
தமிழின் நவீன இலக்கியவாதிகள் - 'சீரியஸ்' படைப்பாளிகள் என்றெல்லாம் தங்களைச் சொல்லிக் கொள்பவர்கள் மதுவுக்கு வக்காலத்து வாங்குவதையும், போதையில் மூழ்கித் திளைப்பதையும் பார்க்கும்போது மனம் பெரிதும் சங்கடப்படுகிறது.
மதுவை ஆதரிப்பதும், மதுவில் மூழ்குவதும், மதுவைக் கொண்டாடுவதும், அந்த அருவருப்புகளை அப்படியே இதழ்களில் பதிவு செய்வதும்...
படைப்பாளிகளுக்கு சமுதாய உணர்வு தேவையில்லையா?
தமிழின் மிக நவீன கவிஞர்களில் ஒருவரான மனுஷ்ய புத்திரன் சாராயச் சாவுகள் பற்றி 'உயிர்மை' இதழில் ஒரு தலையங்கம் எழுதியிருக்கிறார். இந்தச் சாவுகளைத் தடுக்க அவர் சொல்லும் பரிந்துரைகள் என்ன தெரியுமா?
கள்ளுக்கடைகளை திறக்க வேண்டும் என்கிறார். மது ஓர் உணவுப் பழக்கம் என்றும், சைவ உணவுக்காரர்களுக்கும் அசைவ உணவுக்காரர்களுக்கும் உள்ள வித்தியாசம் போன்றதே குடிப்பவர்களுக்கும் குடிக்காதவர்களுக்கும் இடையிலான வித்தியாசம் என்றும் கூறுகிறார். இன்னும் ஒரு படி மேலே போய், ஏழை மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் தரமான மதுவை குறைந்த விலையில் அரசே வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.
சரி, இன்னொரு 'சீரியஸ்' படைப்பாளியின் விழாக் காட்சியைப் பார்ப்போம்.
திருக்கடையூரில் நடைபெற்ற விக்ரமாதித்யனின் நூல் வெளியீட்டு விழா குறித்து 'தீராநதி' (மே 2008) இதழில் அ.மார்க்ஸ் எழுதியுள்ளார்:
'...நூல் வெளியீட்டு அரங்கு ஏகப்பட்ட கொண்டாட்டங்களுடனும் கும்மாளங்களுடனும் காட்சியளித்தது. கொஞ்சம் கூட சீரியஸ் இல்லாமல் இப்படி எல்லோரும் அரைமயக்கத்தில் இருப்பதை சுந்தர சுகன் மேடையிலிருந்து கண்டித்துக் கொண்டிருந்தார். ... என்னைக் கட்டித் தழுவிய விக்ரமாதித்யன் அவருக்கு யாரோ பரிசளித்திருந்த ஒரு 'மேன்ஷன் ஹவுஸ்' மதுப் புட்டியை பரிசளித்தார். நன்றியுடன் பெற்று பத்திரமாக மூலையில் வைத்தேன். அன்று மகாசிவராத்திரி, பெரிய வெள்ளி முதலான காரணங்களால் 'கடைகள்' கிடையாதே! ஏற்கனவே மதுப் பஞ்சத்தால் பீடிக்கப் பட்டிருந்த நண்பர்கள் ஒரு சில கணங்களில் அந்தப் புட்டியை 'லபக்'கிக் கொண்டனர். '
அடுத்து, சென்னையில் ஒரு தமிழ்நாவலின் (இந்த நாவலாசிரியரும் தமிழின் 'சீரியஸ்' எழுத்தாளர்தான்) ஆங்கில மொழிபெயர்ப்பு வெளியீட்டு விழா..!
அந்த விழாச் செய்திகளை ஒரு 'சீரியஸ்' இதழில் ஒரு 'சீரியஸ்' எழுத்தாளர் இவ்வாறு பதிவு செய்துள்ளார்:
'எந்த அலுப்பூட்டலும் இல்லாமல் சொற்ப நேரத்தில் வெளியீடு முடிந்தபின் கோலாகலங்கள் தொடங்கின. கைகளில் மதுக்கிண்ணங்களுடன்... இரவு ஒன்பது மணிக்கு மேல் மத்திம போதையுடன் இறங்கி வந்த எனக்கு அடுத்த வாரம் எல்.எல்.ஏ பில்டிங்கில் ஓர் இலக்கிய கூட்டம் இருக்கிறதே என்று நினைவு வந்தது. போதை இறங்கிக் கொண்டிருந்தது.'
குடிப்பதும் குடிக்காமல் இருப்பதும் நவீன இலக்கியவாதிகளின் தனிப்பட்ட உரிமை. அதில் நான் தலையிடவில்லை.
ஆனால் தங்களின் கேடுகெட்ட குடிப்பழக்கத்தை கொஞ்சம் கூட சமூகப் பொறுப்பின்றி இப்படி தூக்கிப் பிடிப்பது என்ன நியாயம்?
இவர்கள்தாம் தமிழின் மிக நவீன, 'சீரியஸ்' இலக்கியப் படைப்பாளிகள் என்பதை எண்ணிப் பார்க்கும்போது...
தலையே சுற்றுகிறது..!