உடையவரை அவரது நற்குணம் தொழுகை, நோன்பால் கிடைக்கும் அந்தஸ்திற்கு உயர்த்திவிடுகிறது.'' (ஸுனனுத் திர்மிதி, முஸ்னதுல் பஸ்ஸார்)

மற்றோர் அறிவிப்பில்: "ஒரு அடியான் தனது நற்குணத்தால் பகலெல்லாம் நோன்பு நோற்று, இரவெல்லாம் தொழுபவரின் அந்தஸ்தை அடைந்து கொள்வார்'' என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

தங்களது சொல், செயலால் நபி(ஸல்) அவர்கள் நற்குணத்தின் முக்கியத்துவத்தை தோழர்களிடம் உணர்த்தி, அதன்மூலம் தங்களை அழகுபடுத்திக்கொள்ள தூண்டினார்கள்.

நபி(ஸல்) அவர்கள் "அபூதர்ரே! உமக்கு நான் இரண்டு குணங்களைப் பற்றி அறிவிக்கட்டுமா? அவை இரண்டும் செய்வதற்கு மிக இலகுவானவை. மறுமையின் தராசுத்தட்டில் எல்லாவற்றையும் விட மிகக் கனமானவை'' என்று வினவினார்கள்.

அபூதர் (ரழி) "அல்லாஹ்வின் தூதரே! கூறுங்கள்'' என்றார்.

நபி(ஸல்) அவர்கள், ""நற்குணத்தையும் நீண்ட மௌனத்தையும் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். எவனது கைவசம் என் ஆன்மா இருக்கிறதோ அவன் மீது ஆணையாக! இந்த இரண்டைப் போன்ற வேறு எதனாலும் மனிதகுலம் அழகு பெறவில்லை'' என்று கூறினார்கள். (முஸ்னத் அபூ யஃலா)

மேலும் கூறினார்கள்: "நற்குணம் வளர்ச்சியாகும், துற்குணம் அழிவாகும், உபகாரம் ஆயுளை அதிகப்படுத்தும், தர்மம் தீய மரணத்தைத் தடுக்கும்.'' (முஸ்னத் அஹ்மத்)

நபி(ஸல்) அவர்கள்: "யா அல்லாஹ் எனது தோற்றத்தை நீயே அழகுபடுத்தினாய். எனது குணத்தையும் அழகுபடுத்துவாயாக'' என்ற துஆவை வழமையாகக் கூறி வந்தார்கள். (முஸ்னத் அஹ்மத்)

....(நபியே!) நிச்சயமாக நீர் மகத்தான நற்குணமுடையவராகவே இருக்கின்றீர். (அல்குர்அன் 68:4) அல்லாஹு தஅலா தனது திருமறையில் இவ்வாறு கூறியிருந்த போதும் நபி(ஸல்) அவர்கள் தனது குணத்தை அழகுபடுத்துமாறு துஆ செய்ததிலிருந்து நற்குணத்தின் முக்கியத்துவத்தையும், முஸ்லிம்கள் அதை மென்மேலும் வளர்த்துக்கொள்ள வேண்டுமென்பதையும் புரிந்து கொள்ளலாம்.

நற்குணம் என்பது முழுமையானதொரு வார்த்தையாகும். அதனுள் மனிதனை பரிசுத்தப்படுத்தும் குணங்களான வெட்கம், விவேகம், மென்மை, மன்னிப்பு, தர்மம், உண்மை, நேர்மை, பிறர்நலம் நாடுவது, நன்மையில் உறுதி, உளத்தூய்மை, முகமலர்ச்சி போன்ற பல நற்பண்புகள் உள்ளடங்கியுள்ளன.

இஸ்லாமின் சமூகக் கண்ணோட்டத்தைப் பற்றி ஆராய்பவர் அச்சமூகத்தை மேன்மைப்படுத்தும்படியான நற்பண்புகளை வலியுறுத்தும் ஏராளமான சான்றுகளை கண்டுகொள்வார்.

சமூகத்தில் முஸ்லிம் தனித்தன்மை பெற்று விளங்குவதற்கு இஸ்லாம் மிகுந்த முன்னுரிமை அளிக்கிறது. பொதுப்படையானதாக இல்லாமல் சமுதாயத்தின் ஒவ்வொரு நபர்களின் ஒவ்வொரு செயலிலும் அப்பண்புகளை இஸ்லாம் வளரச் செய்திருக்கிறது.

சமூகம் அனைத்தையும் நற்பண்புகளால் அலங்கரித்த சாதனையை இஸ்லாமை தவிர வேறெந்த கொள்கையாலும் சாதிக்கமுடியவில்லை. இறையச்சமுள்ள முஸ்லிம் சமூகத்தில் தனித்தன்மை பெற்றுத் திகழ்வதற்காக, இஸ்லாம் எற்படுத்தியுள்ள மார்க்க நெறிகளைப் பின்பற்றுவது சிரமமானதல்ல என்பதை அதன் சான்றுகளை ஆராய்பவர்கள் அறிந்துகொள்வர்.

இறைவன் எற்படுத்திய வரம்புக்குள் நின்று, அவனது விலக்கலைத் தவிர்த்து, மார்க்க நெறிகளை முழுமையாக ஏற்று, முஸ்லிமின் இலக்கணமாகத் திகழ்பவரின் ஒவ்வொரு செயலிலும் நற்பண்புகள் பிரகாசிக்கின்றன. முஸ்லிம் மோசடிக்காரராக, வஞ்சகராக, எமாற்றுபவராக, பொறாமைக்காரராக இல்லாமல் அனைத்து மக்களிடமும் நற்குணத்துடன் நடந்துகொள்வார்.

நன்றி: ReadIslam.net

Saturday, May 10, 2008

எல்லா தினங்களும் அன்னையர் தினங்களே!

முஹம்மது நபி (ஸல்) அவர்களிடம் ஒருவர் "இறைத்தூதரே! நான் அழகிய முறையில் நடந்துகொள்ள மிகவும் தகுதியானவர் யார்?'' என்று கேட்டார்.

நபி (ஸல்) அவர்கள் "உமது தாய்'' என்றார்கள்.

"பிறகு யார்?'' என்று கேட்டார்.

"உமது தாய்'' என்றார்கள்.

"பிறகு யார்?'' என்று கேட்டார்.

"உமது தந்தை'' என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

(ஆதாரம்: புகாரி)

இஸ்லாம் வலியுறுத்தும் மிக முக்கியக் கடமைகளில் பெற்றோருக்கு உபகாரம் செய்வது குறிப்பிடத்தக்கதாகும். வேறெந்த மதத்திலும் இல்லாத, மனிதகுலம் கண்டிராத உயரிய அந்தஸ்தை பெற்றோருக்கு இஸ்லாம் மட்டுமே வழங்கியுள்ளது. அல்லாஹ்வை நம்பிக்கை கொள்வதற்கும், அவனை வணங்குவதற்கும் அடுத்ததாக பெற்றோருக்கு உபகாரம் செய்வதை இஸ்லாம் அமைத்துள்ளது.

தாய் தந்தைக்கு உபகாரம் செய்யும்படியும் அவர்களிடம் பணிவன்புடன் நடந்து கொள்ளும்படியும் அறிவுறுத்தும் குர்ஆன் வசனங்கள்:

அல்லாஹ்வையே வணங்குங்கள். அவனுக்கு யாதொன்றையும் இணையாக்காதீர்கள். பெற்றோருக்கு நன்றி செய்யுங்கள். (அல்குர்அன் 4:36)

(நபியே!) உமதிறைவன் தன்னைத்தவிர (மற்றெவரையும்) வணங்கக் கூடாதென்றும் (கட்டளையிட்டிருப்பதுடன்) தாய், தந்தைக்கு நன்றி செய்யும்படியாகவும் கட்டளையிட்டிருக்கிறான். அவர்களில் ஒருவரோ, அல்லது இருவருமோ முதுமையை அடைந்துவிட்ட போதிலும் உம்மிடமிருந்து அவர்களை வெருட்டவும் வேண்டாம், அவர்களை (நிந்தனையாக)ச் "சீ' என்று சொல்லவும் வேண்டாம். அவர்களிடம் (எதைக் கூறியபோதிலும் புஜம் தாழ்த்தி) மிக்க மரியாதையாக(வும் அன்பாக)வுமே பேசும்.

அவர்களுக்கு மிக்க அன்புடன் பணிந்து நடப்பீராக! அன்றி, என் இறைவனே! நான் குழந்தையாக இருந்தபோது (மிக்க அன்பாக) என்னை அவர்கள் வளர்த்து, பரிபாலித்த பிரகாரமே, நீயும் அவ்விருவர் மீதும், அன்பும் அருளும் புரிவாயாக! என்றும் நீர் பிரார்த்திப்பீராக!
(அல்குர்அன் 17:23,24)

தாய் தந்தைக்கு நன்மை செய்யும்படியாக நாம் மனிதனுக்கு நல்லுபதேசம் செய்திருக்கின்றோம்... (அல்குர்அன் 29:8)

தமது தாய் தந்தை(க்கு நன்றி செய்வது)பற்றி மனிதனுக்கு நாம் நல்லுபதேசம் செய்தோம். அவனுடைய தாய், துன்பத்தின் மேல் துன்பத்தை அனுபவித்து (கர்ப்பத்தில்) அவனைச் சுமந்தாள்... (அல்குர்அன் 31:14)

இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பெற்றோருக்குப் பணிவிடை செய்வதன் சிறப்பைப் பற்றி பல சந்தர்ப்பங்களில் கூறியுள்ளார்கள்.

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூது (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நான் நபி (ஸல்) அவர்களிடம் "அல்லாஹ்வுக்கு உவப்பான அமல் எது'' என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள் "தொழுகையை அதற்குரிய நேரத்தில் நிறைவேற்றுவது'' என்றார்கள். "பின்பு என்ன'' என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள் "பெற்றோருக்கு உபகாரம் செய்வது'' என்றார்கள். "பின்பு என்ன'' என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள் "அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிவது'' என்றார்கள்.
(ஆதாரங்கள்: ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

ஒரு மனிதர் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி ஹிஜ்ரத் மற்றும் ஜிஹாது செய்வதற்கு வாக்குபிரமானம் செய்ய விரும்பி நபி (ஸல்) அவர்களிடம் அனுமதிகோரி நின்றார். நபி (ஸல்) அவர்கள் அவரிடத்தில் "உமது பெற்றோரில் எவரேனும் இருவர் இருக்கிறார்களா?'' என்று கேட்டார்கள். அம்மனிதர் "ஆம்! இருவரும் இருக்கிறார்கள்'' என்றார். நபி (ஸல்) அவர்கள் "நீர் அல்லாஹ்விடம் நற்கூலியை விரும்புகிறீரா?'' என்று கேட்டார்கள். அம்மனிதர் "ஆம்'' என பதிலளித்தார். கருணைமிகு நபி (ஸல்) அவர்கள் ""உமது பெற்றோரிடமே நீர் திரும்பிச் சென்று அவ்விருவர்களிடமும் உபகாரமாக நடந்துகொள்'' என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)

அபூ பக்கர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

"உங்களுக்கு பாவங்களிலெல்லாம் மிகப்பெரிய பாவத்தை அறிவிக்கட்டுமா'' என நபி (ஸல்) அவர்கள் மூன்றுமுறை கேட்டார்கள்.

நாங்கள் "அறிவித்துத் தாருங்கள் அல்லாஹ்வின் தூதரே!'' என்று கூறினோம்.

நபி (ஸல்) அவர்கள் "அல்லாஹ்வுக்கு இணைவைத்தல், பெற்றோருக்கு நோவினை செய்தல்'' என்று கூறினார்கள்.
(ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

Friday, May 09, 2008

மனித நேயத்திற்கு ஒரு வரைவிலக்கணம்!

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண
நன்னயம் செய்து விடல் - திருக்குறள்
உனக்கு தீங்கு செய்தவருக்கும் நீ நன்மையே புரிவாய்! - முஹம்மது நபி
**********


இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) இஸ்லாமியப் பிரச்சாரம் தொடங்கிய காலம் இது!

ஒரு நாள் மக்கா நகர வீதி வழியாக நபியவர்கள் நடந்து கொண்டிருந்தார்கள். அப்போது வயதான மூதாட்டி ஒருவர் மூட்டை முடிச்சுகளை சுமந்த வண்ணம் தள்ளாடித் தள்ளாடி வந்து கொண்டிருந்தார்.

நபியவர்கள் அந்த வயோதிபப் பெண்ணிடம் சென்று “தாயே! நீங்கள் விரும்பினால் உங்கள் துணிமூட்டைகளை என்னிடம் தாருங்கள்! யான் அதை உங்களுக்காக சுமந்து வருகிறேன்” என்று கேட்டார்கள்.

“இந்தாப்பா ரொம்ப நன்றி!” என்று கூறி கிழவி துணி மூட்டையை நபி அவர்களிடம் கொடுத்தாள். “திரு மக்காவை விட்டு எங்கே அம்மா போகிறீர்கள்?” என்று மாநபியவர்கள் பேச்சுக் கொடுத்தார்கள்.

“என் வயிற்றெரிச்சலை கிளறாதே! நான் எங்கேயாவது போகிறேன். முகம்மது என்றொருவர் புதிதாக வந்து தான் இறைவனின் இறுதித் தூதராம். முந்தைய வேதங்கள் எல்லாம் செயலிழந்து போய்விட்டதாம். அனைவரும் அவரது நேரான வழியை பின்பற்ற வேண்டுமாம் என்கிறாராம். நான் ஒரு யஹூதிப் பெண். எனது மார்க்கத்தை நான் எப்படி விட முடியும்? எங்களது சனங்கள் அவரைப் பற்றி பலதும் பத்தும் கூறுகிறார்கள். அவர் இருக்கும் மக்காவில் எனக்கு குடியிருக்க விருப்பமில்லை. அதுதான் ஊரை விட்டே கிளம்பி விட்டேன்..” என்று தொடர்ந்தாள் கிழவி. முஹம்மது நபி அவள் கூறுவதைக் கேட்டுக் கொண்டு அமைதியாக வந்தார்கள்.

“எனது சாமான் மூட்டையைத் தந்து விட்டு சுமை கூலியாக இந்தச் சில்லைறையை வைத்துக் கொள்” என்று அவள் கூறி சில திர்ஹம்களை நீட்டினாள். கிழவியிடம் அவளது பொதியைக் கொடுத்த நபி அவர்கள் கூலியாகப் பணம் ஏதும் வேண்டாம் என்று உறுதியாக மறுத்து விட்டார்கள்.

கிழவிக்கு ஆச்சரியம்! “பலவீனமானவர்களிடம் தட்டிப் பறித்துக் கொண்டு ஓடுகின்ற கொள்ளைக் கூட்டம் நிறைந்த இந்த ஊரில் இப்படியும் ஒரு நல்ல மனிதரா? நீ யாரப்பா? உன் பெயர் என்ன?” என்று அந்தக் கிழவி கேட்டாள்.

அதற்கு நபியவர்கள், “இதுவரை குறை கூறிக் கொண்டு திட்டிக் கொண்டு வந்த இறைத்தூதர் வேறு யாருமல்ல. அந்த முஹம்மது நான் தானம்மா” என்று பதிலளித்தார்கள்.

“இவ்வளவு நல்ல பண்புகள் நிறைந்தவரையா நான் திட்டி வந்தேன்? என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்!” என்று கூறி அவள் மனம் வருந்தினாள்.

இந்த சம்பவம் அடிக்கடி பரவலாக நினைவு படுத்தப் பட்டாலும் இதில் அடங்கியுள்ள தத்துவங்களை நாம் ஆழமாக யோசிப்பதில்லை.

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மூதாட்டிக்கு உதவும்போது அவளது சாதி சமயத்தைப் பார்க்கவில்லை. அவள் தெரியாத்தனமாக கூறிய வசை மொழிகளை பெருந்தன்மையோடு சகித்துக் கொண்டார். பலவீனமானவரின் சுமையைத் தனது சுமைபோல தோளில் சுமந்து கொண்டார். இந்தப் பணிக்காக அவர் எந்த லோகாதாய நன்மைகளையும் எதிர்பார்க்கவில்லை. இதுவே உண்மையான மனித நேயமாகும்.

- ஹஸன் அஸ்ஹரீ எழுதிய 'மனிதன் புனிதனாக' நூலிலிருந்து...

Monday, May 05, 2008

எல்லா உயிர்களிடமும் அன்பு காட்டுங்கள்!

பூமியில் ஊர்ந்து செல்லும் ஜீவராசிகளும் வானில் தனது இரு இறக்கைகளை விரித்துப் பறக்கும் பறவைகளும் உங்களைப் போன்ற சமூகங்களே அன்றி வேறில்லை.

திருக்குர்ஆன் 6:38

**********

நேர்மையாக இரு! உண்மையே பேசு!
எல்லையற்ற பொறுமை கொள்!
அன்புக்காக நோன்பிரு!
அது உன் செயல்களை வரையறுக்கட்டும்!
எல்லோருடைய நம்பிக்கையும் பெறுக!
அனைவரையும் சமமாக மதி!
சிந்தித்து அறிவுடன் செயல்படு!
வலிமையும் கருணையும்
நெஞ்சில் நிலைக்கட்டும்!
எல்லா உயிர்களிடமும் கருணை காட்டு!
- ஜேம்ஸ் ஆலன்

**********

God is love
and he who lives in love lives in God and
God lives in him!

**********

எல்லா உயிர்களிடத்தும் அன்பு காட்டுமாறு எல்லா சமயங்களும் வலியுறுத்துகின்றன. அன்பும் ஜீவகாருண்யமும் எவரிடத்தில் காணப்படுகின்றதோ அவர் புனிதத் தன்மைக்கு மிக அண்மையில் இருக்கிறார்.

முஹம்மது நபி (ஸல்) கீழ்வரும் சம்பவத்தைக் கூறி இக்கருத்தை வலியுறுத்துகிறார்.

விபச்சாரியான பெண்ணொருத்தி ஒரு நாள் சுட்டெரிக்கும் வெயிலில் பாலைவனத்தினூடாக சென்று கொண்டிருந்தாள். தண்ணீர் தாகத்தால் நா வறண்டது. ஒரு கிணற்றை அண்மித்து அதனுள் இறங்கி தாகம் தீர நீர் அருந்தி விட்டு கிணற்றிலிருந்து வெளியேறினாள்.

அப்போது நாயொன்று நாவை தொங்கப்போட்டுக் கொண்டு ஏக்கம் நிறைந்த பார்வையோடு கிணற்றுக்கு வெளியே நீருக்காக ஏங்கி நின்றதை இப்பெண்மணி அவதானித்தாள். அதன் மீது இரக்கம் கொண்டு தனது காலுறையை கழற்றி அதில் நீர் நிரப்பி நாயின் வாயில் புகட்டி அதன் தாகத்தை போக்கி மகிழ்ந்தாள்.

இவளது இந்த ஜீவகாருண்யச் செயலைப் பாராட்டி இறைவன் அவளது குற்றம் குறைகளையெல்லாம் மன்னித்து அவளுக்கு சுவனம் உண்டு என்ற சுப செய்தியை அறிவித்தான் - ஹதீது தெளிவுரை

இன்னொரு பெண்ணைப் பற்றியும் முஹம்மது நபி (ஸல்) பிரஸ்தாபித்தார்:

"அவள் நல்லவள் என்றாலும் தனது வீட்டில் பூனை ஒன்றை வளர்த்து வந்தாள். அதனைக் கட்டிப் போட்டு அதற்கு ஒழுங்காக தீனி போட்டு பராமரிக்காத காரணத்தால் அவளுக்கு நரகம்தான் ஒதுங்குமிடமாகும்."

பிள்ளைகள் வீட்டில் விளையாட்டுக்காகவேனும் ஈ, எறும்பு, தும்பி போன்ற பூச்சி இனங்களைக் கொல்ல அனுமதிக்காதீர்கள். சாதாரணமாக இந்த உயிர் வதை பிற்காலத்தில் அவர்களைக் கொலைஞர்களாக ஆக்கிவிடவும் கூடும்.

- ஹஸன் அஸ்ஹரீ எழுதிய 'மனிதன் புனிதனாக' நூலிலிருந்து...

தள்ளிப் போட்டது போதும்!

சில நேரங்களில் காலம் மிக மிக மெதுவாக நகர்வது போல நமக்குத் தோன்றும். நாம் பொறுமையிழந்து வேகமாக கடந்துச் செல்ல முயல்வோம். வேறு சில நேரங்களில் நன்மையான காரியம் ஒன்றை செய்ய நினைத்து, அதை செயல் படுத்துவதை தள்ளிப் போட்டுக் கொண்டே இருப்போம்; ஏதோ ‘நாளை நமது கையில்’ என்று நிச்சயமாக நமக்குத் தெரிவது போல! கடந்த காலத்தை புறட்டிப் பார்த்தால் நாம் இது போல தள்ளிப் போட்டு பிறகு செய்யாமலே போன பல காரியங்கள் நினைவுக்கு வரும். இப்படி தள்ளிப் போட்டு தள்ளிப் போட்டே நாம் வாழ்வின் பெரும்பகுதியை செலவளித்து விட்டோம். கடந்து போன அக்காலக் கட்டத்தில் நாம் நமது மறுமை வாழ்விற்காக சேகரித்துக் கொண்டது மிக சொற்பமாகத்தான் இருக்கும்!

காலத்தின் மீது சத்தியமாக!நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில்
இருக்கிறான்.ஆயினும் எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர! (அவர்கள் நஷ்டத்திலில்லை!)
-
(குர்ஆன் 103: 1-3)


திருமறையின் இந்தச் சின்னஞ்சிறு அத்தியாயம், ஒரு பேருண்மையை பறைசாற்றுகிறது. ஒவ்வொரு வினாடியும் காலம் கழிந்து கொண்டே இருக்கிறது. அதோடு சேர்ந்து நம் வாழ்வும்தான்! இதை பெரும்பாலும் நாம் உணர்வதில்லை! மாறாக, யாரெல்லாம் நற்காரியங்களைச் செய்து நன்மைகளை தமது கணக்கில் வரவு வைத்துக் கொண்டார்களோ, அவர்கள்தாம் வெற்றி பெற்றவர்கள். காலத்தை தம் கைவசப் படுத்தியவர்கள்!

ஒரு நல்ல செயலை, ஒரு நல்ல சொல்லை, ‘அப்புறம் செய்யலாம்’ ‘அப்புறம் சொல்லலாம்’ என நாம் தள்ளிப் போட்டுக் கொண்டே இருந்தால், அந்த ‘அப்புறம்’ வராமலே போய்விடலாம். கானல் நீரைப் போல நம் கண்ணுக்குத் தெரிந்து பின் காணாமல் போய் விடலாம்.

அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அறிவிக்கிறார்கள்:
என்னை வளைத்துப் பிடித்(து அணைத்)தவர்களாக அல்லாஹ்வின் தூதர் கூறினார்கள்:
இவ்வுலகில் ஒரு நாடோடியைப் போல அல்லது வழிப்போக்கனைப் போல வாழப் பழகிக் கொள். மண்ணறைக்குச் சென்று விட்டவர்களின் நினைவை மனதில் இருத்திக் கொள். காலையில் எழும்போது மாலை வரை (உயிரோடு) இருப்போம் என்று உறுதி கொள்ளாதே! மாலையை அடைந்தால் (மறுநாள்) காலை வரை இருப்போம் என்றும் உறுதி கொள்ளாதே! நோயுறுமுன் உன் உடல் நலத்தைப் பயன் படுத்திக் கொள்; மரணம் வருமுன் உன் வாழ்வைப் பயன் படுத்திக் கொள்.அப்துல்லாஹ்! நாளைக்கு உனது பெயர் என்னவாயிருக்கும் என்று உனக்குத் தெரியாது (அப்துல்லாஹ்வா மய்யித்தா என்று).
அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இபுனு உமர், பதிவு: திர்மிதீ 2255

நம்மிடம் ஒரு மூட்டை விதை நெல்லும் அதை பயிரிட வளமான நிலமும் கொடுக்கப் பட்டால் நாம் என்ன செய்வோம்? நம் வருங்காலத் தேவைகளை கருத்தில் கொண்டு அந்த விதை நெல்லை விதைத்து அதன் விளைச்சலை அறுவடை செய்வதைத்தான் விரும்புவோம். அப்படி இல்லாமல் அந்த விதை நெல்லை அலட்சியமாக தூக்கி எறிந்தால் பிற்காலத்தில் கைசேதமடையப் போவது நாம்தானே!

நம் வாழ்நாளின் ஒவ்வொரு நிமிடமும் ஒரு விதை நெல்லைப் போன்றதே! அதை எவ்வகையில் விதைத்தால் மறுமை என்னும் பிற்காலத்தில் நன்மைகளை அறுவடை செய்யலாம் என்பதையே இஸ்லாம் எனும் வாழ்க்கை நெறி நமக்கு விளக்குகிறது.

நமக்குள் தோன்றும் தீய எண்ணங்களையும் வீணான செயல்களையும் கடினமான வார்த்தைகளையும் வேண்டுமானால் இன்னொரு நாளைக்காக தள்ளிப் போடுவோம். இதற்கான ‘இன்னொரு நாள்’ வராமலே போனால் கூட சரிதான்! ஆனால், நமது நல்ல எண்ணங்கள், செயல்படுத்த வேண்டிய நல்ல காரியங்கள், அன்பை வெளிப்படுத்தும் சொற்கள் மற்றும் செயல்கள், இவற்றை தள்ளிப் போட்டதெல்லாம் போதும்! இவற்றை காலம் உள்ள போதே, இன்றே, இப்பொழுதே நிறைவேற்றுவோம், இன்ஷா அல்லாஹ்!

நன்றி: இஸ்லாம் கல்வி.காம்

நிழல் தந்த மரம்!


தோப்பு ஒன்றில் பெரிய ஆப்பிள் மரம் ஒன்று நன்கு வளர்ந்து கிளை பரப்பி நின்றது. ஒரு சிறுவன் அந்த மரத்தினடியில் விளையாடிக்கொண்டிருப்பான். அந்த மரத்தின் மீது ஏறி விளையாடுவதும் அதன் கனிகளை பறித்து புசிப்பதும் அவனுக்கு மிகவும் பிடிக்கும். களைப்பாக இருக்கும்போது அந்த மரம் தரும் நிழலில் உறங்கி ஓய்வெடுப்பான்.

காலம் உருண்டோடியது. அந்தச் சிறுவன் கொஞ்சம் வளர்ந்து விட்டான். இப்போதெல்லாம் அந்த மரத்தின் நிழலில் விளையாட அவன் வருவதில்லை. ஒரு நாள் அவன் மரத்தை நாடி வந்தான். அந்த மரம் அவனை அன்போடு வரவேற்றது. “வா குழந்தாய்! வந்து என் நிழலில் விளையாடு!” அந்தச் சிறுவன் சொன்னான், “நான் இன்னும் சின்னக் குழந்தை அல்ல. மரங்களுடன் என்னால் விளையாட முடியாது. நான் விளையாடுவதற்கு விளையாட்டு பொம்மைகள் தேவை. அவற்றை வாங்க பணம் தேவை.”

அந்த மரம் சொன்னது, “என்னிடம் பணம் கிடையாது. ஆனால் நீ என்னிடமிருந்து ஆப்பிள் பழங்களை பறித்துச் சென்று அவற்றை விற்றால் உனக்கு தேவையான பணம் கிடைக்கும்.”

அந்தச் சிறுவன் அப்படியே செய்தான். பழங்களை விற்றதில் அவனுக்கு நிறைய பணம் கிடைத்தது. அதைக் கொண்டு தனக்கு பிடித்தமான விளையாட்டுப் பொருட்களை அவன் வாங்கிக் கொண்டான். ஆனால் அவன் மீண்டும் மரத்தின் பக்கம் போகவில்லை. மரம் மீண்டும் தனிமையில் விடப்பட்டது.

சில ஆண்டுகள் கழித்து ஒரு இளைஞன் அந்த மரத்தை நோக்கி வந்தான். அந்தச் சிறுவன் தான் இப்போது வளர்ந்து இளைஞனாக இருக்கிறான். அந்த மரம் அவனை அடையாளம் கண்டு கொண்டது. “வா மகனே! ஏன் இப்படி சோகமாக இருக்கிறாய்? வந்து என் நிழலில் கொஞ்ச நேரம் உட்கார். இவ்வளவு நாட்களாக உன்னைக் காணாமல் நான் ஏங்கிப் போயிருக்கிறேன்” என்று அவனை அழைத்தது.

அந்த இளைஞனோ சலித்துக் கொண்டான், “எனக்கு அதற்கெல்லாம் நேரமில்லை. என் குடும்பத்திற்காக நான் உழைக்கிறேன். அவர்களுக்காக நான் ஒரு வீடு கட்ட வேண்டும். அதற்கு எனக்கு பணம் தேவைப்படுகிறது.”
அந்த மரம் சொன்னது, “கவலையை விடு மகனே! இப்போதும் என்னிடம் பணமில்லை. ஆனால், நீ எனது கிளைகளை வெட்டி உனது வீட்டை கட்டிக் கொள்ளலாம்.” அந்த இளைஞன் சந்தோஷமாக அந்த மரத்தின் கிளைகளையும் நடுப்பகுதியையும் வெட்டி எடுத்துச் சென்று தனது குடும்பத்திற்காக வீடு கட்டிக்கொண்டான். அடிப்பகுதி மட்டுமே மிச்சமிருந்த அந்த மரம் மீண்டும் தனிமையிலாழ்ந்தது.

நீண்ட காலம் கழித்து அந்த இளைஞன் மீண்டும் அந்த மரத்தை நாடி வந்தான். இப்போது அவன் இளைஞனல்ல. மூப்படைந்திருந்த அவன் மிக களைப்படைந்தவனாகவும் சோகமானவனாகவும் இருந்தான். மரம் அவனிடம் கேட்டது, “மகனே, ஏன் இப்படி சோகமாக இருக்கிறாய்? என் உதவி எதுவும் உனக்கு தேவையா? ஆனால், உனக்கு உதவ என்னிடம் இப்போது ஆப்பிள்களும் இல்லை, கிளைகளும் இல்லை. உனக்கு ஆறுதலாக நிழல் கொடுக்கக்கூட முடியாத நிலையில் நான் இருக்கிறேன்.”

அந்த மனிதன் விரக்தியாக சொன்னான், “எனக்கு வாழ்க்கையே வெறுப்பாகி விட்டது. நான் மிக களைத்து விட்டேன். தனியானவனாகவும் ஆகிவிட்டேன். எனக்கு உன் ஆறுதல் மொழிகள் தேவை. உனது வேரில் நான் அமர்ந்து கொள்ளலாமா?”

மரம் ஒன்றும் சொல்லவில்லை. அந்த மனிதன் அங்கு அமர்ந்து கொண்டான். தனிமையாக இருந்த இருவரும், ஒருவர் மற்றவருக்கு துணை என்ற எண்ணத்தில் மகிழ்வடைந்தார்கள். தங்கள் நிலையை எண்ணி அவர்களுக்கு அழுகையும் வந்தது.

இந்த கதையை படிக்கும் நாம் அந்த சிறுவன் எத்தகைய கொடூரமான சுயநலவாதியாக இருந்திருக்கிறான் என அவன் மேல் கோபமடைவோம். கொஞ்சம் பொறுங்கள்! ஒருவகையில் நாம் அனைவருமே அந்த சிறுவனைப்போலத்தான் நடந்து கொள்கிறோம், நமது பெற்றோர்களை பொறுத்த வரையில்!

மரம் என உருவகமாக சொல்லப்பட்டது நமது பெற்றோர்களைத்தான் என கொண்டு சற்று யோசனை செய்து பாருங்கள்!

நாம் சிறுவயதாக இருக்கும்போது பெற்றோரின் அரவணைப்பு நமக்கு தேவைப்படுகிறது. அவர்களுடன் இருக்கும்போது நாம் மிக பாதுகாப்பாக உணர்கிறோம். நாம் வளர்ந்த பிறகு அவர்களின் நிழலில் இருப்பது நமக்கு பிடிப்பதில்லை. அவர்களை தனிமையில் விட்டு நாம் விலகிச்செல்கிறோம். அவர்களின் உதவி தேவை எனும்போது மட்டுமே நாம் திரும்ப வருகிறோம்.

அவர்களுடன் செலவழிக்க நமக்கு நேரம் கூட கிடைப்பதில்லை. ஆனால் பாசமிகு பெற்றோர் நமக்காக நாம் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதற்காக தன்னிடம் இருக்கும் அனைத்தையும் தரத் தயாராக இருக்கிறார்கள். பதிலுக்கு அவர்கள் எதிர்பார்ப்பது என்னவோ தம் பிள்ளைகளின் பாசமும் கவனிப்பும்தான். இதை நாம் சரியாக உணர்ந்து கொண்டிருக்கிறோமா?

உங்கள் பெற்றோரை மறந்து விடாதீர்கள். முடிந்தவரை அவர்களுடன் நேரம் செலவழியுங்கள். உங்கள் பாசத்தையும் பரிவையும் அவர்களிடம் காட்டுங்கள். நீங்கள் சந்தோசமாக இருப்பதைப் பார்த்து தானும் சந்தோசமடையும் ஜீவன்கள் அவர்கள். அவர்களுக்கு நன்றிக்கடன் செலுத்துங்கள்.
(நபியே!) உமதிறைவன் தன்னைத்தவிர (மற்றெவரையும்) வணங்கக் கூடாதென்றும் (கட்டளையிட்டிருப்பதுடன்) தாய், தந்தைக்கு நன்றி செய்யும்படியாகவும் கட்டளையிட்டிருக்கிறான். அவர்களில் ஒருவரோ, அல்லது இருவருமோ முதுமையை அடைந்துவிட்ட போதிலும் உம்மிடமிருந்து அவர்களை வெருட்டவும் வேண்டாம், அவர்களை (நிந்தனையாக)ச் “சீ’ என்று சொல்லவும் வேண்டாம். அவர்களிடம் (எதைக் கூறியபோதிலும் புஜம் தாழ்த்தி) மிக்க மரியாதையாக(வும் அன்பாக)வுமே பேசும்.

அவர்களுக்கு மிக்க அன்புடன் பணிந்து நடப்பீராக! அன்றி, என்
இறைவனே! நான் குழந்தையாக இருந்தபோது (மிக்க அன்பாக) என்னை அவர்கள் வளர்த்து, பரிபாலித்த பிரகாரமே, நீயும் அவ்விருவர் மீதும், அன்பும் அருளும் புரிவாயாக! என்றும் நீர் பிரார்த்திப்பீராக! (அல்குர்அன் 17:23,24)
இஸ்லாம் கல்வி.காம்