Sunday, June 29, 2008

நம் குடும்பத்தில் ஒரு முஸ்லிம்!

இஸ்லாமை தமது வாழ்க்கை நெறியாக ஏற்க விரும்பும் ஒருவர் முஸ்லிமாக மாறும் வழிமுறை மிக எளிதானது. ஷஹாதா எனப்படும் நம்பிக்கை உறுதிமொழியை மனதால் ஏற்று வாயால் மொழிந்தால் போதும். பிற மதங்களில் இருப்பதுபோல வெற்றுச் சடங்குகள் தேவையில்லை. முஸ்லிமாக ஒருவர் மாறும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள நீங்கள் செல்வீர்களென்றால் வீடியோ கேமராவெல்லாம் எடுத்துச் செல்லத் தேவையிருக்காது. கேமராவின் மூடியை நீங்கள் திறக்குமுன்பே நிகழ்ச்சி முடிந்து விடக்கூடும்!

முஸ்லிமாக மாற விரும்புபவர் மிக எளிமையாக, இரு முஸ்லிம்களின் சாட்சியுடன் ‘வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாரும் இல்லை; முஹம்மது (ஸல்) அவர்கள் இந்த உலகிற்கு இறுதியாக அனுப்பப்பட்ட இறைத்தூதர்’ என்ற உறுதிமொழியை மொழியவேண்டும். அவ்வளவுதான். அதற்குமேல் எந்தச் சடங்குமில்லை.

ஆனால், அந்தப் புதிய முஸ்லிம்களுக்கு ‘ஷஹாதா’ சொல்வது ஒரு புதிய வாழ்க்கை முறையின் துவக்கம்தான். இது ஒரு முன்னுரை மாதிரி. அல்லது அவர்கள் வாழ்வில் ஒரு அத்தியாயம் முடிந்து இன்னொரு அத்தியாயம் துவங்குகிறது என்றும் சொல்லலாம்.

ஒருவகையில் இது அவர்கள் வாழ்வை முழுவதுமாக மாற்றி அமைக்கப்போகும் அனுபவம். கார்களை சுத்திகரிப்புச் செய்வது போல, இது ‘ஆன்மீக சுத்திகரிப்பு’ என்று சொல்லலாம். சுத்திகரிப்புச் செய்யப் பட்ட கார் வழுக்கள் நீக்கப் பட்டுப் பளபளப்பது போல அவர் பாவங்கள் நீக்கப்பட்டு, வாழ்வதன் நோக்கம் தெளிவாகி புதிய மனிதராக வாழ்க்கையைத் தொடர்கிறார். இன்னொரு வகையில் பார்த்தால், அடிப்படையில் அவர் அதே மனிதர்தான். ஒரு ஃபோர்டு கார் சுத்திகரிப்புச் செய்யு முன்னரும் ஃபோர்டு காராகத்தானே இருந்தது?.

சில புதிய முஸ்லிம்களின் குடும்பத்தினருக்கு இதைப் புரிந்து கொள்வதுதான் சிரமமாக இருக்கிறது; உண்மையைச் சொல்வதென்றால், சில புதிய முஸ்லிம்களுக்கும் அப்படித்தான் தோன்றுகிறது. அவர்களில் பெரும்பாலானோர் தொழுகை, நோன்பு போன்ற செயல்களில் ஈடுபடுவதோடு, பெயர், தாடி, ஆடை போன்ற புறத் தோற்ற மாறுதல்களிலும் அவசரம் காட்டுவது வழக்கிலிருக்கிறது.

இந்த மாறுதல்களிலும் தவறேதுமில்லைதான்! இஸ்லாம் சிலவற்றைக் கடமையாக்கியிருக்கிறது. சிலவற்றை முஸ்லிம்களுக்குப் பரிந்துரைத்திருக்கின்றது. ஆனால் பரிந்துரைக்கப்பட்டவற்றையும் செய்தால்தான் ஒருவர் முழு முஸ்லிமாக இருக்க முடியும் என்பதல்ல. சில சமயங்களில் ஒரு புதிய முஸ்லிம் தன் புறத் தோற்றங்களை மாற்றிக் கொள்வதில் காட்டும் அவசரம் அவரது முஸ்லிமல்லாத பிற குடும்ப உறுப்பினர்களுக்குக் குழப்பத்தை உண்டாக்குகிறது. இதனால் அவர்கள் மனம் புண்படவும் வாய்ப்பிருக்கிறது.

“உன் பெயரை ஏன் ஒரு அரேபியப் பெயராக மாற்றிக் கொண்டிருக்கிறாய்? நாங்கள் உனக்கு வைத்த பெயரில் என்ன குறை கண்டு விட்டாய்?”

“ஏன் இப்படி வித்தியாசமான உடைகளை அணியத் தொடங்கி விட்டாய்?”

“முக்காடு அணிய வேண்டியத் தேவை திடீரென்று உனக்கு ஏன் ஏற்பட்டது? நான் பார்க்கும் ஆசிய முஸ்லிம் பெண்களில்கூட பாதிப் பேர் இதை அணிவதில்லையே?”

“இப்படி எல்லா நேரங்களிலும் பள்ளிவாசலே கதி என்று கிடந்தால், உன்னை யாராவது மூளைச் சலவை செய்துவிடுவார்களோ என்று எனக்கு பயமாக இருக்கிறது. என் குடும்பத்தில் ஒரு பயங்கரவாதியைச் சேர்த்து வைத்துக் கொள்ள என்னால் முடியாது”

இப்படியெல்லாம் கேள்விகள் பிறக்கலாம்.

ஒருவகையில் பார்த்தால், இது போன்ற எதிர்வினைகளை எதிர்கொள்வது கூட ஆரோக்கியமானதொரு விஷயம்தான். முஸ்லிமல்லாத குடும்ப உறுப்பினர்கள் இஸ்லாம் பற்றிச் சரியான முறையில் அறிமுகம் செய்விக்கப் படாததால்தான் இந்தக் கேள்விகளைக் கேட்கிறார்கள். புதிய முஸ்லிம் தமது குடும்பத்தினரின் கேள்விகளுக்கு பதில் சொல்வதற்காகவேனும் தாம் புதிதாக ஏற்றுக் கொண்ட கொள்கைகளைத் தொடர்ந்து சீர்தூக்கிப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். கேட்கப்படும் கேள்விகளுக்குத் தகுந்த முறையில் பதில் சொல்ல வேண்டும். இது இரு தரப்பினருக்குமே நன்மை தரக்கூடியதுதான்.

இஸ்லாம் பற்றி இன்றையச் சூழலில் நிலவும் எதிர்மறைப் பிம்பங்களுக்கு காரணம், அதன் கொள்கைகளைப் பற்றி சரியான முறையில் அறியாமல் இருத்தல் அல்லது இனம்புரியாத ஓர் அச்சம்தான். புதிய முஸ்லிம்கள் இந்தச் சூழ்நிலையைச் சாதகமாக்கிக் கொண்டு, இஸ்லாம் பற்றித் தம் குடும்பத்தினருக்குத் தகுந்த முறையில் விளக்கலாம்.

“இல்லை அம்மா! இஸ்லாம் அப்படிப்பட்டதல்ல. நான் இஸ்லாத்தில்தான் இணைந்திருக்கிறேன்; அல்-கொய்தாவில் அல்ல.”

“இஸ்லாம் அமைதியை வலியுறுத்தும் மார்க்கம்; வன்முறையைத் தூண்டும் மார்க்கமல்ல. இஸ்லாமின் பெயரால் அக்கிரமமான காரியங்களில் ஈடுபடுபவர்கள் இம்மார்க்கத்தின் மீது வீண்பழிச்சொல் விழக் காரணமாகிறார்கள்”

“அப்பா..! குர்ஆன், பெண்களை அடிமைப் படுத்துவற்கான கையேடு அல்ல. இந்த உலகில் முதன் முதலாகப் பெண்களுக்கான உரிமைகளையும் கண்ணியத்தையும் பிரகடனப்படுத்திய ஆவணமே அதுதான்!”

இப்படியெல்லாம் இஸ்லாம் பற்றிச் சொல்ல ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன! அதிலும் இந்தக் கருத்துகளை புதிதாக இஸ்லாமை ஏற்றுக் கொண்டவர்கள் உரக்கச் சொல்லும்போது, முஸ்லிமல்லாதவர்களுக்கு அது கூடுதல் தெளிவைக் கொடுக்கலாம். அது மட்டுமல்லாமல், பல்வேறு கலாச்சாரங்களின் தாக்கத்தினால் குர்ஆனின் வழிகாட்டல்களை விட்டு விலகி வாழ்ந்து கொண்டிருக்கும் முஸ்லிம்களுக்கும் அவை நினைவூட்டலாக அமையும்.

இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கும் நான்கு புதிய முஸ்லிம்களும் இஸ்லாமைத் தழுவுவதற்குமுன் இம்மார்க்கத்தைப் பற்றி ஒன்றுமே அறியாதவர்களாகத்தான் இருந்தார்கள். இஸ்லாமைத் தழுவுவது பற்றி தங்கள் குடும்பத்தினரிடம் அவர்கள் தெரிவித்தபோது, சந்தேகப் பார்வைகளையும் அச்ச உணர்வையும் மனக்கசப்புகளையுமே அவர்கள் எதிர்கொள்ள நேரிட்டது.

யுவான் ரிட்லி

ஒரு பத்திரிகையாளரான யுவான் ரிட்லி, செப்டம்பர் 2001 தாக்குதலுக்குப் பிறகு ஒரு முஸ்லிம் பெண் போன்ற வேடத்தில் ஆப்கானிஸ்தானில் நுழைந்து, தான் பணியாற்றிக் கொண்டிருந்த பத்திரிகைக்காகச் செய்திகள் திரட்டிக் கொண்டிருந்தபோது, தாலிபான் படையினரால் பிடிக்கப் பட்டார்.

உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட அவர், ‘தாம் கல்லாலடித்துக் கொல்லப் படுவோமோ’ என்று பயந்து கொண்டிருந்தார். ஆனால், அதற்கு நேர்மாற்றமாக, சிறைப்பிடிக்கப் பட்டிருந்த அவர் மிக மரியாதையாக நடத்தப் பட்டார். குர்ஆனைப் படிக்கப் போவதாகவும் இஸ்லாமைப் பற்றித் தெரிந்து கொள்ளப் போவதாகவும் வாக்களித்த பிறகு அவர் விடுவிக்கப் பட்டார்.

பெண்களை அடக்கி, ஒடுக்கி, துன்புறுத்துவது பற்றிய உபதேசங்கள் இருக்கும் என எதிர்பார்த்துக் குர்ஆனைப் படிக்க ஆரம்பித்த அவருக்கு, அதில் அப்படி எதுவும் இல்லை என்பதே ஆச்சரியத்தை அளித்தது!. “இது பெண்ணுரிமைக்கான பிரகடனம்” என்று வியக்கிறார் யுவான் ரிட்லி.

2003-ல் யுவான் இஸ்லாமைத் தழுவினார். இஸ்லாம் அவருக்கு அளித்த தன்னம்பிக்கையும் கவுரவமும் பிரச்னைகள் நிரம்பியிருந்த அவரது கடந்த கால வாழ்க்கையை மறக்கடிக்கச் செய்தது. ஆனால் அவரது மனமாற்றத்தைப் பற்றி அவரது தாயை மட்டும் இன்னும் அவரால் புரிந்து கொள்ளச் செய்ய முடியவில்லை.

ஜான் ஸ்டாண்டிங்

ஜான், தனது முஸ்லிம் பெண் தோழி நசிராவை இஸ்லாமிலிருந்து வெளியேற்ற முயன்றார். நசிரா தனது நம்பிக்கையில் உறுதியாக இருப்பது தெரிந்த பிறகே, குர்ஆனைத் தானே படித்துப் புரிந்து கொள்ள ஜான் முடிவு செய்தார். சில மாதங்களுக்குள்ளாகவே அவர் இஸ்லாமைத் தழுவினார்.

அவர் முஸ்லிமாக ஆனதிலிருந்து மிக அமைதியான, கனிவான மனிதராக இருக்கிறார் என ஜானின் தந்தை டோனி ஒப்புக் கொள்கிறார். இருந்தாலும், ஜான் மூளைச் சலவை செய்யப் பட்டிருப்பாரோ எனத் தனக்கு இன்னும் ஐயம் இருப்பதாகவும் அவர் சொன்னார். ஜான் ஏதாவது வன்முறை தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுகிறார் எனத் தெரிந்தால் அவரை தமது குடும்பத்தை விட்டும் விலக்கிவிடுவதாகவும் அவரது தந்தை எச்சரித்திருக்கிறார். அவர் அப்படி எதையும் செய்துவிட மாட்டார் என்ற நம்பிக்கையும் அவரது குடும்பத்தினருக்கு இருக்கிறது.

ஜான் ஏன் தனது பெயரை ஜமாலுத்தீன் என மாற்றிக் கொள்ள வேண்டும்? நல்ல எதிர்காலமுள்ள இசைக்கலை தொடர்பான தொழிலை ஏன் அவர் கைவிட வேண்டும்? (இஸ்லாம் இசையைத் தடை செய்திருக்கிறது என்பது ஜானின் நம்பிக்கை). மேலும், ஒரு இஸ்லாமிய நாட்டிற்குக் குடிபெயர்வது பற்றி அவர் ஏன் யோசிக்க வேண்டும்? என்பதெல்லாம் ஜானின் தந்தைக்கு இன்னும் புரியாத புதிர்தான்.

இஸ்லாம் உண்மையில் இது போன்ற மாற்றங்களை கட்டாயமாக்கியிருக்கிறதா?

அகீல் பர்ட்டன்

அகீல், ஜமைக்காவைச் சேர்ந்த தன் கிருஸ்துவப் பெற்றோருடன் மான்செஸ்டர் நகரில் வளர்ந்தவர். தமது பெற்றோர் பின்பற்றிய கிருஸ்துவ மதம் அகீலுக்குப் பிடிக்கவில்லை. அது வெள்ளை இனத்தவருக்கான மதம் என்று அகீலுக்குத் தோன்றியது. இஸ்லாம் இதிலிருந்து மாறுபட்டது என்றும் அவருக்குத் தோன்றவில்லை. பள்ளிப் பருவத்தில் அவர் அறிந்திருந்த முஸ்லிம்களெல்லாம் ஆசிய நாடுகளிலிருந்து வந்தவர்கள். ஆனால், அவரைப் போன்றே ஜமைக்காவைச் சேர்ந்த ஒரு நண்பர் முஸ்லிமானது, அகீலுக்கும் இஸ்லாம் மீது ஆர்வம் ஏற்படக் காரணமான அமைந்தது. அவர் குர்ஆனைப் படிக்க ஆரம்பித்தார். பதில் கிடைக்காமல் அவரது மனதில் சுழன்று கொண்டிருந்த கேள்விகளுக்கெல்லாம் இஸ்லாமில் பதில் இருக்கிறது என்பதை அவர் கண்டு கொண்டார்.

ஒரு தொழில்முறை குத்துச்சண்டை வீரராக இருந்த அகீல், முஸ்லிமாக ஆனதிலிருந்து சண்டையிடுவதை நிறுத்திவிட்டு ஒரு பயிற்சியாளராகத் தொடர்கிறார். குத்துச்சண்டைக்காக அவர் பெற்ற கட்டுப்பாடு மற்றும் ஒழுங்குமுறைப் பயிற்சிகள், தமது புதிய இஸ்லாமிய வாழ்க்கைமுறையைக் கடைப்பிடிப்பதற்கும் துணைபுரிவதாக அகீல் உணர்கிறார்.

ஷஹ்நாஸ் மாலிக்

வெள்ளை இனக் குடும்பம் ஒன்றைச் சார்ந்த ஷஹ்நாஸ் அவரது ஆசிய ஆண் நண்பர் நசீரைத் திருமணம் முடித்தபோது இஸ்லாமைத் தழுவினார். அப்பொழுதெல்லாம் வெறும் பெயரளவில் மட்டும் முஸ்லிமாக இருந்த நசீரை கடந்த ஆறு ஆண்டுகளில் ஷஹ்நாஸ்தான் மார்க்கத்தில் பிடிப்புள்ளவராக மாற்றினார். முதலில் ஷஹ்நாஸ் ஹிஜாப் அணியத் தொடங்கினார். அதன் பிறகு சில ஆண்டுகள் கழித்து, நசீரின் தூண்டுதல் எதுவுமின்றியே முழு புர்கா அணிய ஆரம்பித்தார்.

உறவினர்கள், நண்பர்கள் சிலரின் கிண்டலும் கேலியும் ஷஹ்நாஸை தைரியமிழக்கச் செய்யவில்லை. மாறாக, அழகிப் போட்டியில் பங்கு கொள்வது போன்று ஆடை அணியும் மேற்கத்தியக் கலாச்சாரத்திலிருந்து விடுதலை பெற்றதாகவே அவர் உணர்கிறார்.

இந்த நான்கு புதிய முஸ்லிம்களும் வெவ்வேறு வழிகளில் தங்களது மனமாற்றத்திற்கு முந்தைய மேற்கத்திய கலாச்சார வாழ்க்கை முறைகளிலிருந்து இஸ்லாம் காட்டும் வாழ்க்கை நெறிமுறைகளுக்கு மாறியவர்களாவர். வழிமுறைகள் வேறாக இருந்தாலும், ‘மாற வேண்டும்’ என்ற உறுதி இவர்கள் அனைவரிடமும் இருக்கிறது. மாற்றங்களைத் தேடும் இவர்களின் வாழ்க்கைப் பயணத்தை உற்று நோக்கினால் அதில் இஸ்லாமிற்கும் மேற்கத்தியக் கலாச்சாரத்திற்கும் இடையிலான ஒரு தொடர்புப் பாலத்தை ஒருவேளை நாம் காணக்கூடும்.

மூலம்: http://news.bbc.co.uk/1/hi/programmes/3663771.stm

தமிழில் : இப்னு பஷீர்

Sunday, June 22, 2008

இஸ்லாமிய போதனைகள் - 6. இலஞ்சம் கொடுக்காதீர்!

மக்களுக்கு மத்தியில் தீர்ப்பு வழங்கும் நீதிபதிகளுக்கும் வழக்கறிஞர்களுக்கும் சத்தியத்தை மறைக்க, அசத்தியத்தை நிலை நாட்ட லஞ்சம் கொடுப்பது பெருங்குற்றமாகும். ஏனெனில் நிச்சயமாக இது தவறான தீர்ப்புக் கூறவும், நிரபராதிக்கு அநீதமிழைப்பதற்கும், சமுதாயத்தில் குழப்பம் ஏற்படுவதற்கும் காரணமாகிவிடும்.

அல்லாஹ் கூறுகிறான்:மேலும் உங்களுடைய செல்வங்களை உங்களுக்கடையில் உரிமையின்றி உண்ணாதீர்கள். நீங்கள் அறிந்து கொண்டே (பிற) மனிதர்களின் செல்வங்களிலிருந்து ஒரு பகுதியை பாவமான முறையில் நீங்கள் உண்ணுவதற்காக அவற்றை (இலஞ்சமாகக் கொடுக்க) அதிகாரிகளின்பால் கொண்டும் செல்லாதீர்கள். (அல்குர்ஆன் 2:188)

நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்: தீர்ப்புக்காக லஞ்சம் கொடுப்பவனையும் லஞ்சம் வாங்குபவனையும் அல்லாஹ் சபிப்பானாக! (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: அஹமத்)

சத்தியத்தை நிலைநாட்டுவதற்கும் அநீதியை தடுப்பதற்கும் லஞ்சத்தைத் தவிர வேறு மாற்றுவழியில்லையெனில் அதற்காக லஞ்சம் கொடுப்பது மேற்கூறிய இலஞ்ச எச்சரிக்கையில் இடம்பெறாது.

இக்காலத்தில் லஞ்சம் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கிறது. சில ஊழியர்களுக்கு அவர்களின் சம்பளத்தைவிட லஞ்ச வரவே அதிகம். பல நிறுவனங்களில் லஞ்சக் கவர்கள் சகஜமாக நடமாடுகின்றன. பல வேலைகள் ஆரம்பம் முதல் இறுதி வரை லஞ்சமின்றி சாத்தியமற்றதாகிவிட்டன. இதனால் வசதியற்றோர் பெரும் கஷ்டத்திற்குள்ளாகியுள்ளனர். இது பல ஒப்பந்தங்களை மீறுவதற்கும், ஊழியர்கள் நிறுவனப் பொறுப்பாளர்களை பெருங்குழப்பத்தில் ஆழ்த்தவும் காரணமாகிறது.

லஞ்சம் கொடுக்கவில்லை எனில் தரமான வேலை நடைபெறுவதில்லை. அல்லது தாமதப்படுத்தப்படுகிறது. லஞ்சத்தின் காரணமாக தொழில் நிறுவனங்களில் விற்க, வாங்க பொறுப்பேற்றுள்ள பிரதிநிதிகளின் பைகளில் பொருளாதாரம் நுழைந்து விடுகிறது. இதுபோன்ற தீயவிளைவுகளின் காரணங்களினால் தான் நபி(ஸல்) அவர்கள் இத்தவறுக்கு உடன்படும் இரு தரப்பினருக்கும் பாதகமாக பிரார்த்தித்தார்கள்.

நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்: லஞ்சம் கொடுப்பவன் மீதும் வாங்குபவன் மீதும் அல்லாஹ்வுடைய சாபம் உண்டாகட்டுமாக! (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர்(ரலி) நூல்: இப்னுமாஜா)

Thursday, June 19, 2008

இஸ்லாமிய போதனைகள் - 5. குர்ஆனில் பத்து கட்டளைகள்!

திருமறை வசனங்கள் 6:151-152 கீழ்க்கண்ட பத்து கட்டளைகளை அறிவிக்கின்றது:

"வாருங்கள்! உங்கள் இறைவன் உங்களுக்குத் தடைசெய்தவற்றைக் கூறுகிறேன்’ என்று (முஹம்மதே) கூறுவீராக! அவை:-

1. அல்லாஹ்வுக்கு எதையும் இணை வைக்கக் கூடாது.

2. பெற்றோருக்கு உதவுங்கள்.

3. வறுமையின் காரணமாக உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள். உங்களுக்கும், அவர்களுக்கும் நாமே உணவளிக்கிறோம்.

4. வெட்கக்கேடான காரியங்களில் வெளிப்படையானதையும், இரகசியமானதையும் நெருங்காதீர்கள்.

5. அல்லாஹ் தடைசெய்துள்ள எவரையும் உரிமையிருந்தாலே தவிர கொல்லாதீர்கள். நீங்கள் புரிந்து கொள்வதற்காக இதையே உங்களுக்கு உபதேசம் செய்கிறான். (6:151)

6. அநாதையின் செல்வத்தை அவன் பருவமடையும் வரை நியாயமான முறையிலே அன்றி (அனுபவிக்க) நெருங்காதீர்கள்.

7. அளவையும், நிறுவையையும், நேர்மையாக நிறைவேற்றுங்கள்.

8. எவரையும் அவரது சக்திக்கு மேல் நாம் சிரமப்படுத்துவதில்லை.

9. உறவினராகவே இருந்தாலும் பேசும்போது நீதியையே பேசுங்கள்.

10. அல்லாஹ்வின் ஒப்பந்தங்களை நிறைவேற்றுங்கள். (6:152)

இதுவே எனது நேரான வழியாகும். எனவே இதனையே பின்பற்றுங்கள். பலவழிகளைப் பின்பற்றாதீர்கள். அவை அவனது (ஒரே) வழியை விட்டும் உங்களைப் பிரித்துவிடும். நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக இதையே அவன் உங்களுக்கு உபதேசிக்கிறான்"

நன்றி: அல்பாக்கவி.காம்

Wednesday, June 18, 2008

இஸ்லாமிய போதனைகள் - 4. கோபத்தை கட்டுப்படுத்துபவனே சிறந்த வீரன்!

"(பயபக்தியுடையவர்கள்) கோபத்தை அடக்கிக்கொள்வார்கள். மனிதர்(கள் செய்யும் தவறு)களை மன்னிப்பார்கள்." (அல்குர்ஆன் 3 : 134)


நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து 'எனக்கு உபதேசம் செய்யுங்கள்' என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் 'கோபம் கொள்ளாதே!' எனக் கூறினார்கள். மீண்டும் அந்த மனிதர் 'உபதேசம் செய்யுங்கள்' எனக்கூறவே, மீண்டும் 'கோபம் கொள்ளாதே' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) - நூல் : புகாரி)


"கோபத்தின் போது தன்னை கட்டுப்படுத்திக் கொள்பவனே சிறந்த வீரன் ஆவான்" என நபி ( ஸல் ) அவர்கள் அருளினார்கள். (அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) - நூல்கள் : புகாரி , முஸ்லிம்)


பொதுவாகவே ஷைத்தான் மனிதனை ஆக்ரமிப்பதற்கு முதல்படியே அவனது கோபத்தைத் தூண்டி விடுவதுதான். தேவையில்லாத, உப்புப்பெறாத விஷயத்திற்கெல்லாம் ஒருவர் கோபப்பட்டால் அவரிடம் ஷைத்தான் குடி கொண்டிருக்கிறான் என்பதை தெளிவாக தெரிந்து கொள்ளலாம். எதிரில் யார் இருக்கிறார் என்று கூடத் தெரியாத அளவுக்கு பேசித் தீர்த்து விடுவார். சிலவேளை ஏச்சுப் பேச்சுக்களையும் மீறி சட்டை கையை மடக்கி முழங்கைக்கு மேல் உயர்த்திக் கொண்டு பாய்வதற்கும் தயாராகி விடுவார். பின்விளைவுகளைப் பற்றிக்கூட யோசிப்பதில்லை. கோபம் கொண்ட அந்த வினாடியில் அவரது சிந்தனைத்திறன் செயலிழந்து விடுகிறது.


மேலும் ஒருவன் தன்னை வீரன் என்று காட்டுவதற்காகவும் கோபத்தைக் காட்டுவான். 'அவர் பெரிய கோபக்காரர். அவருக்கு கோபம் வந்தால் அவரை யாராலும் கட்டுப்படுத்தவே முடியாது' என்றெல்லாம் கோபம் கொள்பவர்களை சிலாகித்து ஒரு சிலர் கூறி அவரை வாழ்நாள் முழுவதும் கோபக்காரராக்கி விடுவார்கள். அதற்கு தகுற்தாற் போல் அவரும் தன்னை ஆக்கிக்கொள்வார். தேவையில்லாததற்கெல்லாம் கோபப்படுவார். இவருக்கு சமுதாயம் 'வீரன்', 'தைரியசாலி' என்றெல்லாம் பட்டம் சூட்டி விடும்!


கோபம் மனிதனுக்கு தேவை தான்! ஆனால் அதை சூழ்நிலைக்கேற்ப பயன்படுத்த வேண்டும். அதைக் கட்டுப்படுத்த வேண்டிய நேரத்தில் கட்டுப்படுத்தவும் பழகிக் கொள்ள வேண்டும். நமது கோபம் நம்மையே மிகைத்துவிட அனுமதிக்கக் கூடாது!


Tuesday, June 17, 2008

இஸ்லாமிய போதனைகள் - 3. யாருக்காகவும் பொய் சாட்சி சொல்லாதீர்கள்!

இறைநம்பிக்கையாளர்களே!

நீங்கள் நீதியின் மீது நிலையானவர்களாக(வும்), உங்களுக்கோ அல்லது (உங்கள்) பெற்றோருக்கோ, அல்லது (உங்கள்) உறவினர்களுக்கோ பாதகமாக இருப்பினும் சரியே, அல்லாஹ்விற்காக சாட்சி கூறுபவர்களாக இருங்கள்.

(நீங்கள் எவருக்கு எதிராகச் சாட்சி கூறுகின்றீர்களோ) அவர், செல்வந்தராக(வோ), அல்லது ஏழையாக(வோ) இருந்தாலும் சரியே. ஏனெனில், அல்லாஹ் அவ்விருவருக்கும் (நன்மையை நாடுவதில்) மிக மேலானவன்.

எனவே, நீதி செய்வதை விட்டு (உங்கள்) மனோ இச்சைகளைப் பின்பற்றாதீர்கள்.

இன்னும், நீங்கள் சாட்சியத்தை மாற்றிக் கூறினாலும், அல்லது புறக்கணித்து விட்டாலும் நிச்சயமாக அல்லாஹ், நீங்கள் செய்கின்றவற்றை நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.

(திருக்குர்ஆன் - 4:135)

Sunday, June 15, 2008

மன்னர் ஃபஹதின் எளிமையான நல்லடக்கத்தினால் இஸ்லாத்தை ஏற்ற பாதிரியார்!

சவுதி அரேபியாவின் மன்னராக இருந்த ஃபஹத் பின் அப்துல் அஜீஸ் 2005-ல் மரணமடைந்தார். அவரை தலைநகர் ரியாத்தில் உள்ள பொது மையவாடியில் மிக மிக எளிமையான முறையில் அரச குடும்பத்தினர் அடக்கம் செய்தனர். இந்த அரிய நிகழ்ச்சி இத்தாலியில் உள்ள பிரபல கிறிஸ்துவ பாதிரியார் ஒருவரை மனமாற்றம் அடையச் செய்தது. அதைத் தொடர்ந்து அவர் தனது வாழ்வியல் நெறியாக இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக் கொண்டார் என்ற தகவலை ஆக 21, 2005 அன்று வெளிவந்த அரப் நியூஸ் ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

தொலைக்காட்சியில் மன்னர் ஃபஹதின் நல்லடக்கக் காட்சிகளை கண்ட பாதிரியாரை எந்தவித படாடோபமோ, ஆடம்பரமோ இல்லாமல் மிகவும் சாதாரணமாக இருபது வருடங்கள் வளமிக்க ஒரு சாம்ராஜ்யத்தை ஆண்ட மன்னரை அடக்கம் செய்யப்பட்ட நிகழ்ச்சி மிகவும் கவர்ந்தது.


ரியாத் மாநகரில் உள்ள அல்-அவ்த் என்ற மையவாடியில் மன்னர் ஃபஹத் இறந்த மறுநாள் உலக தலைவர்கள் கலந்துக் கொண்ட அவரது நல்லடக்க நிகழ்ச்சி உலகமே பார்த்து வியக்கும் வண்ணம் மிக எளிமையான முறையில் நடந்தேறியது.


இஸ்லாமிய அழைப்பாளர் டாக்டர் அப்துல்லாஹ் அல்-மாலிக் இது பற்றிக் கூறுகையில் 'எளிமையான முறையில் செய்யப்பட்ட மன்னர் ஃபஹதின் நல்லடக்கம், இந்த பாதிரியாரின் மனதில் வியக்கத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தி அவரை இஸ்லாத்தின் பக்கம் ஈர்த்து விட்டது. அவர் ஏற்கனவே பல இஸ்லாமிய நூல்களை படித்திருந்த போதிலும் அவை இந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை' என்று குறிப்பிட்டார்.


மிக பிரபலமான இத்தாலிய பிரஜை ஒருவர் இஸ்லாத்தை தழுவுவது இது இரண்டாவது முறையாகும். நான்கு வருடங்களுக்கு முன்னர் சவுதி அரேபியாவிற்கான இத்தாலிய தூதுவராக ரியாதில் பணியாற்றிய டார்குவாடோ கார்டில்லி என்பவர் இஸ்லாமிய மார்க்த்தை ஏற்றுக் கொண்டார்.


டாக்டர் மாலிக் மேலும் குறிப்பிடுகையில் 'பாதிரியார் தொலைக்காட்சியில் மன்னரின் இறுதிக் காட்சிகளை பார்த்துக் கொண்டிருந்தபோது, மன்னருடன், வேறு ஒரு சாதாரண மனிதரின் உடலும் அங்கு கொண்டு வரப்பட்டு இருவருக்கும் ஒரே தொழுகை நடத்தப்பட்டு இருவரையும் எந்த வித்தியாசமும் பாராட்டாமல் ஒரே மாதிரியான மண்ணறைகளில் அடக்கம் செய்யப்பட்ட காட்சிகளைக் கண்டார். சமத்துவத்திற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்த இந்த இரண்டு மாறுபட்ட முஸ்லிம்களின் இறுதி அடக்க நிகழ்ச்சிகள் பாதிரியாரின் சிந்தனையைத் தூண்டி அவரை இஸ்லாத்தை ஏற்கும்படி செய்து விட்டன' என்று கூறினார்.


'நான் ஏற்கனவே கடந்த பல வருடங்களாக பல இஸ்லாமிய நூல்களை படித்துள்ளேன். பல ஒலிநாடாக்களை கேட்டுள்ளேன். அவைகள் என்னில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. ஆனால் அரச குடும்பத்தின் இந்த எளிய நல்லடக்கம் என்னை அதிர வைத்து என் மனதை மாற்றி விட்டது.' என்று பாதிரியார் குறிப்பிட்டதாக மாலிக் தெரிவித்தார்.


மேலும் அவர், மன்னரின் இந்த அரிய நிகழ்ச்சி இன்னும் நிறைய மனிதர்களை உளரீதியாக பெரும் மாற்றம் கொள்ள வைத்திருக்கும் என்று தான் நம்புவதாகவும், முஸ்லிம் செய்தி ஊடகங்கள் இஸ்லாத்தின் சகிப்புத்தன்மை மற்றும் சகோதரத்துவம் போன்றவற்றை எடுத்தியம்பக் கூடிய இதுபோன்ற நிகழ்வுகளை மக்களுக்கு எடுத்துக்காட்டினால் இஸ்லாமிய மார்க்கத்தை அவர்கள் நேசிக்கத் துவங்குவார்கள் என்று ஆலோசனை வழங்கினார்.


62 வயதை அடைந்துவிட்ட இந்த முன்னாள் பாதிரியார் 'எனது மீதமுள்ள வாழ்நாட்களை இந்த அற்புத மார்க்கத்திற்காக பிரச்சாரம் செய்வதிலேயே கழிக்கப் போகிறேன்' என்றும் தெரிவித்தார்.


ஜித்தாவில் உள்ள இஸ்லாமிய கல்வி நிறுவனத்தின் இயக்குனர் பதர் அல்-ஒலயான் கூறுகையில் பாதிரியாரின் இந்த மனமாற்றம் மிக நல்லச் செய்தியாகும் என்று தெரிவித்தார். அதோடு இன்னொரு சம்பவத்தை பற்றிக் கூறும்போது தனது நிறுவன அலுவலகத்திற்கு இஸ்லாத்தில் இணைவதற்காக வந்த ஓர் இத்தாலியர் மக்காவில் லட்சக்கணக்கான மக்கள் ஒவ்வொரு தொழுகைக்கும் கூடி அணிவகுத்து நின்று தொழுதுவிட்டு அமைதியாக கலைந்துச் செல்வது தன்னை பெரிதும் கவர்ந்த அம்சம் என்று கூறியதாக தெரிவித்தார்.


'ஒரே ஒரு அழைப்பொலி (அதான்) எழுப்புவதின் மூலம் மிகப்பெரும் எண்ணிக்கையிலான மக்களை ஒன்று கூட்டுவது எப்படி உங்களுக்கு சாத்தியப்படுகிறது? நிச்சயம் இது படைத்த இறைவனது செயலே அன்றி வேறில்லை!' என்று அந்த இத்தாலியர் ஆச்சர்யப்பட்டதாகவும் கூறினார். மேலும், முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் இஸ்லாமிய மார்க்கத்தின் நற்செய்திகளை பிற மக்களிடம் தொடர்ந்து எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.


தனது 60வது வயதில் நவம்பர் 15, 2001 அன்று இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட இத்தாலிய தூதர் கார்டில்லி அப்போது பத்திரிக்கையாளர்களிடம் பேசும்போது 'இறைவனின் இறுதி வேதமான திருக்குர்ஆனை தொடர்ந்து படித்ததின் காரணமாக இஸ்லாம்தான் சத்திய மார்க்கம் என்பதை நான் மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டேன்' என்று தெரிவித்திருந்தார்.


Thursday, June 12, 2008

இஸ்லாமிய போதனைகள் - 2. மனிதன் யார்?


மனிதன் யார்? அவனது தன்மைகள் என்ன? என்பதைப் பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது?


இறைவனின் அழகிய படைப்பு:

"திண்ணமாக நாம் மனிதனை மிகச்சிறந்த அமைப்பில் படைத்தோம். .. நாம் படைத்த பெரும்பாலான படைப்புகளை விட அவர்களுக்கு அதிகச் சிறப்புகளையும் வழங்கினோம்" (திருக்குர்ஆன் 95:4, 17:70)


இறைவனின் உயிர்க்காற்று ஊதப் பட்டவன்:

(இறைவனின் சிறப்புத் தன்மைகளை பிரதிபலிப்பவன்) (திருக்குர்ஆன் 15:29)


பிறப்பில் பாவமற்றவன்:

"எவர் ஒருவர் எதை சம்பாதிக்கிறாரோ அதற்கு அவரே பொறுப்பாளராவார். மேலும் ஒருவரின் பாவச்சுமையை மற்றொருவர் சுமக்க மாட்டார்." (திருக்குர்ஆன் 6:164)


பிறப்பில் சமமானவன்:

"மனிதர்களே! உங்களை ஓர் ஆன்மாவிலிருந்து படைத்த உங்களின் இறைவனுக்கு நீங்கள் அஞ்சுங்கள்" (திருக்குர்ஆன் 4:1)


"மனிதர்களே! நாம் உங்களை ஓர் ஆணிலிருந்தும் பெண்ணிலிருந்தும் படைத்தோம்" (திருக்குர்ஆன் 49:13)


அகிலம் அனைத்தும் மனிதனுக்காகவே:

"இறைவனே பூமியில் உள்ள அனைத்தையும் உங்களுக்காக படைத்தான். உங்கள் நலனுக்காக இரவையும், பகலையும், சூரியனையும், சந்திரனையும் கட்டுப் படுத்தி வைத்துள்ளான்" (திருக்குர்ஆன் 2:29, 16:12)


இறைவனின் பிரதிநிதி:

(இறைவனின் கட்டளைகளை ஏற்று செயல்படுபவன்): "உங்களை பூமியில் தன் பிரதிநிதிகளாக ஆக்கியவன் அவனே" (திருக்குர்ஆன் 6:165)


Wednesday, June 11, 2008

கூடையும் சிறுவனும்!


வயதான விவசாயி ஒருவர் தன் சிறு வயது பேரனுடன் ஆறு ஓடும் ஓர் அழகிய மலைப்பிரதேசத்தின் அருகில் வாழ்ந்து வந்தார். ஒவ்வொரு நாளும் அதிகாலையில் தன் படுக்கை அறையில் அமர்ந்து குர்ஆனை ஓதுவது இவரின் அன்றாட வழக்கமாக இருந்து வந்தது. மற்றவர்கள் மீது மிகுந்த அன்பு செலுத்தும் தனது தாத்தாவைப் போன்றே தானும் ஆக வேண்டும் என்ற ஆசை கொண்ட அவரின் பேரன் அவரது ஒவ்வொரு செய்கையையும் கவனித்து அவற்றை தானும் செய்வதை வழக்கமாக கொண்டிருந்தான்.

ஒருநாள் பேரன் தாத்தாவைப் பார்த்து, "தாத்தா! உங்களைப் போன்றே நானும் குர்ஆனைப் படிக்க முயற்சி செய்தேன். ஆனால் ஒன்றுமே விளங்கவில்லை. அதுமட்டுமன்றி குர்ஆனை மூடிவைத்ததும் படித்த கொஞ்சமும் மறந்தும் போய் விடுகிறது. எதுவுமே விளங்காமல் குர்ஆனைப் படிப்பதனால் அப்படி என்ன நன்மை நமக்கு வந்துவிடப்போகிறது?" என்று கேட்டான்.

சமைத்துக்கொண்டிருந்த தாத்தா, கூடையில் எஞ்சியிருந்த அடுப்புக்கரியை அடுப்பினுள் தள்ளி விட்டுக் கொண்டு பேரனிடம் திரும்பி காலியான கூடையை அவன் கையில் கொடுத்து, "இந்த கரிக்கூடையில் ஆற்றுத்தண்ணீரை நிறைத்துக் கொண்டு வா!" என்றார். பேரனும் அவ்வாறே ஆற்றிற்குச் சென்று தண்ணீரை கூடையில் நிறைத்து வீடு திரும்பினான். ஆனால் ஆற்றங்கரையிலிருந்து வீட்டிற்குத் திரும்பி வந்து சேர்வதற்குள் கூடையில் கொண்டுவந்திருந்த தண்ணீர் முழுவதும் சிறிது சிறிதாக ஒழுகி கூடை காலியாகி விட்டிருந்தது. வருத்தமுடன் வீட்டினுள் நுழைந்து காலிக்கூடையைக் தாத்தாவிடம் காண்பித்தான். அவன் மனதின் வருத்தத்தைப் புரிந்து கொண்ட தாத்தா சிரித்துக் கொண்டே, "சரி பரவாயில்லை! இம்முறை விரைவாக வீட்டிற்கு வந்து விடு!" என்று கூறி மறுபடியும் தண்ணீர் கொண்டு வர ஆற்றுக்கு அனுப்பினார்.

இம்முறை தண்ணீரை கூடையில் நிரப்பி விரைவாக பேரன் வீட்டிற்கு வந்து சேர்ந்தான். எனினும் கூடை முன்பு போலவே காலியாகிவிட, "இக்கூடையில் தண்ணீர் கொண்டு வருவது சாத்தியமே இல்லை தாத்தா!" என்று மூச்சிரைக்க கூறிக் கொண்டே தண்ணீர் கொண்டுவர கூடைக்குப் பதிலாக வீட்டிலுள்ள மற்றொரு பெரிய பாத்திரத்தை எடுக்க முயன்றான். அப்போது அவனை தடுத்த தாத்தா, "எனக்குப் பெரிய பாத்திரத்தில் நீர் தேவையில்லை. இந்தச் சிறு கூடையில் தான் வேண்டும். நீ கடுமையாக முயற்சிக்கவில்லை என்று எண்ணுகிறேன்!" என்று அவனைப் பார்த்து கூறினார்.

சிறு துளைகள் உடைய அக்கூடையில் ஆற்றிலிருந்து வீடுவரை தண்ணீரை ஒழுகாமல் தன்னால் கொண்டு வரமுடியாது என்று நன்றாகத் தெரிந்தும், தாத்தாவிற்கு தன் கடுமையான முயற்சிகளைக் காண்பிக்க வேண்டும் என்ற ரோஷம் கொப்பளிக்க மறுபடி ஆற்றுக்கு ஓடினான் சிறுவன். ஆனால் பாவம் மறுபடியும் தோல்வியுடனே வீடு திரும்பினான்.

"தாத்தா! நான் மிகக் கடுமையாக முயற்சி செய்தும் பயன் ஏதுமில்லை என்பதை பார்த்தீர்களா?" என்று அவரிடம் கூடையைக் காட்டினான்.

"உனது இம்முயற்சி பலன் தரவில்லை என்றா நினைக்கிறாய்? கூடையை நன்றாகப் பார்!" என்றார் தாத்தா.

தண்ணீர் கொண்டுவர வேண்டும் என்ற கவனத்திலேயே இருந்த பேரன் முதல் முறையாக கூடையினுள் பார்வையை செலுத்தினான். அப்பொழுது தான் தாத்தாவிடமிருந்து வாங்கிய கூடைக்கும் தற்போது கையில் இருக்கும் கூடைக்கும் உள்ள வித்தியாசத்தை உணர்ந்தான்.

ஆம்! அடுப்புக்கரியினால் அழுக்கேறியிருந்த அக்கூடை இப்போது உள்ளும் புறமும் தூய்மையாகி பளிச்சென்றிருந்தது.

அன்புடன் தன் பேரனை வாரி அணைத்துக் கொண்ட தாத்தா சொன்னார், "ஒருவர் தொடர்ந்து குர்ஆனை ஓதும் பொழுதும் இதுவே நிகழ்கிறது. குர்ஆன் ஓதும் போது அதன் பொருளறிந்து ஓதி அதன்படி செயல் படுவது சிறந்தது என்பதில் மாற்று கருத்து கிடையாது. ஆனால் பொருளறியாமல் அதை ஓதினாலும் அதன் ஒவ்வொரு எழுத்துக்கும் பத்து நன்மைகள் கிடைக்கும் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி(ஸல்)அவர்கள் கூறியுள்ளார்கள். நம்மை படைத்த இறைவனின் வார்த்தை இது என்ற எண்ணத்தில் ஒருவர் ஓதும் பொழுது ஓதுபவருக்கு அது புரியாமல் போனாலும், ஓதுவது அனைத்துமே அவரின் நினைவில் நிற்காமல் போய் இந்தக் கூடைநீர் போல் வழிந்தோடி விட்டாலும் ஓதுபவரின் உள்ளம் இறையச்சத்தால் பரிசுத்தம் அடைகிறது. அவரின் வாழ்வில் தெளிவு பிறக்கிறது. இதுவே மனிதனைப் படைத்த இறைவன் புரியும் அற்புதமாகும்!" என்று கூறினார்.

இதனைக் கேட்ட சிறுவன் மகிழ்ச்சியுடன், "மிக்க நன்றி தாத்தா. இனி நானும் உங்களை போல் தினமும் அதிகாலையில் முதல் வேலையாக திருக்குர்ஆனை ஓதுவதை வழக்கமாக கொள்வேன்" என்று கூறினான்.


Monday, June 09, 2008

நான் ஏன் முஸ்லீம் ஆனேன்? - ஜெர்மன் விஞ்ஞானி!

ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த கருவியல் நிபுனர் ஒருவர் தாம் இஸ்லாத்தில் இணைந்ததற்கான காரணத்தை நிகழ்ச்சி ஒன்றில் கூறினார். அவர் ஆங்கிலத்தில் கூறியவற்றை சுருக்கமாக தமிழில் இங்கே தருகிறோம்.

முதலில் தாம் இஸ்லாத்தில் இணைவதற்கு இறைவன் வழிகாட்டியதாக கூறுகிறார்.

தான் இஸ்லாத்தில் இணைவதற்கு முன்னர் தன் வாழ்க்கையின் முதல் 35 ஆண்டுகளில் இறை மறுப்பாளராக இருந்ததாகவும், கடவுள் என்பது தேவையற்ற ஒன்று என்றும் கடவுள் இருப்பதற்கு எவ்வித சான்றுகளுமில்லை என்றும் நம்பிவந்ததாகக் கூறினார். தன் சிறு வயது முதல் அறிவியலில் ஆர்வமாக இருந்ததாக கூறும் இவர் அறிவியல் குறித்து ஓரளவு அறிவு ஞானம் பெற்ற பின்னர் இந்த பிரபஞ்சம் குறித்து ஆராய்ந்த அவர் அதில் எந்தவித பிளவுகளுமின்றி மிகத் துல்லியமாகப் இருப்பதைக்கண்டு, இந்த பிரபஞ்சம் தாமாகத் தோன்றியிருக்க முடியாது, இந்த பிரபஞ்சத்தைக் கடவுள் தான் படைத்திருக்க வேண்டும் என்றும் அதுவும் ஒரு கடவுள் தான் இருக்க முடியும் என்ற முடிவில் ஓரு கடவுள் நம்பிக்கையாளராக மாறியதாகக் கூறுகிறார்.

ஒரு கடவுளை ஏற்றுக் கொண்டிருந்தாலும் எந்தவொரு மதத்தையும் தான் பின்பற்றவில்லையென்றும் எல்லா மதங்களும் தவறானவை என்றும் கருதி வந்ததாகக் கூறுகிறார். இதற்கு காரணமாக அவர் கூறுகையில்,

தன்னுடைய வலது கையின் ‘மூன்று’ விரல்களைக் காட்டி அவைகளை கிறிஸ்தவர்கள் ‘ஒன்று’ என்று கூறுவதாகவும்,

யூதர்களைப் பொறுத்தவரையில், யூதர்கள் மட்டுமே கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்றும், யூதர்களல்லாத மற்றவர்கள் அனைவரும் கடவுளால் தேர்ந்தெடுக்கப்படாதவர்கள் என்றும் அவர்கள் கூறுவதாகவும்,

இஸ்லாத்தைப் பொறுத்தவரையில் அவர் அதைப்பற்றிய தவறான கருத்துக்களையும், எதிர்மறையான கருத்துக்களையே கொண்டிருந்ததாகவும் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், தாம் மதங்களைப் பற்றிய அறியாமையில் நிலைத்திருக்க விரும்பவில்லை என்றும் அதனால் வேத நூல்களைப் படிக்கத்துவங்கியதாகவும் அதற்காக முதலில் கிறிஸ்தவ பைபிளைப் படித்தாகக் கூறுகிறார்.

பைபிளைப் படிக்கும் போது சில இடங்களில் அவைகள் கடவுளிடமிருந்து வந்ததைப் போன்ற உணர்வைத் தோற்றுவித்ததாகவும் பின்னர் மேலும் சில இடங்களில் வசனங்களைப் படிக்கும் போது அவை நிச்சயமாக கடவுளின் வார்த்தைகளாக இருக்க முடியாது, மனிதனால் உருவாக்கப்பட்டவை என்ற உணர்வைத் தோற்றுவித்ததாகவும் கூறுகிறார்.

மேலும் இவர் கூறுகையில், பைபிளைப் படிக்கும் போது முதலில் படித்த கருத்துக்களுக்கு முரணான கருத்துக்கள் அடுத்த சில பக்கங்களிலே வருவதாகக் கூறுகிறார். அதனால் அவர் நிச்சயமாக பைபிள் இறைத் தூதருக்குப் பல ஆண்டுகளுக்குப் பின்னால் மனிதர்களால் எழுதப்பட்டது என்று அறிந்ததாகக் கூறுகிறார்.

பின்னர் திருக்குர்ஆனின் ஆங்கில மொழிபெயர்ப்பு ஒன்றை வாங்கி அதை படிக்கத் துவங்கியிருக்கிறார். திருக்குர்ஆனைப் படிக்கும் போது இதுவும் பைபிளைப் போல ஒரு மனிதனால் எழுதப்பட்ட ஒரு நூல் என்ற நம்பிக்கையிலேயே தாம் படிக்கத் துவங்கியதாகக் கூறுகிறார்.

ஆனால் குர்ஆனைப் பொறுத்தவரையில் அதன் ஆசிரியர் முஹம்மது என்று திட்டவட்டமாக தாம் நம்பியதாக் கூறும் இவர் குர்ஆனில் மூன்றில் ஒரு பாகத்தை படித்து முடித்துவிட்ட நிலையில் தம் மனைவியிடம், “நிச்சயமாக முஹம்மது ஒரு சிறந்த அறிவாற்றல் உடையவராக இருந்திருக்க வேண்டும்! ஏனென்றால் இதுவரை படித்தவற்றில் முரண்பாடான கருத்து ஒன்று கூட குர்ஆனில் இல்லை, மேலும் இது குறைகள் அறவே இல்லாததாகவும், மிக எளிதாக பின்பற்றக் கூடியதாகவும் இருக்கிறது’ என்று கூறிய இவர் குர்ஆனை தொடர்ந்து படித்து வந்திருக்கிறார்.

குர்ஆனைத் தொடர்ந்து படித்து வந்த அவர் சமீபத்தில் இருபதாம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட அறிவியல் உண்மை ஒன்றை திருமறை வசனம் கூறுவதைக் கண்டதாகக் கூறுகிறார். உடனே அவர் நிச்சயமாக முஹம்மது இந்தக் குர்ஆனின் ஆசிரியராக இருக்க முடியாது என்றும் இது இறைவனிடமிருந்தே வந்திருக்க வேண்டும் என்றும் நம்பியதாக் கூறும் இவர் நிச்சயமாக முஹம்மது இறைவனால் மனிதகுலத்திற்கு குர்ஆனை வழங்க அனுப்பப்பட்ட தூதராகத் தான் இருக்க முடியும் என்று நம்பியதாகக் கூறுகிறார்.

ஒரு இறைவன் தான் இருக்க முடியும் என்று ஏற்கனவே உறுதி பூண்ட இவர் முஹம்மது (ஸல்) அவர்களை இறைவனின் தூதர் என ஏற்றுக் கொண்டதன் மூலம் தாம் ஒரு முஸ்லிம் ஆனதாக் கூறுகிறார்.

மேலும் இவர் கூறுகையில், பலர் தம்மிடம் ‘இஸ்லாத்தைப் பற்றி ஒன்றுமே அறியாதவராகவும் மேலும் இஸ்லாத்தைப் பற்றிய எதிர் மறையான கருத்துக்களையே கொண்டிருந்த நீங்கள் இஸ்லாம் தான் உண்மையான மார்க்கம் என்று அறிந்தவுடன் எப்படி செயல்பட்டீர்கள்? உடனே முஸ்லிம் ஆக விரும்பினீர்களா? அல்லது வேறு ஏதாவது எண்ணினீர்களா? என கேட்டனர். அதற்கு அவர் கூறினார் "எனக்கு இஸ்லாத்தை விட்டால் வேறு மாற்று வழி இல்லை. ஏனென்றால், நான் பிறந்த போது குழந்தையாக இருந்தேன்!. அதனால் அப்போது நான் என் தாயிலிருந்து வேறுபட்டவனாக உணரமுடியவில்லை! கொஞ்சம் நாள் கழித்த பிறகு நான் உணர்ந்தேன் 'நான் ஒரு சிறுவன்' என்பதை!. ஆனால் அப்போது யாரும் என்னிடம் கேட்கவில்லை நீ சிறுவனாக விரும்பினாயா? என்று! ஏனென்றால் இது கடவுளின் விருப்பம், நமக்கு வேறு வழியில்லை என்பது தெரியும்."

மேலும் இவர் கூறுகையில், இறைவனின் அருளால் எனக்கு சிறந்த மனைவி, மக்கள் இருக்கிறார்கள்! ஆனால் இவைகள் அனைத்தையும் விட இறைவனின் மிக மிக சிறந்த அருளாக நான் கருதுவது அவன் எனக்கு காட்டிய இஸ்லாம் என்னும் நேர்வழியே ஆகும். மேலும் இவர் கூறுகையில், நான் இறைவனிடம் பிரார்த்தனை செய்யும் போது ‘என்னை இறை நம்பிக்கையாளனாகவே மரணிக்கச் செய், மீண்டும் நான் இறை நிராகரிப்பாளனாக மாற விடாதே!’ என பிரார்த்தனை செய்வதாக கூறுகிறார்

மேலும் இவர் கூறுகையில், சிறிது நேரத்திற்கு முன்னால் என்னிடம் சிலர் ‘குர்ஆனில் குறிப்பிடப்பட்டிருப்பதாகக் கூறப்படும் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட அறிவியல் உண்மைகள் சில நேரங்களில் தவறாகக் கூட போகலாம்! எனவே நாம் மிக ஜாக்கிரதையாக அந்த அறிவியல் அத்தாட்சி உண்மையானது தானா என ஆராய்ச்சி செய்ய வேண்டும்’ என கூறினர்.

இறைவன் தன்னுடைய திருமறையில் கூறுகிறான், “ஈமானில் உறுதியுடைய மக்களுக்கு நம் அத்தாட்சிகளை (அவர்கள் மனதில் பதியும்படி) நாம் நிச்சயமாகத் தெளிவாய் விவரித்துள்ளோம். (அல்-குர்ஆன் 2:118).

எனவே என்னிடம் கேட்டவர்களுக்கு நான் கூறும் பதில் என்னவெனில், நீங்கள் ஈமானில் மிக்க உறுதியுடையவராகவும், அறிவியலில் தேர்ச்சி பெற்றவராகவும் இருந்தால், குர்ஆனில் அறிவியல் வசனம் ஒன்றைப் பார்க்கும் போது இது சரியா அல்லது தவறான என கவலைப் படத் தேவையில்லை! ஏனென்றால் அவை உடனே உங்களுக்கு உணர்த்தும் இவைகள் நிச்சயமாக அறிவியல் உண்மைகள்! அதனால் இறைவனுக்கு நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டு சஜ்தா செய்ய முற்படுவீர்கள்! ஏனென்றால் இது (குர்ஆன்) மிக உண்மையானது! இதில் எவ்வித தவறும் இல்லை! தவறான எந்தவித அறிவியலும் இதில் இல்லை! இந்த புத்தகம் இறைவனிடமிருந்து வந்தது. எனவே இறைவன் தவறு செய்ய மாட்டான்!
இவ்வாறு அந்த ஜெர்மன் நாட்டு அறிவியல் ஆராய்ச்சியாளர் கூறினார்.

நன்றி: சுவனத்தென்றல்

வீடியோ இணைப்பு : நான் ஏன் முஸ்லிம் ஆனேன்? - ஜெர்மன் விஞ்ஞானி (ஆங்கிலம்)

Thursday, June 05, 2008

நபியவர்களின் வாழ்வினிலே! - வினோத பேரம்

நபி (ஸல்) அவர்கள் கம்பீரமாகவும் தனித்தன்மையுடனும் திகழ்ந்தார்கள். நபி (ஸல்) அவர்களை காண்பவர் நண்பரானாலும் விரோதியானாலும் அவரது மனதில் நபி (ஸல்) அவர்கள் பற்றிய உயர்வான எண்ணமும் மதிப்பும் மரியாதையும் தோன்றுவதைத் தவிர்க்க இயலாது. இழி மக்களே நபி (ஸல்) அவர்களிடம் அற்பமாக நடந்துகொள்ளத் துணிவர்.

மேலும், குறைஷியரின் மிக மதிக்கத்தக்க தலைவராக கருதப்பட்ட அபூதாலிபின் பாதுகாப்பிலிருந்த நபி (ஸல்) அவர்களை இழிவுபடுத்துவது குறைஷியர்களுக்கு சிரமமாக இருந்தது. இந்நிலை குறைஷியர்களுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. தங்களுக்கு எவ்விதத் துன்பமும் ஏற்படாமல் இப்பிரச்சனைக்குத் தீர்வு காண விரும்பினர்.

நபி (ஸல்) அவர்களின் காப்பாளரான அபூதாலிபிடம் நுட்பமான முறையிலும் அச்சுறுத்தும் தொனியிலும் பேச்சுவார்த்தை நடத்தி அவரை தங்களது கோரிக்கை களுக்கு இணங்க வைக்க முடிவெடுத்தனர்.

இப்னு இஸ்ஹாக் (ரஹ்) கூறுகிறார்: சில குறைஷித் தலைவர்கள் அபூதாலிபிடம் சென்று ''அபூதாலிபே! நிச்சயமாக உமது சகோதரர் மகன் எங்களது கடவுளர்களை ஏசி, எங்களது மார்க்கத்தையும் குறை கூறுகிறார். எங்களில் உள்ள அறிஞர்களை மூடர்களாக்கி எங்களது மூதாதையர்களை வழிகெட்டவர்களாக்கி விட்டார். நீரும் அவருக்கு எதிரான எங்களது மார்க்கத்தில் இருப்பதால் இவ்வாறான செயல்களிலிருந்து அவரை நீரே தடுத்துவிடும். அல்லது எங்களிடம் ஒப்படைத்துவிடும். அவரை என்ன செய்வதென நாங்கள் முடிவெடுத்துக் கொள்கிறோம்'' என்றனர்.
அபூதாலிப் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார்.

இந்த சந்திப்புக் குறித்து அபூதாலிப் நபி (ஸல்) அவர்களிடம் ஏதும் பேசிக்கொள்ளவில்லை. வழக்கம்போல் நபி (ஸல்) அவர்கள் தங்களது அழைப்புப் பணியைச் செய்தார்கள். இதைக் கண்ட குறைஷியர்கள் கோபமுற்று மறுமுறை அபூதாலிபை சந்திக்க நாடினர். இம்முறை மிக வன்மையாகக் கண்டித்துப் பேச வேண்டுமென முடிவு செய்தனர்.

குறைஷித் தலைவர்கள் அபூதாலிபை சந்தித்து ''அபூதாலிபே! நீர் வயது முதிர்ந்தவர். எங்களது மதிப்பைப் பெற்றவர். நாங்கள் உமது சகோதரர் மகனைத் தடுத்து நிறுத்தக் கூறியும் நீர் அவரைத் தடுக்கவில்லை. அவர் எங்களது மூதாதையர்களைத் திட்டுவதையும் எங்களது அறிஞர்களை மூடர்களாக்குவதையும் எங்களது கடவுளர்களைக் குறை கூறுவதையும் கண்டு நாங்கள் பொறுமை காக்க முடியாது. நீரே அவரை சரிசெய்துவிடும். இல்லையெனில் நமது இரு கூட்டத்தால் ஒரு கூட்டம் அழியும் வரை உம்முடனும் அவருடனும் நாங்கள் போர் செய்வோம்'' என்றனர்.
இந்த எச்சரிக்கையும் அச்சுறுத்தலும் அபூதாலிபுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது.

நபி (ஸல்) அவர்களை அழைத்து வரச்செய்து நடந்ததைக் கூறி ''எனது சகோதரர் மகனே! உமது கூட்டத்தார் என்னிடம் இவ்வாறெல்லாம் கூறிச் சென்றார்கள். எனவே, நீ என்மீது கருணை காட்டு! பலவீனமான என்னை தாங்கவியலா துன்பத்தில் ஆழ்த்திவிடாதே'' என்றார்.

அபூதாலிப் மனம் தளர்ந்து தன்னைக் கைவிட்டு விட்டார் என்று கருதிய நபி (ஸல்) அவர்கள் ''என் பெரியதந்தையே! அல்லாஹ்வின் மீது ஆணையாக! எனது ஏகத்துவ அழைப்புப் பணியை விடுவதற்காக அவர்கள் சூரியனை எனது வலக்கரத்திலும், சந்திரனை எனது இடக்கரத்தில் வைத்தாலும் அல்லாஹ் இந்த மார்க்கத்தை மேலோங்கச் செய்யும்வரை அல்லது நான் அழியும்வரை இதை விடமாட்டேன்'' என்று கூறிவிட்டு கண் கலங்கியவர்களாக அங்கிருந்து வெளியேறினார்கள்.

அபூதாலிப் நபி (ஸல்) அவர்களை அழைத்து ''என் சகோதரர் மகனே! நீ விரும்பியதைச் செய்துகொள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! எந்த நிலையிலும் எவரிடமும் உம்மை ஒப்படைக்க மாட்டேன்'' என்று கூறி சில கவிதைகளையும் பாடினார்.

''அல்லாஹ்வின் மீது சத்தியம்!
அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தாலும்
உன்னை நெருங்க முடியாது.
நான் மண்ணில் தலைவைக்கும் வரை!
உனது விஷயத்தை வெளிப்படையாக சொல்.

உன்மீது குற்றமில்லை.
கண்குளிர்ந்து மகிழ்ச்சி கொள்!...''


நபி (ஸல்) தங்களது ஏகத்துவ அழைப்பை நிறுத்தாமல் தொடர்வதைக் கண்ட குறைஷியர்கள், அபூதாலிப் முஹம்மதை கைவிட மறுத்து நம்மைப் பிரியவும் விரோதித்துக் கொள்ளவும் துணிந்து விட்டார் என்பதை அறிந்து கொண்டனர்.

அவர்கள் வலீதின் மகன் அமாராவை அழைத்துக் கொண்டு அபூதாலிபிடம் வந்தனர். ''அபூதாலிபே! இவ்வாலிபர் குறைஷியரில் சிறப்பாக வளர்க்கப்பட்ட அழகிய வாலிபர். அவரது சகல உரிமைகளும் உமக்குரியது. இவரை உமது மகனாக வைத்துக் கொண்டு, உமது மார்க்கத்திற்கும் உமது மூதாதையர்களின் மார்க்கத்திற்கும் முரண்பட்டு, உமது கூட்டத்தாடையே பிளவை ஏற்படுத்தி, அவர்களின் அறிஞர்களை மூடர்களாக்கிய உமது சகோதரர் மகனை எங்களிடம் ஒப்படைத்துவிடும். ஒருவருக்கு ஒருவர் என சரியாகி விடும். நாங்கள் அவரைக் கொன்று விடுகிறோம்'' என்றனர்.

அவர்களிடம் அபூதாலிப் மிகுந்த கோபத்துடன் ''அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களது பேரம் மிக மோசமானது. உங்கள் பிள்ளையை என்னிடம் ஒப்படைப்பீர்கள். அதை நான் ஊட்டி வளர்க்க வேண்டும்! எனது மகனை உங்களிடம் நான் ஒப்படைப்பேன். நீங்கள் அவரைக் கொலை செய்வீர்கள்! அல்லாஹ்வின் மீதாணையாக! இது ஒருபோதும் நடக்காது'' என்று கூறினார்.

அதற்கு முத்இம் இப்னு அதீ (அப்து மனாஃபின் கொள்ளுப்பேரர்) ''அபூதாலிபே! உமது கூட்டத்தினர் உமக்கு நீதமான தீர்வைக் கூறி நெருக்கடியிலிருந்து உம்மை விடுவிக்க முயன்றனர். ஆனால் நீர் அதில் எதையும் ஒப்புக் கொள்ளத் தயாராக இல்லையே!'' என்றார்.

அதற்கு அபூதாலிப் ''அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் நீதம் காட்டவில்லை. (முத்இமே) நீ என்னைக் கைவிட்டு விட்டு எனக்கு எதிராக இக்கூட்டத்தினரைத் தூண்டிவிடுகிறாய்; அவர்களுக்கு உதவி செய்ய விரும்புகிறாய். நீ விரும்பியதைச் செய்துகொள்'' என்று கோபமாகக் கூறினார்.

அபூதாலிபின் மூலமாக நபி (ஸல்) அவர்களின் அழைப்புப் பணியை முடக்கிவிட வேண்டுமென்ற தங்களது திட்டத்தில் தோல்வியுற்ற குறைஷியர்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து அபூதாலிப் தானாக விலகிக்கொள்ளும் சூழ்நிலையை உருவாக்கத் திட்டமிட்டனர்.

அர் ரஹீக்குல் மக்தூம் என்ற நூலிலிருந்து...